சிறு கடைகளுக்கு இதில் பலன் இல்லை


சிறு கடைகளுக்கு இதில் பலன் இல்லை
x
தினத்தந்தி 7 Jun 2019 10:00 PM GMT (Updated: 2019-06-07T22:55:41+05:30)

தமிழ்நாட்டில் சிறுசிறு கடைகள் போலீஸ் சட்டத்தின்கீழ் இரவு 11 மணிக்கு அடைத்து விட வேண்டிய கட்டாயம் உள்ளது.

தமிழ்நாட்டில் மதுரை நகரை ‘தூங்காநகரம்’ என்று அழைப்பது உண்டு.  ஏனெனில், இரவில் எந்த நேரத்திலும் சுடச்சுட சாப்பிடுவதற்கு எல்லா உணவு பண்டங்களும் கிடைக்கும். கடைகள் திறந்து இருப்பதால் நகரமே ஜெ ஜெ என்று இருக்கும். அதுபோல, தமிழ்நாடு முழுவதுமே தூங்கா மாநிலமாக இருக்க வேண்டும், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை அரசுக்கு நீண்ட நெடுநாட்களாகவே விடப் பட்டு இருந்தது. இந்தநிலையில், கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசாங்கம் வெளியிட்ட மாதிரி மசோதாவை அடிப்படையாக வைத்து, தமிழக அரசு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை முதன்மை செயலாளர்  சுனில்பாலிவால் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின்படி, ‘தமிழ்நாட்டில் 10 அல்லது 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள், நிறுவனங்கள் 24 மணிநேரமும் திறந்து இருக்கலாம்’ என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவில் இரவு நேரம் பணியாற்றும் ஊழியர்களுக்கு என்னென்ன வசதிகள் வழங்கப்படவேண்டும் என்பது விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஊழியருக்கும் சுழற்சிமுறையில் வாரத்தில் ஒருநாள் விடுமுறை வழங்கவேண்டும். அவர்கள் சம்பளமும் சரி, கூடுதல்நேரம் பணியாற்று  வதற்கான ஊதியமும்சரி, அவர்களது வங்கி சேமிப்பு கணக்கில்தான் செலுத்த வேண்டும். பெண் பணியாளர்களை இரவில் 8 மணிக்கு மேல் பணியமர்த்த வேண்டும் என்றால் அவர்களிடம் ஒப்புதல் கடிதம் பெற்ற பிறகே காலை 6 மணி வரை பணியாற்ற அனுமதிக்கலாம். அவர்களின் கண்ணியத்திற்கும், கவுரவத்திற்கும், பாதுகாப்பிற்கும் முழுமையான அளவில் பாதுகாப்பு வழங்க வேண்டும். பெண்கள் பணியாற்றும் நிறுவனங் களில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக புகார் குழு அமைக்க வேண்டும் என்பது போன்ற பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதையெல்லாம் வரவேற்கத் தக்கது. சம்பளத்தை வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை இருப்பதால் சட்டப்படி அவர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை யாரும் இனி குறைத்து கொடுக்க முடியாது.

24 மணிநேரமும் இயங்கலாம் என்பது பெரிய வணிக நிறுவனங்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும் மிகவும்  பயனளிக்கக் கூடியது என்பது மட்டுமல்லாமல், வேலைவாய்ப்புகள் பெருகும். வர்த்தகம் தழைக்கும். இதன்மூலம் பொருளாதாரம் உயர்வதற்கும் வழிவகுக்கும். ஆங்காங்கு தொழில் நிறுவனங்கள், பெரிய வர்த்தக நிறுவனங்கள் திறந்து இருப்பதன் மூலம் ஆட்கள் நடமாட்டம் எப்போதும் இருக்கும் என்ற வகையில் திருட்டு, வழிப்பறி போன்ற சமூகவிரோத செயல்கள் நடப்பதற்கான வாய்ப்பும் குறைவாக இருக்கும். 24 மணி நேரமும் திறந்து இருக்கலாம் என்றுதான் கூறப்பட்டிருக் கிறதே தவிர, கண்டிப்பாக திறந்து இருக்க வேண்டும் என்று சட்டத்தில் இல்லை. அந்தந்த நிறுவனங்களுக்கு தேவைப்பட்ட காலம்வரை திறந்து இருக்கலாம். இதில் ஒருகுறை  என்னவென்றால், 10-க்கும் மேற்பட்டவர்களை பணியில் வைத்திருக்கும் பெரிய கடைகள், நிறுவனங்களுக்குத்தான் இது பொருந்துமே தவிர, தனியாகவோ, ஒருவர் இருவரை வைத்து இயங்கிக்கொண்டும் சாதாரண டீக்கடைகள்,  பெட்டிக்கடைகள், மளிகை கடைகள், காய்கறி கடைகள், ஜெராக்ஸ் கடைகள் போன்ற சிறுசிறு கடைகள் இந்த சட்டத்தின்கீழ் திறந்து வைக்க முடியாது. அந்த கடைகள் எல்லாம் போலீஸ் சட்டத்தின்கீழ் இரவு 11 மணிக்கு அடைத்து விட வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, தமிழக அரசு இந்த சிறிய கடைகள்,  நிறுவனங்களுக்கும் பலன் அளிக்கும்வகையில், தனியாக ஒரு சட்டம் கொண்டு வந்து எல்லா கடைகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் பயன்படும் அளவில் வழிகாட்ட வேண்டும் என்பதுதான் வியாபாரிகளின் பொதுவான கருத்தாக இருக்கிறது.

Next Story