மீண்டும் தலையெடுத்தது நிபா வைரஸ்


மீண்டும் தலையெடுத்தது நிபா வைரஸ்
x
தினத்தந்தி 5 Jun 2019 11:00 PM GMT (Updated: 2019-06-05T21:02:45+05:30)

கடந்த ஆண்டு மே மாதம் கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் 14 பேரையும், அதன் அருகிலுள்ள மலப்புரம் மாவட்டத்தில் 3 பேரையும் பலி வாங்கியது நிபா வைரஸ் காய்ச்சல்.

இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு பரம்பரா தாலுகா மருத்துவமனையில் சிகிச்சை அளித்த லினி என்ற 31 வயது நர்சு உயிர் இழந்தது உலக சுகாதார நிறுவனத்தையே அஞ்சலி செலுத்த வைத்தது. சரியாக ஒரு ஆண்டு கடந்தநிலையில், இப்போது மீண்டும் நிபா வைரஸ் காய்ச்சல் கேரளாவில் தலையெடுத்துள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள தொடுபுழாவில் படிக்கும் 21 வயதுள்ள கல்லூரி மாணவர் ஒருவர் கொச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய ரத்தம் பரிசோதனைக்காக புனேயில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டபோது அவர் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை அளித்த 3 நர்சுகள் மற்றும் அவருடன் படித்த கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறியோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாணவரின் குடும்ப உறுப்பினர் உள்பட அவரோடு தொடர்பில் இருந்த 311 பேர், 21 நாட்களுக்கு தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நோய் வவ்வால்கள் கடித்த பழங்கள் மற்றும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட வவ்வால்களின் சிறுநீர் மற்றும் எச்சத்தால் பரவுகிறது என்றாலும், இது ஒரு கடுமையான தொற்றுநோய் என்பதால்தான் இந்த வைரஸ் காய்ச்சல் மனிதர்களில் இருந்து வேகமாக பரவுகிறது. இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது மலேசியாவில் உள்ள சுங்காய் நிபா என்ற கிராமத்தில் இருந்துதான். அதனால்தான் இந்த நோய்க்கு நிபா வைரஸ் என்று பெயரிடப்பட்டது. இதை குணமாக்கும் மருந்தோ, தடுப்பு மருந்தோ இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இந்த கல்லூரி மாணவருக்கு மட்டும்தான் நிபா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? அல்லது இந்த நோயின் அறிகுறியான காய்ச்சல், தலைவலி, தசைப்பிடிப்பு, வாந்தி, தொண்டைவலி, தலைசுற்றல், மயக்கநிலை, மறதி, மூச்சு பிரச்சினைகள் போன்ற பல அறிகுறிகள் உள்ளவர்களுக்கும் இந்த நோய் தாக்குதல் இருக்கிறதா? என்பதை கேரளாவில் மட்டுமல்ல, அண்டை மாநிலமான தமிழ்நாட்டிலும் தீவிரமாக பரிசீலனை செய்யவேண்டும். கடந்தமுறை தமிழக சுகாதாரத்துறை எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைபோல, இந்த முறையும் தமிழகத்தில் அனைத்து ரெயில்வே நிலையங்கள், பஸ் நிலையங்கள், விமான நிலையம் ஆகியவற்றில் மருத்துவ முகாம்களை அமைத்து, கேரளாவில் இருந்துவரும் பயணிகளில் யாராவது இத்தகைய அறிகுறிகளோடு வருகிறார்களா? என்பதை பரிசோதனை செய்யவேண்டும். 

கேரளாவுக்கு அண்டை மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி போன்ற மாவட்டங்களில் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக மக்களிடம் இந்த நோய் குறித்த விழிப்புணர்வை பெரிய அளவில் முன்னெடுத்து செல்ல வேண்டும். உலக சுகாதார நிறுவனம் தொடங்கி, இந்தியாவில் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் பல்வேறு மருத்துவக்கல்லூரிகளில் நிபா வைரஸ் தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உடனடியாக இதற்குரிய மருந்து, தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பதற்கான தீவிர முயற்சிகளை மருத்துவ சமுதாயம் மேற்கொள்ள வேண்டும்.

Next Story