பிரதமரைப் பார்த்தோம்; கேள்வி கேட்கவில்லை


பிரதமரைப்  பார்த்தோம்; கேள்வி  கேட்கவில்லை
x
தினத்தந்தி 19 May 2019 10:30 PM GMT (Updated: 19 May 2019 12:21 PM GMT)

பொதுவாக பிரதமர் அளிக்கும் நிருபர்கள் பேட்டி என்றால் நாடு முழுவதும் மட்டுமல்ல உலக அளவிலும் உற்று நோக்கப்படும். அதில் தேச அளவிலும், சர்வதேச அளவிலுமான பிரச்சினைகள் அலசி ஆராயப்படும்.

பொதுவாக பிரதமர் அளிக்கும் நிருபர்கள் பேட்டி என்றால் நாடு முழுவதும் மட்டுமல்ல உலக அளவிலும் உற்று நோக்கப்படும். அதில் தேச அளவிலும், சர்வதேச அளவிலுமான பிரச்சினைகள் அலசி ஆராயப்படும். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி 2014–ல் பதவியேற்றநாளில் இருந்து பத்திரிகையாளர் சந்திப்பையே நடத்தியதில்லை. சில குறிப்பிட்ட பத்திரிகைகளை மட்டும் அழைத்து பேட்டி கொடுப்பது வழக்கம். அந்தவகையில் ‘தினத்தந்தி’க்கு இருமுறை பேட்டி கொடுத்து இருக்கிறார். இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் பா.ஜ.க அலுவலகத்தில் அமித்ஷா பேட்டி கொடுக்கிறார் என்று எதிர்பார்த்து சென்ற பத்திரிகையாளர்களுக்கு பிரதமரும் அங்கு இருந்தது இன்ப அதிர்ச்சியை அளித்தது. 

பிரதமரிடம் நிறைய கேள்விகளைக்கேட்டு மிக விரிவான பதிலைப்பெறலாம் என்று ஆவலோடு இருந்த பத்திரிகையாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பேட்டியின் தொடக்கத்தில் மட்டும் சில கருத்துக்களை மோடி சொன்னாரே தவிர, கேள்விகள் எதையும் கேட்க பத்திரிகையாளர்களுக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. ஆட்சியின் சாதனைபற்றியும், அரசியல் ரீதியாகவும் நிறைய கேட்கலாம் என்று எதிர்பார்த்த பத்திரிகையாளர்களுக்கு நினைத்தது நடக்கவில்லை. இந்த பத்திரிகையாளர் சந்திப்பு என்பது பா.ஜ.க தலைவர் அமித்ஷா சந்திக்கும் சந்திப்பாகும். நான் எங்கள் கட்சியின் கட்டுப்பாடான ஒரு வீரன். கட்சி தலைவர்தான் எங்களுக்கு எல்லாமே. எனவே உங்கள் கேள்விகளுக்கு நான் பதில் அளிக்கப்போவதில்லை. அமித்ஷா மட்டுமே பதில் அளிப்பார் என்று கூறிவிட்டார். ஆனால் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் ரத்தின சுருக்கமாக பேசினாலும் ஒருசில கருத்துக்களை முத்தாக தெரிவித்துவிட்டார். பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும். முழு பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்து 5 ஆண்டுகளை நிறைவுசெய்த ஒரு அரசு மீண்டும் முழுபெரும்பான்மையோடு ஆட்சிக்கு வருவது பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் நடக்கப்போகிறது என்று தெரிவித்தார். அவர் தெரிவித்த கருத்தில் அவர் கோடிட்டுக்காட்டியது, இந்த தேர்தலில் மீண்டும் பா.ஜ.க.தான் ஆட்சி அமைக்கும், அதுவும் முழுபெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்பதுதான். இன்னும் ஒருசில கருத்துக்களை மட்டும் பிரதமர் கூறிவிட்டு அதோடு நிறுத்திவிட்டாலும், அதன்பிறகு அமித்ஷா அனைத்து கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் அளித்தார். 

இந்த தேர்தல் என்பது நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்குத்தான். நரேந்திர மோடிதான் பிரதமர் என்று உறுதிபட கூறிவிட்டார். ஆக பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைத்தால் மோடிதான் பிரதமர் என்று பட்டவர்த்தனமாக கூறி மற்ற யூகங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். பிரதமரைப் பார்த்தோம், அவர் சொன்னதைக்கேட்டோம், ஆனால் கேள்வி கேட்கவில்லை என்பதுதான் அங்கு சென்ற பத்திரிகையாளர்களின் கருத்தாக இருக்கிறது. இதேநேரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பத்திரிகையாளர்களை சந்தித்தார். ஆனால் அவர் பத்திரிகையாளர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் சரமாரியாக பதில் அளித்தார். அவர் நேரடியாக உறுதியாக பதில் சொல்ல தவிர்த்தது யார் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும்? என்ற கேள்விக்குத்தான். இந்த நாட்டை யார் வழிநடத்துவார்கள்? என்பதை 23–ந்தேதி மக்கள் முடிவு செய்வார்கள் என்றும், எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து ஆட்சி அமைக்கும் என்று மட்டும் பதில் அளித்தார். மொத்தத்தில் ஒரேநாளில் நடந்த இரு பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் இருவிதமான அனுபவங்கள் பத்திரிகையாளர்களுக்கு கிடைத்தது. 

Next Story