சத்துணவோடு பால்


சத்துணவோடு பால்
x
தினத்தந்தி 13 Jun 2019 10:30 PM GMT (Updated: 13 Jun 2019 2:15 PM GMT)

பள்ளிக்கூடங்களில் மதிய உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்ற எண்ணம் மறைந்த முதல்–அமைச்சர் காமராஜரின் எண்ணத்தில் உதித்தது.

றுமை காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு சென்று படிக்க முடியாத ஏழை குழந்தைகளுக்கு பள்ளிக்கூடங்களிலேயே சோறுபோட்டால் அவர்களும் படிப்பதற்காக பள்ளிக்கூடங்களுக்கு வருவார்கள் என்ற வகையில், பள்ளிக்கூடம் செல்லும் வயதுடைய குழந்தைகளில் அதிகமானவர்களை தொடக்க பள்ளிக்கூடங்களில் சேர்க்கவும், பள்ளிக்கூடங்களில் சேர்ந்த பிள்ளைகள் இடையிலேயே நின்று விடுவதைத் தவிர்க்கவும், தொடக்க பள்ளிக்கூடங்களில் மதிய உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்ற எண்ணம் மறைந்த முதல்–அமைச்சர் காமராஜரின் எண்ணத்தில் உதித்தது. அதன் பயனாகத்தான் 1956–1957–ம் கல்வி ஆண்டில் காமராஜர் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். முதலில் இந்தத்திட்டம் அரசின் அதிகாரபூர்வமான செயல்பாடாக இல்லாமல் பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக திரட்டப்பட்ட நன்கொடைகள் மூலமாகவே நிறைவேற்றப்பட்டது. இந்தத் திட்டத்தை மேலும் சிறப்பாகவும், விரிவாகவும் நடைமுறைப்படுத்த எண்ணிய காமராஜர், 1957–ம் ஆண்டு அரசின் திட்டத்தின்கீழ் மதிய உணவு திட்டத்தைக் கொண்டுவந்து ஒரு குறிப்பிட்ட அளவில் மானியம் வழங்கவும் வழி செய்தார். இப்படி தொடங்கப்பட்ட மதிய உணவு திட்டம் பல படிகளைத்தாண்டி மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர் காலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் சத்தான உணவு அளிக்கும் சத்துணவு திட்டமாக உருவெடுத்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் சத்துணவு திட்டத்தை அறிவித்தார். 

1–7–1982 அன்று திருச்சியில் சத்துணவு திட்டம் தொடங்கப்பட்டது. சத்துணவுக்காக முதல் சத்துணவுக்கூடம் திருச்சி அருகே உள்ள பாப்பாக்குறிச்சியில் தமிழர் தந்தை அமரர் சி.பா.ஆதித்தனார் பெயரில் மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் கட்டிக் கொடுத்தார். அதை எம்.ஜி.ஆர் திறந்து வைத்தார். அதன்பிறகு கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக்காலங்களில் சத்துணவு திட்டத்தில் பல உணவு வகைகள் சேர்க்கப்பட்டன. முதலில் முட்டை வழங்கும் திட்டத்தை கருணாநிதி தொடங்கி வைத்தார். தினமும் முட்டை, விதவிதமான கலவை சாதம் வழங்குதல் என்றவகையில் ஜெயலலிதா விரிவுபடுத்தினார். தற்போது 51 லட்சத்து 96 ஆயிரத்து 780 மாணவர்கள், 43 ஆயிரத்து 205 சத்துணவு மையங்களில் தினமும் பல்வகை கலவை சாதங்களை சாப்பிட்டு வருகிறார்கள். 

எல்லா முதல்–அமைச்சர்களும் இந்த சத்துணவு திட்டத்தின் மேம்பாட்டுக்கு பங்களித்து இருக்கிறார்கள். இந்தநிலையில், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு 1 முதல் 5–ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு தினமும் பால் வழங்குவதற்கான திட்டத்தை தீட்டி வருகிறது. பாலில் கால்சியம் மற்றும் புரத சத்துக்கள் இருப்பதால் இந்த வயதில் எலும்பு வளர்ச்சிக்கு பால் பெரிதும் சத்தான உணவாக கருதப்படுகிறது. வளரும் வயதில் தினமும் பால் குடிப்பது பல ஊட்ட சத்துக்களை அளிக்கும். பால் கெட்டுப்போகும் பொருள் என்பதால் அன்றாடம் அந்தந்த பகுதியிலேயே வாங்கலாமா? என்றவகையில் பரிசீலனை நடந்து வருகிறது. இது நிச்சயமாக நல்ல திட்டம். 5–வது வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கும் வகையில் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தவேண்டும். தமிழக அரசு ஏழை பெண்களுக்கு இலவச கறவை மாடுகள் வழங்கி வருகிறது. அவர்களிடம் இருந்து சத்துணவு திட்டத்துக்காக பால் வாங்கிக்கொள்ளலாம். இந்தத் திட்டம் கால்நடை வளர்ப்பையும் ஊக்குவிக்கும். வீடுகளில் மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கும் கூடுதல் வருமானம் என்பதால் இது பாராட்டத்தகுந்த திட்டமே.

Next Story