சொன்னதை மறக்கவில்லை


சொன்னதை மறக்கவில்லை
x
தினத்தந்தி 27 May 2019 10:00 PM GMT (Updated: 2019-05-27T18:49:59+05:30)

தாமிரபரணி ஆறு ஒன்றுதான் தமிழ்நாட்டில் உற்பத்தியாகி தமிழ்நாட்டிலேயே கடலில் கலக்கிறது. மற்ற எல்லா நதிகளும் அண்டை மாநிலங்களிலிருந்து உற்பத்தியாகித்தான் தமிழ்நாட்டில் ஓடுகிறது. இப்படி எல்லா நதிகளும் அண்டை மாநிலத்திலிருந்து வருவதால், அவ்வப்போது நீர்தாவா ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து தண்ணீர் பற்றாக்குறை இருக்கிறது. இதை போக்க ஒரேவழி நதிநீர் இணைப்புதான். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, நதிநீர் இணைப்பை செயல்படுத்த தற்போதைய மத்திய மந்திரி சுரேஷ்பிரபு தலைமையில் ஒரு சிறப்பு உயர்மட்டக்குழுவை அமைத்தார். தொடர்ந்து மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் நதிநீர் இணைப்பு திட்டத்தை வலியுறுத்தினார். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், பிரதமர் நரேந்திர மோடியிடம், கோதாவரி–காவிரி இணைப்புத்திட்டம் குறித்து கோரிக்கை விடுத்தார். 

இந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமராவதியில் நடந்த பா.ஜ.க. தொண்டர்கள் கூட்டத்தில் மத்திய நீர்வள மந்திரி நிதின் கட்காரி பேசும்போது, ஆண்டுதோறும் கோதாவரி ஆற்றில் இருந்து 1,100 டி.எம்.சி. தண்ணீர் வங்காள விரிகுடா கடலில் ஓடி கலந்துகொண்டிருக்கிறது. அதேநேரத்தில் தமிழ்நாடு, கர்நாடக மாநிலத்துக்கு இடையே தண்ணீர் தாவா இருக்கிறது. இந்த நிலையை தவிர்க்க, 4 தென்மாநிலங்களும், அதாவது தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்கள் பயனடையும் வகையில் ரூ.60 ஆயிரம் கோடி செலவில் ஒருதிட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்தத்திட்டத்தின்கீழ் கோதாவரி–கிருஷ்ணா–பெண்ணாறு–காவிரி ஆகிய ஆறுகளை இணைக்கும் வகையில் திட்ட அறிக்கை தயாராக இருக்கிறது. விரைவில் உலக வங்கி அல்லது ஆசிய மேம்பாட்டு வங்கி உதவியோடு இந்தத்திட்டம் நிறைவேற்றப்படும் என்று பேசியிருந்தார். அதன்பிறகு தேர்தல் வந்தது. இப்போது முன்பைவிட அதிக பலத்துடன் பா.ஜ.க. வெற்றிபெற்றுள்ளது. நதிநீர் இணைப்புத்திட்டம் என்ன ஆகுமோ? என்று எல்லோரும் கவலைப்பட்டுக்கொண்டிருந்தனர். 

இந்த நிலையில், தேர்தலில் வெற்றிபெற்று 2 நாட்கள் ஆகும்முன்பே நிதின் கட்காரி தன் டுவிட்டர் பக்கத்தில், கோதாவரி–கிருஷ்ணா நதிகளை இணைத்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொண்டுவருவதுதான் எனது முதல் வேலை’ என்று பதிவிட்டதை எல்லோரும் வரவேற்கிறார்கள். அவருக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி அனைவரிடம் இருந்தும் பாராட்டு, நன்றி மழை குவிந்து வருகிறது. தான் சொன்னதை நிதின் கட்காரி மறக்கவில்லை என்பது தமிழக மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. 30–ந்தேதி புதிய அமைச்சரவை உருவாகும்போது, மீண்டும் நீர்வள ஆதாரம் நிதின் கட்காரிக்கு கிடைத்தால் நிச்சயமாக இதற்கான முயற்சிகளை தொடங்குவார். ஒருவேளை வேறொருவருக்கு இந்த பொறுப்பை கொடுத்தாலும், ஏற்கனவே நிதின் கட்காரி கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்ற அவரை வலியுறுத்தவேண்டும். இந்தத்திட்டம் உடனடியாக தொடங்கினால்தான் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றமுடியும். எனவே, தற்போது 6 முறை தஞ்சாவூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தி.மு.க. உறுப்பினர் பழனிமாணிக்கம் தன் முதல் கடமையாக தமிழ்நாட்டில் உள்ள 39 எம்.பி.க்களையும் சேர்த்துக்கொண்டு இந்த முயற்சியை நாடாளுமன்றத்தில் தொடங்கவேண்டும். தமிழக அரசும் தொடர்ந்து இதை வலியுறுத்தவேண்டும். ‘புதிய இந்தியாவை உருவாக்க, புதிய சக்தியுடன், புதிய பயணத்தை தொடங்குவோம்’ என்று கூறிய பிரதமர் நரேந்திரமோடியிடம், ‘உங்கள் புதிய பயணத்தில் உடனடியாக இதை முதல் முயற்சியாக எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று எல்லோரும் கைகோர்த்து வலியுறுத்தவேண்டும்.

Next Story