முக்கிய மந்திரிகளாக 2 தமிழர்கள்


முக்கிய மந்திரிகளாக 2 தமிழர்கள்
x
தினத்தந்தி 31 May 2019 10:00 PM GMT (Updated: 31 May 2019 3:23 PM GMT)

நேற்று முன்தினம் இரவில் ஜனாதிபதி மாளிகையில் பா.ஜ.க. மந்திரிசபை பதவி ஏற்புவிழா நடந்தது.

2–வது முறையாக பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திரமோடி, யார்–யாருக்கு? அமைச்சரவையில் இடம் கொடுக்கப்போகிறார் என்பது ரகசியம், பரமரகசியமாகவே இருந்தது. கடந்தமுறை ஆட்சி செய்யும்போது இறுதியில் 71 பேர் கொண்ட அமைச்சரவையை அவர் நடத்தியதற்கு மாறாக, இந்தமுறை பிரதமரையும் சேர்த்து 58 பேர் பதவி ஏற்றுள்ளனர். 24 கேபினட் மந்திரிகள், 33 ராஜாங்க மந்திரிகளோடு பதவி ஏற்பு விழா இனிதே முடிந்தது. பழைய மந்திரி சபையில் இருந்த 28 மந்திரிகளுக்கு இந்தமுறை இடம் கிடைக்கவில்லை. 23 பேர் புதிதாக மந்திரி பதவியை ஏற்றனர்.

புதிதாக அமைந்துள்ள மந்திரி சபையில் அமித்ஷா இடம்பெறுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்ததுபோல உள்துறை மந்திரியாகிவிட்டார். நேற்று முன்தினம் பதவி ஏற்பு விழாவுக்கு சைக்கிளில் வந்த மன்சுக் மாண்டவியா தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரியாக பதவி ஏற்றுள்ளார். இதுபோல, ஒடிசா மாநிலத்தில் குடிசையில் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து சைக்கிளிலேயே தொகுதி முழுவதும் சுற்றித்திரியும் பிரதாப் சந்திர சாரங்கி என்ற சாதாரண தொண்டருக்கு மந்திரிசபையில் இடம்கொடுத்திருப்பது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோல, பலர் புதிதாக மந்திரிசபையில் இடம்பெற்றிருந்தாலும், வெளியுறவுத்துறை செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற எஸ்.ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி ஏற்றது எல்லோருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. 2018–ல் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற அவர், அரசியலில் தீவிரம் காட்டவில்லை. பா.ஜ.க.விலும் சேரவில்லை. அவருடைய திறமைதான் அவரை இழுத்து வந்திருக்கிறது. மந்திரிசபையில் இடம்பெறாத மேனகாகாந்தி 8–வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூத்த உறுப்பினராக உள்ளவர் என்பதால், தற்காலிக சபாநாயகர் பொறுப்பை ஏற்பார். அவர் முன்னிலையில்தான் சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்பட அனைத்து உறுப்பினர்களும் நின்று பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளும் சூழ்நிலை உருவாகும்.

9 மாநிலங்களுக்கு மந்திரிசபையில் பிரதிநிதித்துவம் இல்லாவிட்டாலும், தமிழ்நாட்டை பொறுத்தளவில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக எல்லா மந்திரி சபைகளிலும் பிரதிநிதித்துவம் பெற்றிருந்திருக்கிறது. அந்தவகையில், தமிழ்நாட்டில் இருந்து மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள யாரும் இந்த மந்திரிசபையில் இடம்பெறவில்லை என்ற குறை கூறப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் இப்போது அமைக்கப்பட்டுள்ள மந்திரி சபையில் முக்கிய இலாகாக்களில் இடம்பெற்றிருப்பது தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. கடந்தமுறை மோடி மந்திரி சபையில் ராணுவ மந்திரியாக மிக திறம்பட பணியாற்றி தமிழ்நாட்டுக்கு பாதுகாப்பு தொழில் வழித்தடம் கொண்டுவர முழுகாரணமாக இருந்த நிர்மலா சீதாராமன், இப்போது மந்திரி சபையில் 5–வது இடத்தில் இருப்பது மட்டுமல்லாமல், நிதி மந்திரியாகியிருப்பது தமிழர்களுக்கெல்லாம் பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. ஏற்கனவே ராணுவ மந்திரியாக இந்திராகாந்திக்கு பிறகு, 2–வது ராணுவ பெண் மந்திரியாக பதவி வகித்த நிர்மலா சீதாராமன், இப்போது நிதி மந்திரியாகவும், இந்திராகாந்திக்கு பிறகு 2–வது பெண் மந்திரியாக பதவி ஏற்று முத்திரை பதித்துள்ளார். இதுபோல, திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட அரசியல் பின்னணி இல்லாத ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை மந்திரியாகியிருப்பது தமிழர்களுக்கு பெருமை. மொத்தத்தில், மோடி மந்திரி சபையை இரு தமிழர்களும் அலங்கரித்து, தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கப்போகிறார்கள்.

Next Story