தொடர் கதையா?, விடுகதையா?


தொடர் கதையா?, விடுகதையா?
x
தினத்தந்தி 22 May 2019 4:00 AM IST (Updated: 21 May 2019 6:34 PM IST)
t-max-icont-min-icon

உயிரியல் பாடத்தை முக்கிய பாடமாக எடுத்து படிக்கும் பிளஸ்–2 மாணவர்களின் கனவெல்லாம் மருத்துவ படிப்பில் சேரவேண்டும் என்பதுதான்.

யிரியல் பாடத்தை முக்கிய பாடமாக எடுத்து படிக்கும் பிளஸ்–2 மாணவர்களின் கனவெல்லாம் மருத்துவ படிப்பில் சேரவேண்டும் என்பதுதான். 2006–ம் ஆண்டு வரையில் மருத்துவக்கல்லூரியிலும், பல் மருத்துவக்கல்லூரியிலும் நுழைவுத்தேர்வு மூலமாகத்தான் மாணவர் சேர்க்கை நடந்தது. 2006–ல் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவின் காரணமாக, நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, பிளஸ்–2 தேர்வில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண் அடிப்படையிலேயே இடம் கிடைத்தது. இதனால் ஏழை–எளிய, கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவர்கள் கூட பிளஸ்–2–வில் நன்றாக படித்து மருத்துவ கல்வியில் சேரமுடிந்தது. பின்பு நாடு முழுவதும் ஒரேமாதிரியான நீட் தேர்வு நடத்தி, மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என்ற நடைமுறை அமலுக்கு வந்தது. தமிழ்நாட்டில் நீட் தேர்வு வேண்டாம் என்று பலத்த எதிர்ப்பு அனைத்து தரப்பிலிருந்தும் எதிரொலித்தது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டிலும், தமிழ்நாட்டின் வேண்டுகோள் எடுபடாததால் 2017 முதல் நீட் தேர்வு மூலம் மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த ஆண்டும் நீட் தேர்வு மூலம்தான் நடக்கிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தேர்தல் அறிக்கையில், ‘நீட் தேர்வை உடனடியாக ரத்துசெய்ய தி.மு.க. வலியுறுத்தும்’ என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், ‘தமிழக மாணவர்கள் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ள பாடத்திட்டங்களில் தக்க தகுதியினை பெறும் காலம்வரை நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று அ.தி.மு.க., மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்ளப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், ‘ஒருசில மாநில மாணவர்களிடையே பாகுபாடு ஏற்படுத்துவதாக இருக்கிறது, நீட் நுழைவுத்தேர்வு. மேலும், அந்தந்த மாநில மாணவர்களை அங்கேயே உள்ள மருத்துவக்கல்லூரிகளில் சேர்த்துக்கொள்வதில் மாநில அரசுக்குள்ள உரிமையில் இத்தேர்வு தலையிடுவதாகவும் இருக்கிறது. அதனால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். அந்தந்த மாநிலத்தில் உள்ள மருத்துவக்கல்வியின் தகுதிவாய்ந்த அமைப்பு ஒப்புதலின்படி, நீட் தரத்தில் மாநில அளவிலான தேர்வுகள் நடத்தப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசார கூட்டங்களில் இந்த கருத்துதான் எல்லோராலும் பேசப்பட்டது. தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த ராகுல்காந்தி, தேனி, மதுரை கூட்டங்களில் இதைத்தான் முக்கியமாக பேசினார். ‘தமிழக மக்கள் நீட் தேர்வை வேண்டாம் என்று சொன்னால், நாங்கள் நிச்சயமாக அதை ரத்து செய்துவிடுவோம். நீட் போன்ற பிரச்சினைகளில் மக்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம் என்று தேர்தல் அறிக்கையிலும் அதை குறிப்பிட்டுள்ளோம்’ என்று கூறினார். அதேநாளில் சென்னை வந்த மத்திய மந்திரி பியூஸ்கோயல், ‘பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை தொடர்ந்து நடத்துவோம். நீட் தேர்வை ரத்து செய்யவேண்டியதில்லை. இந்தத்தேர்வு தமிழிலும் நடக்கும். அ.தி.மு.க. அரசாங்கத்தை நாங்கள் இந்த வி‌ஷயத்தில் சமாதானம் பேசி ஏற்க செய்வோம்’ என்று கூறினார். ராகுல்காந்தி, பியூஸ்கோயல் இருவருமே தங்கள் கருத்தை வெளிப்படையாக தெரிவித்துவிட்டார்கள். மாணவர்களிடையே, அவர்கள் பெற்றோர்களிடையே இப்போதுள்ள கேள்வி, அடுத்த ஆண்டு நீட் தேர்வு இருக்குமா?, ரத்து செய்யப்படுமா? என்பதுதான். நீட் தேர்வு தொடர்கதையாக இருக்கப்போகிறதா?, விடுகதையாக முடிந்துவிடப்போகிறதா? என்பது நாளை தேர்தல் முடிவில் தெரிந்துவிடும்.

Next Story