அவசர உதவிகளுக்கு 112


அவசர உதவிகளுக்கு 112
x
தினத்தந்தி 15 May 2019 11:00 PM GMT (Updated: 15 May 2019 2:08 PM GMT)

2012–ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் நடந்த நிர்பயா கற்பழிப்பும், கொடூர கொலையும் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மக்கள் மனதில் இருந்து மாறாது.

 2013–ம் ஆண்டு முதல் பெண்கள் பாதுகாப்புக்காக பல திட்டங்களை நிறைவேற்றுவதற்காக ஆண்டுக்கு ரூ.1,000 கோடி வீதம் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு அதை நிர்பயா நிதி என்றே அழைக்கப்படுகிறது. இந்த நிதியைக்கொண்டு பெண்களின் பாதுகாப்புக்காக பல்வேறு திட்டங்களை வகுக்க மத்திய அரசாங்க பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டு அமைச்சக செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு பல்வேறு திட்டங்களுக்கு பரிந்துரை செய்துவருகிறது. அந்தவகையில், இப்போது ஒரு அவசரகால மீட்பு உதவித்திட்டம் ஒன்றுக்காக ரூ.321 கோடியே 69 லட்சம் ஒதுக்கப்பட்டு, அதில் ரூ.276 கோடியே 66 லட்சம் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. 

தமிழ்நாட்டில் தற்போது அவசர போலீஸ் உதவிக்கு 100, தீயணைக்கும்படை உதவிக்கு 101, போக்குவரத்து விதிமீறலுக்கு 103, ஆம்புலன்சுக்கு 108, குழந்தைகளுக்கான உதவிக்கு 1098, பெண்களுக்கான உதவிக்கு 181, கடலோர பாதுகாப்பு உதவிக்கு 1093, ரெயில்வே போலீஸ் உதவிக்கு 1512, பள்ளிக்கூட குழந்தைகளுக்கான உதவிக்கு 14417, முதியோர் உதவிக்கு 1253. இதுபோல பல அவசர உதவிகளுக்கு என தனித்தனியாக டெலிபோன் எண்கள் இருக்கின்றன. பொதுவாக அவசரகாலங்களில் ஒவ்வொன்றுக்குமாக இருக்கும் டெலிபோன் எண்கள் உடனடியாக நினைவுக்கு வந்துவிடுவதில்லை. இதற்காகத்தான் அமெரிக்காவில் எல்லா அவசர தேவைகளுக்கும் பொதுவாக 911 என்ற எண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் அதுபோல ஒரே எண்ணாக வைத்துக்கொண்டால் மிகவும் வசதியாக இருக்கும் என்ற கருத்து நீண்டகாலமாக இருந்தது. அதை நிறைவேற்றும் வகையில், இப்போது 112 என்ற எண்ணை எல்லா அவசர உதவிகளுக்குமான பொது எண்ணாக வைத்துக்கொள்ள மத்திய அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.

தமிழ்நாடு உள்பட 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்தத்திட்டத்தை செயல்படுத்த முன்வந்துள்ளன. செல்போன்களில் அவசர உதவிக்கான பட்டனை தொட்டால்போதும் உடனடியாக 112–ஐ டயல் செய்யும் வசதிகளை செய்வதற்கும் வகை இருக்கிறது.  அவசர சேவைக்கு ஸ்மார்ட்போனில் 112–ம் எண்ணை டயல் செய்யலாம். அல்லது ‘பவர்’ பட்டனை தொடர்ந்து அழுத்திக்கொண்டிருந்தாலும் நேரடியாக இந்த அவசரகால மீட்பு மையத்திற்கு அந்த அழைப்பு செல்வதற்கு வழி இருக்கிறது. சாதாரண போன்களை எடுத்துக்கொண்டால், 5 அல்லது 9–ம் எண்ணை தொடர்ந்து அழுத்திக்கொண்டிருந்தால் இந்த அவசர அழைப்பை மேற்கொள்வதற்கு வழி இருக்கிறது. கீபோர்டு லாக்கில் இருந்தாலும் 112 எண்ணை டயல் செய்யமுடியும். தமிழக உள்துறை இந்தத்திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்காக முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில், மத்திய அரசாங்கமும் இந்தத்திட்டத்தில் முழுஅக்கறை காட்டமுடியவில்லை. தமிழக அரசும் இதை நிறைவேற்றுவதற்கான அறிவிப்பை வெளியிடமுடியவில்லை. தேர்தல் முடிந்தவுடன் முதல் நடவடிக்கையாக இதை மத்திய–மாநில அரசுகள் எடுத்து இந்தத்திட்டத்தை அமலுக்கு கொண்டு வரவேண்டும். பெண்கள் பாதுகாப்பிற்காக, குழந்தைகள் பாதுகாப்பிற்காக மட்டுமல்லாமல், எல்லா அவசர அழைப்புகளுக்கும் இந்த பொது எண் நிச்சயம் பேருதவியாக இருக்கும். தமிழ்நாட்டில் இனி எந்த அவசர உதவிகளுக்கும் 112 என்ற எண்ணே இருக்கட்டும்.

Next Story