சேமிப்பு டெபாசிட்டுகளின் வட்டியை குறைக்கக்கூடாது


சேமிப்பு டெபாசிட்டுகளின் வட்டியை குறைக்கக்கூடாது
x
தினத்தந்தி 10 Jun 2019 11:00 PM GMT (Updated: 2019-06-10T22:39:45+05:30)

தமிழக அரசில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி, மத்தியஅரசு பணிக்குச்சென்று ஓய்வுபெற்றவர் சக்தி காந்த தாஸ். ஓய்வுபெற்ற உடனே அவர் ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டார்.

கடந்த டிசம்பர் மாதம் இவர் அந்த புதிய பொறுப்பை ஏற்றார். பொதுவாக ரிசர்வ் வங்கி கவர்னராக பொருளாதார நிபுணர்களைத்தான் நியமிப்பது வழக்கம். அரசில் செயலாளர்களாக பணியாற்றியவர்களை ரிசர்வ் வங்கி கவர்னராக நியமனம் செய்வது மிகவும் அபூர்வம். ஒய்.வி.ரெட்டி, சுப்பாராவ் போன்றவர்கள்தான் அரசின் செயலாளர்களாக இருந்து, ரிசர்வ் வங்கி கவர்னராக பணியாற்றியவர்கள். பொதுவாக ரிசர்வ் வங்கி 2 மாதத்திற்கு ஒருமுறை நிதிக்கொள்கை, கமிட்டி கூட்டத்தை நடத்தும்.

சக்தி காந்த தாஸ் பதவி ஏற்றபிறகு கடந்த பிப்ரவரி மாதம் ஒருமுறையும், ஏப்ரல் மாதம் ஒருமுறையும், தற்போதும் என்று 3 கூட்டங்களை நடத்தியுள்ளார். ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி ரெப்ரோ ரேட் என்றும், அதேபோல வர்த்தக வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி ரிவர்ஸ் ரெப்போ ரேட் என்றும் அழைக்கப்படுகிறது. சக்தி காந்த தாஸ் பதவி ஏற்றதிலிருந்து ஒவ்வொரு முறையும் 0.25 சதவீதம் வட்டியை குறைத்து வந்தார். தற்போதும் குறைத்ததால் ரெப்போ ரேட் 5.75 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ ரேட் 5.50 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் இல்லாதஅளவு இந்த வட்டிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வீட்டுக்கடன், வாகன கடன், தொழில் முனைவோர், சிறுதொழில் நடத்துவோர், வர்த்தகங்கள் போன்ற அனைத்து பிரிவினருக்கும் வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் கொடுக்க முடியும், இதன்மூலம் நாட்டில் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. முதலீடுகளும், தனிநபர்களின் வாங்கும் சக்தியிலும் பெரிதும் சரிவு ஏற்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கியே தெரிவித்துள்ளது. மோட்டார் வாகன விற்பனை, ரியல் எஸ்டேட் தொழில் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே இதற்கு அடையாளம். 5 ஆண்டுகளில் இல்லாத அளவு பொருளாதாரம் சரிவு ஏற்பட்டுள்ளநிலையில், இந்த வட்டிக்குறைப்பு நிச்சயமாக உதவும்.

இதுபோல, வங்கிகளில் இணையதளம் வழியாக மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கான கட்டணங்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருப்பதன் மூலம், பிரதமர் நரேந்திரமோடி விரும்பும் டிஜிட்டல் பணபரிவர்த்தனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், வங்கிகள், தபால் நிலையங்களில் பொதுமக்கள் தங்கள் சேமிப்புக்காக செலுத்தி இருக்கும் நிரந்தர டெபாசிட் போன்ற பல்வேறு வகையான டெபாசிட்டுகளுக்கும் வட்டியை குறைக்க வாய்ப்பு இருப்பது, சக்தி காந்த தாஸ் பத்திரிகையாளர்களிடம் இதுதொடர்பான கேள்விக்கு உறுதியான பதில் அளிக்காததன் மூலம் தெளிவாகிறது. மக்கள் இப்போதுதான் தங்கள் சேமிப்பை அங்கீகாரம் இல்லாத நிதி நிறுவனங்களை தவிர்த்து, வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் முதலீடு செய்ய தொடங்கியுள்ளநிலையில், இந்த வட்டிக்குறைப்பு முயற்சியை கைவிடவேண்டும் என்பது பொதுவான கோரிக்கையாக இருக்கிறது. மேலும் ரிசர்வ் வங்கி அளிக்கும் வட்டிக்குறைப்பு பலனை வங்கிகள், வாடிக்கையாளர்களின் கடனுக்காக அளிப்பதில்லை என்றொரு குறை கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி, ஏப்ரல் மாதங்களில் 0.50 சதவீதம் வட்டி குறைக்கப்பட்டாலும். 0.21 சதவீதம்தான் வாடிக்கையாளர்களுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது. இப்போது குறைக்கப்பட்டுள்ள வட்டி விகிதத்தையும் சேர்த்து இன்னும் 0.54 சதவீதம் குறைக்கவேண்டும் என்பதைத்தான் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

Next Story