இளைஞர்களை கவர்ந்த நரேந்திர மோடி


இளைஞர்களை  கவர்ந்த நரேந்திர  மோடி
x
தினத்தந்தி 9 Jun 2019 10:30 PM GMT (Updated: 9 Jun 2019 12:03 PM GMT)

எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது. சுவாமி விவேகானந்தர் கூட, ‘என்னிடம் துடிப்புள்ள 100 இளைஞர்களை தாருங்கள், இந்தியாவை மாற்றுகிறேன்.

திர்கால இந்தியா இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது. சுவாமி விவேகானந்தர் கூட, ‘என்னிடம் துடிப்புள்ள 100 இளைஞர்களை தாருங்கள், இந்தியாவை மாற்றுகிறேன். எனது நம்பிக்கை இளைய சமுதாயத்திடம், நவீன சமுதாயத்திடம்தான் இருக்கிறது. அவர்களில் இருந்துதான் என் தொண்டர்கள் வருவார்கள். சிங்கங்களைபோல எல்லா பிரச்சினைகளையும் அவர்கள் தீர்ப்பார்கள்’ என்று பறைசாற்றினார். அதே வழியைத்தான் பிரதமர் நரேந்திர மோடியும் பின்பற்றுகிறார். 

இந்த ஆண்டு 18 வயதை கடந்து முதல் முறையாக ஓட்டுப்போடும் இளைஞர்களின் எண்ணிக்கை 1 கோடியே 59 லட்சமாக இருந்தது. கடந்த 2014–ம் ஆண்டு தேர்தலில் முதல் முறையாக ஓட்டுப்போடும் வாக்காளர்களின் எண்ணிக்கை 2.3 கோடியாக இருந்தது. இந்த தேர்தலில் 61.30 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர். இதில் 29.24 கோடி பேர் பெண் வாக்காளர்கள்.  பா.ஜ.க.  22 கோடியே 90 லட்சத்து 78 ஆயிரத்து 261 வாக்குகளை பெற்று, இதுவரையில் நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் எந்தவொரு கட்சியும் இந்தளவுக்கு வாக்குகளை பெற்றதில்லை என்ற சாதனையை பெற்றுள்ளது. கடந்த 2014–ம் ஆண்டு பெற்ற வாக்குகளைவிட, பா.ஜ.க. 5 கோடியே 74 லட்சத்து 18 ஆயிரத்து 31 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது.      பா.ஜ.க. பெற்ற பெரிய வெற்றிக்கு காரணம், முதல் முறையாக வாக்களித்த இளைஞர்களில் பெரும்பான்மையினர் அளித்த வாக்குகள், 2–வது முறையாக வாக்களித்த இளைஞர்கள், மூன்றாவது முறையாக வாக்களித்த வாக்காளர்கள் என்று இளைஞர்கள் பட்டாளம் வாரிவழங்கிய வாக்குகள்தான். 

ஒரு ஆய்வில், 18 வயது முதல் 22 வயதுள்ளவர்களில் 41 சதவீதம் பேரும், 23 வயது முதல் 27 வயதுள்ளவர்கள் வரை உள்ள வாக்காளர்களில் 40 சதவீதம் பேரும், 28 வயது முதல் 35 வயதுள்ள வாக்காளர்களில் 39 சதவீதம் பேரும், பா.ஜ.க.வுக்குத்தான் வாக்களித்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் பா.ஜ.க.வுக்கு வாக்களித்தார்கள் என்றால், அவர்கள் பா.ஜ.க. என்ற கட்சிக்காகவோ, போட்டியிடும் வேட்பாளர்களுக்காகவோ தங்கள் ஆதரவை தெரிவிக்கவில்லை. அவர்கள் கண்முன் இருந்தது நரேந்திர மோடிதான். நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்ற ஒரே இலக்கை நோக்கித்தான் தங்கள் வாக்குகளை வாரிவழங்கியிருக்கிறார்கள். தேர்தல் பிரசாரத்தில்கூட ‘மோடியோடு இளைஞர்கள்’ என்ற தலைப்பில்தான் இணையதள பிரசாரம் நடந்தது.     பா.ஜ.க.வின் இளைஞர் அணி ‘மோடி யுவசக்தி’ என்ற பெயரில், கல்லூரி மாணவர்களிடையே மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு செயல்படுத்திய திட்டங்களையெல்லாம் விளம்பரப்படுத்தியது. 

இளைஞர்களை தன்வசப்படுத்த 2017–ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் உரையாற்றும்போதே மோடி, 2018–ம் ஆண்டு இந்த நூற்றாண்டு தொடக்கத்தில் பிறந்த அனைவருக்கும் மிக முக்கியமான ஆண்டாகும். அவர்கள் 18 வயதை அடைவார்கள். அவர்கள் எல்லாம் வாக்காளர்கள் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்க்கவேண்டும். 21–ம் நூற்றாண்டில் நாட்டின் தலைவிதியை உருவாக்குபவர்களாக அவர்கள் விளங்குவார்கள். இந்த இளைஞர்களை நான் வரவேற்கிறேன், மதிக்கிறேன், அவர்களுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன் என்று பேசியது, இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. ஆக, மொத்தத்தில், இளைய சமுதாயத்தினரை கவர்ந்து, அவர்களின் வாக்குகளை பெருமளவில் பெற்றுள்ள மோடி, நிச்சயமாக இளைஞர்களின் எதிர்காலம் நல்வாழ்வாக திகழ அனைத்து திட்டங்களையும் தீட்டுவார் என்று இளைய சமுதாயம் எதிர்பார்க்கிறது.

Next Story