இதில் அரசியல் எதுவும் இல்லையே!


இதில் அரசியல் எதுவும் இல்லையே!
x
தினத்தந்தி 13 May 2019 10:00 PM GMT (Updated: 2019-05-13T22:40:12+05:30)

நல்லக்கண்ணுவை யாரும் வற்புறுத்தாமல் அவரே தானாகவே முன்வந்து வீட்டை காலி செய்துவிட்டு, கே.கே.நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டுக்கு சென்றுவிட்டார்.

தமிழக அரசியலில் இப்போது பரபரப்பாக பேசப்படுவது, சென்னை சி.ஐ.டி. காலனியில் வாடகை வீடு ஒதுக்கீடு அடிப்படையில் வசித்து வந்த வீடுகளை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணு காலி செய்ததும், காமராஜர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த கக்கனின் வாரிசுகள் தங்கியிருந்த வீட்டை காலிசெய்ய சொன்னதும்தான். இதை அரசியல் கட்சிகள் அனைத்தும் கையில் எடுத்துக்கொண்டு ஆளுங்கட்சி மீது கடுமையான தாக்குதல் கணைகளை தொடுத்து வருகின்றனர். இந்த விஷயத்தில் நல்லக்கண்ணுவையும், கக்கனின் மகனையும் மட்டும் காலி செய்ய சொன்னதுபோல ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. நல்லக்கண்ணு 94 வயதுடையவர். அரசியலில் நேர்மையும், பொதுவாழ்வில் தூய்மையும் கொண்ட அப்பழுக்கற்ற ஒரு தலைவர். மக்களுக்காகவே வாழ்ந்துவரும் தலைவர் என்ற வகையில் எல்லோராலும் போற்றப்படுபவர்.

அவருக்கு 2007-ம் ஆண்டு தி.முக. ஆட்சியில் சென்னை நந்தனம் சி.ஐ.டி. காலனியில் ஒரு வீடு ஒதுக்கப்பட்டது. இதுபோல, காமராஜர் ஆட்சியில் கக்கன் மிக நேர்மையின் சின்னமாக உள்துறை அமைச்சராக பணியாற்றியவர். பதவி இழந்த நேரத்தில், அவர் வறுமையில் வாடுகிறார் என்ற செய்தியை கேட்டவுடன், எம்.ஜி.ஆர். அவருக்கு இதே இடத்தில் ஒரு வீட்டை ஒதுக்கினார். இப்போது அந்த வீட்டில் கக்கனின் மகனான ஓய்வுபெற்ற ஆலந்தூர் நகரசபை மருத்துவ அதிகாரி குடியிருந்து வருகிறார். இந்த குடியிருப்புகள் 1953-ம் ஆண்டு கட்டப்பட்டது. வீடுகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதால், 2011-ல் சட்டசபையில் வீட்டு வசதித்துறை அமைச்சர் இதிலுள்ள 119 குடியிருப்புகளை இடித்துவிட்டு, புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை செயல்படுத்தப்போகிறோம் என்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து குடியிருப்பில் இருக்கும் அனைவருக்கும் வீடுகளை காலிசெய்ய சொல்லி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து அந்த வீடுகளில் குடியிருந்தவர்கள் ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு என்று வழக்கு தொடர்ந்து பார்த்தார்கள். இந்த வழக்குகள் இறுதியாக சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 96 வீடுகளில் இருந்தவர்கள் வீடுகளை தாங்களாகவே அரசிடம் ஒப்படைத்துவிட்டனர். வீடுகளை இடிக்கும் பணியும் தொடங்கிவிட்டது. எனவே இதில் அரசியல் எதுவுமில்லை. நல்லக்கண்ணுவை யாரும் வற்புறுத்தாமல் அவரே தானாகவே முன்வந்து வீட்டை காலி செய்துவிட்டு, கே.கே.நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டுக்கு சென்றுவிட்டார். நல்லக்கண்ணு குடியிருக்க நாங்கள் வீடு தருகிறோம் என்று பல நல்ல உள்ளம் கொண்டோர் முன்வந்தும், அவர் ஏற்க மறுத்துவிட்டார்.

அரசின் சார்பில் உடனடியாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவரிடம் டெலிபோனில் பேசியிருக்கிறார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அது முடிந்தவுடன், தமிழக அரசு இதுபோல சமூகத்தில் முக்கிய பங்காற்றியவர்களுக்கு மாதவாடகைக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்வது சம்பந்தமாக ஐகோர்ட்டு வழிகாட்டுதலின்படி, புதிய கொள்கை இறுதிசெய்யும் தருவாயில் உள்ளது. அந்த கொள்கை இறுதி செய்யப்பட்டவுடன் நல்லக்கண்ணுக்கும், கக்கன் குடும்பத்தாருக்கும் மற்றும் இதுபோல பொதுவாழ்வில் முக்கிய பங்காற்றியவர்களுக்கும் வீடு ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது என்று அரசு தரப்பிலேயே விரிவாக விளக்கம் தரப்பட்டுள்ளது. அந்தவகையில் அரசின் புதிய கொள்கை வடிவமைக்கும்போது, யார்-யாருக்கு வீடுகள் ஒதுக்கப்படும்?, எவ்வளவு காலத்துக்கு ஒதுக்கப்படும்? என்பதை திட்டவட்டமாக குறிப்பிடப்படவேண்டும்.

Next Story