வாட்டி வதைக்கும் வறட்சி


வாட்டி வதைக்கும் வறட்சி
x
தினத்தந்தி 22 May 2019 10:30 PM GMT (Updated: 2019-05-23T02:47:29+05:30)

தமிழ்நாட்டில் தற்போது கடுமையான வறட்சி நிலவுகிறது. மாநிலம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாட்டினால் மக்கள் அல்லல்படுகிறார்கள்.

தினமும் ‘தந்தி’ டி.வி.யைப் பார்த்தால் பல்வேறு இடங்களில் மக்கள் குடிநீர் கிடைக்காமல் காலிக்குடங்களை வைத்துக்கொண்டு சாலையில் மறியல் செய்வதும், ஊருக்கு வெளியே ஒருசில கி.மீட்டர் தூரம் தலையில் குடத்துடன் சென்று சிறிய குட்டையில் தேங்கிக்கிடக்கும் மாசடைந்த நீரை வடிகட்டி எடுப்பதையும் பார்க்கமுடிகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மதுரை விமான நிலையத்தில் பேட்டி அளிக்கும்போது, ‘பருவமழை சரியாக பெய்யாததால் கடுமையான வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது’ என்று வெளிப்படையாகவே கூறிவிட்டார். எல்லா ஆறுகளும், குளங்களும், ஏரிகளும் சுத்தமாக வறண்டு போய்விட்டது. மலைப்பகுதிகளிலும் கடுமையான வறட்சி ஏற்பட்டதால் தினமும் யானைகள் உள்பட வனவிலங்குகள் மலையைவிட்டு கீழே இறங்கி தண்ணீருக்காக ஊருக்குள் நுழைந்து வருகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில், தண்ணீர் பஞ்சத்தைப்போக்க நிலத்தடி நீரைத்தான் நம்பி இருக்க வேண்டியதிருக்கிறது. ஆனால், அடிக்கடி பருவமழை பொய்த்துவிடுவதின் காரணமாக நிலத்தடி நீரை எடுத்து எடுத்து அதுவும் இப்போது அதல பாதாளத்திற்கு சென்று விட்டது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், நீலகிரி, சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகு ஆழத்திற்கு போய்விட்டது. எல்லா இடங்களிலும் உள்ள கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் வற்றி போய்விட்ட நிலையில், மேலும் மேலும் ஆழப்படுத்திக்கொண்டே போய் பலநேரங்களில் நன்னீருக்கு பதிலாக உவர்நீர்தான் கிடைக்கிறது. தொடர்ந்து இரண்டு பருவமழையும் பொய்த்துவிட்டதால், மக்கள் படும்பாடு சொல்லில் அடங்காது.

தற்போது குடிநீர் சப்ளை செய்வதற்காக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், எதிர்காலத்தை கருத்தில்கொண்டு உடனடியாக போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக அடுத்து மழை வரும்போது, செறிவூட்டுவதற்காக இப்போதே எல்லா நீர்நிலைகள், வீடுகள், கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தவேண்டும். அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்படவேண்டும்.

ஐக்கிய அரபு நாடுகளில் தண்ணீர் வளம் இல்லை. ஆனால் தண்ணீர் தட்டுப்பாடே கிடையாது. சாலைகளில் நடுவிலும், பூங்காக்களிலும் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. காரணம் கடல்நீரை நன்னீராக்கும் நிலையங்கள் மூலமாக தங்கு தடையின்றி தண்ணீர் சப்ளை செய்யப்படுவதுதான். இந்த நிலையங்களின் எண்ணிக்கைகளை அடுத்த ஆண்டுக்குள் 3,688 ஆக உயர்த்தப் போகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் 2 நிலையங்கள் மட்டும் சென்னையை அடுத்த நெம்மேலியிலும், மீஞ்சூரிலும் இருக்கிறது. 1,076 கி.மீட்டர் நீளம் கடற்கரை உள்ள தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் இத்தகைய நிலையங்களை அமைத்தால் குடிநீர் பற்றாக்குறையே ஏற்படாது. வாய்ப்பு இருக்கிறது. அதை பயன்படுத்த வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.

அடுத்த ஆண்டுகளில் வரும் மழைகாலங்களில் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை ஒரு சொட்டுகூட வீணாகாத அளவில் சேமித்து வைப்பதற்கான குளங்கள், குட்டைகளை இந்த வறட்சி காலங்களில் புதிதாக உருவாக்க வேண்டும். மொத்தத்தில், இந்த கடும் வறட்சியையும் சமாளிக்க வேண்டும். எதிர்காலத்தில் இப்படியொரு நிலைமை ஏற்படாத சூழ்நிலைகளையும் உருவாக்க வேண்டும்.

Next Story