இதற்கெல்லாம் வரியா?


இதற்கெல்லாம் வரியா?
x
தினத்தந்தி 11 Jun 2019 10:30 PM GMT (Updated: 11 Jun 2019 1:27 PM GMT)

மத்திய–மாநில அரசுகள், பொதுமக்கள் நலனுக்காக நிறைய செலவு மேற்கொள்ள வேண்டியதிருக்கிறது. அதற்கு வருவாய் பெருகவேண்டும். வருவாய் பெருகுவதற்கு வரிவசூல் மிகவும் இன்றியமையாததாகும்.

த்திய–மாநில அரசுகள், பொதுமக்கள் நலனுக்காக நிறைய செலவு மேற்கொள்ள வேண்டியதிருக்கிறது. அதற்கு வருவாய் பெருகவேண்டும். வருவாய் பெருகுவதற்கு வரிவசூல் மிகவும் இன்றியமையாததாகும். ராஜாஜி அடிக்கடி கூறியதுபோல, வரிவசூல் என்பது மயில் இறகால் வருடுவதுபோல, வரிகட்டுபவர்களுக்கு வலிக்காமல் வரி வசூலிக்கவேண்டும். இந்த நிலையில், மத்திய அரசாங்கத்தின் வருமானம் இப்போது பெருமளவில் குறைந்து வருகிறது. நாட்டில் தொழில்கள் வளர்ந்து, உற்பத்தி பெருகினால்தான் நிச்சயமாக அரசுக்கு வரிவருவாய் கிடைக்கும். ஆனால், இப்போது தொழிற்சாலைகளில் குறிப்பாக, மோட்டார் வாகன தொழிலிலும், ரியல் எஸ்டேட் தொழிலிலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் குறைந்துகொண்டே இருக்கிறது. எடுத்துக்காட்டாக, மோட்டார் வாகன உற்பத்தி தொழிலில் மாருதி கார் நிறுவனம் மட்டும் கடந்த 4 மாதங்களாக தன் உற்பத்தியை பெரிதளவில் குறைத்துவிட்டது. மகிந்தரா அண்ட் மகிந்தரா நிறுவனம் 13 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்தப்போவதாக அறிவித்துவிட்டது. 

நாட்டில் பணப்புழக்கம் பெரிதாக குறைந்துவிட்டதன் காரணமாகத்தான், இவ்வாறு உற்பத்தி குறைந்துவிட்டது என்று காரணம் கூறப்படுகிறது. இதுபோல, ரியல் எஸ்டேட் தொழிலிலும் வாங்குவோர் இல்லாமல் விற்பனை மந்தமாக போய், அதன்காரணமாக கிடைக்கவேண்டிய வருவாயும் பெருமளவில் குறைந்துவிட்டது. இதனால் இருப்பதையெல்லாம் சுரண்டி எடுக்கவேண்டும் என்ற நிலைமையில் மத்திய அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே சரக்கு சேவைவரி வசூல் மிகத்தீவிரமாக நடந்து வருகிறது. அதை கண்கொத்தி பாம்பாக பார்த்து வருமானவரித்துறையும் தன் வரிவசூலை முடுக்கிவிடும் வகையில் நோட்டீசுகளை அனுப்பத்தொடங்கிவிட்டது. 

இந்தநிலையில், வங்கிக்கணக்குகளில் இருந்து ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்குமேல் பணம் எடுப்பவர்களுக்கு தனியாக ஒரு வரிவசூலிக்க மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. ரொக்கப்பரிமாற்றத்தை குறைக்கவும், டிஜிட்டல் பணபரிமாற்றத்தை மேம்படுத்தவும் இத்தகைய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளப்போகிறது என்று ஒரு காரணம் கூறப்படுகிறது. ஏற்கனவே வர்த்தக செலவுகளுக்கான பலன்களை பெறவேண்டுமென்றால், தொழில் நிறுவனங்கள் டிஜிட்டல் பணபரிமாற்றம் அல்லது காசோலை மூலமாகவோ பரிமாற்றத்தை மேற்கொள்ளவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்அடிப்படையில் இப்போது எல்லா பெரிய நிறுவனங்களும் ரூ.10 ஆயிரத்துக்குமேல் வழங்கும் சம்பளத்தையெல்லாம் காசோலை மூலமாகவோ அல்லது வங்கி பரிமாற்றம் மூலமாகவோ வழங்கி வருகிறது. இவ்வளவு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இப்போது ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்குமேல் வங்கிகளில் ரொக்கமாக எடுத்தால் வரி என்பது நிச்சயமாக நடைமுறையில் பல இன்னல்கள் ஏற்படும். 

பெரிய குடும்பங்களில் மாதம் ரூ.1 லட்சத்துக்குமேல் பல்வேறு செலவுகளுக்காக பணம் எடுக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. வர்த்தக மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களில் குறைந்த சம்பளத்துக்கு நிறையபேர் வேலைபார்த்துக்கொண்டிருக்கும் நிறுவனங்களில் மாதம் ரூ.1 லட்சத்துக்குமேல் நிச்சயமாக சம்பளம் கொடுக்க வேண்டியநிலை ஏற்படும். இதுபோல, சிறுசிறு செலவுகளுக்காக சிறு வணிகர்கள், வியாபாரிகள், சிறுகுறு நடுத்தர தொழில் நடத்துபவர்கள் டிஜிட்டல் பரிமாற்றத்தையோ, வங்கிக்கணக்கு பரிமாற்றத்தையோ மேற்கொள்ளமுடியாது. வங்கிகளில் பணம் போட்டால் பத்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் பணம் போட்ட பொதுமக்களுக்கு, அவர்கள் பணத்தை எடுப்பதற்கே வரி போடுவது என்பது நிச்சயமாக ஏற்புடையதல்ல. எனவே, ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்குமேல் பணம் எடுத்தால் வரி என்பது வேண்டவே வேண்டாம்.

Next Story