இந்த முயற்சி இனியும் வேண்டாம்


இந்த முயற்சி இனியும் வேண்டாம்
x
தினத்தந்தி 14 Jun 2019 10:30 PM GMT (Updated: 2019-06-14T21:07:43+05:30)

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்திலும் குறிப்பாக பொதுமக்களோடு தொடர்புகொள்ளும் பணிகள் உள்ள ரெயில்வே, தபால் இலாகா, வருமானவரித்துறை அலுவலகம், வங்கிகள் போன்ற பல துறைகளில் இப்போதெல்லாம் ஏராளமான வடநாட்டு இளைஞர்கள் வேலையில் சேர்ந்திருப்பதை பார்க்கமுடிகிறது.

மிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்திலும் குறிப்பாக பொதுமக்களோடு தொடர்புகொள்ளும் பணிகள் உள்ள ரெயில்வே, தபால் இலாகா, வருமானவரித்துறை அலுவலகம், வங்கிகள் போன்ற பல துறைகளில் இப்போதெல்லாம் ஏராளமான வடநாட்டு இளைஞர்கள் வேலையில் சேர்ந்திருப்பதை பார்க்கமுடிகிறது. ரெயில்வேயில் அடிமட்ட ஊழியர்களிலிருந்து, உயர் அதிகாரிகள்வரை பெரும்பாலும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களே இருக்கிறார்கள். மத்திய அரசு பணிகள் என்பது அகில இந்திய பணிகள்தான். இதில், இந்தியா முழுவதிலும் உள்ள யாரும் எந்த மாநிலத்திலும் பணிபுரியலாம். அந்தவகையில், தமிழ்நாட்டில் பணிபுரியும் வடமாநிலத்தவர்கள் தேர்வில் வெற்றி பெற்றுத்தானே வந்திருக்கிறார்கள் என்று கூறலாம். ஆனால், இந்த தேர்வுகள் எல்லாம் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டும் நடப்பதால் வடமாநிலத்தவர்கள் தங்கள் தாய்மொழி இந்தி என்ற அடிப்படையில் நிறையபேர் தேர்வு எழுதி வந்துவிடுகிறார்கள். தென்னக ரெயில்வேயில் வடமாநிலத்தவர்கள் இருக்கும் எண்ணிக்கையை பார்க்கும்போது, இந்த அளவு மற்ற மண்டல அலுவலகங்களில் தமிழ் இளைஞர்கள் தேர்வுபெற்று பணியில் இருக்கிறார்களா? என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை. 

வடமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் வேலைபார்த்தாலும், தமிழ் தெரியாததால் பல இன்னல்கள் ஏற்படுகின்றன. அதிலும் பொதுமக்களுக்கு தொடர்புடைய ரெயில்வே டிக்கெட் கவுண்ட்டர்களில் பணியாற்றும் அலுவலர்கள், ஓடும் ரெயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள், கார்டுகள், ரெயில் நிலையங்களில் ஸ்டே‌ஷன் மாஸ்டர்கள், பாய்ண்ட்ஸ் மேன்கள், கேட் கீப்பர்கள் என்று எல்லா பணிகளிலும் தமிழ் தெரியாதவர்கள் பணியாற்றும்போது அவர்களும், பொதுமக்களிடம் தமிழில் பேசமுடிவதில்லை. பொதுமக்களும் அவர்களிடம் இந்தியில் பேசமுடியவில்லை. இருவருமே ஒருவருக்கொருவர் புரியாத மொழியில் பேசி, யார் சொல்வது யாருக்கும் தெரியாத நிலையில் அல்லல்படுகிறார்கள். இதுமட்டுமல்லாமல், அலுவலர்களுக்கிடையே தமிழர்களுக்கும், பிற மாநிலத்தவர்களுக்கும் இடையேயுள்ள தகவல் பரிமாற்றம் மிகவும் இன்னலுக்கு உள்ளாக்குகிறது. அதனால்தான் சமீபத்தில் மதுரை கோட்டத்தில் உள்ள இரு ரெயில் நிலைய ஸ்டே‌ஷன் மாஸ்டர்களில் ஒருவர் தமிழராகவும், மற்றொருவர் வடமாநிலத்தை சேர்ந்தவராகவும் இருந்ததால் தகவல் பரிமாற்றத்தில் சிக்கல் காரணமாக பெரிய விபத்து ஏற்பட இருந்தது. 

தற்போது தென்னக ரெயில்வேயில் உள்ள கண்ட்ரோலர்கள், ஸ்டே‌ஷன் சூப்பிரண்டுகள், ஸ்டே‌ஷன் மாஸ்டர்கள் போன்ற அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்ட ஒரு சுற்றறிக்கை பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில், ‘கோட்ட கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கும், ஸ்டே‌ஷன் மாஸ்டர்களுக்கும் இடையே தகவல் பரிமாற்றம் ஆங்கிலத்திலோ, இந்தியிலோதான் இருக்கவேண்டும். இருதரப்பும் ஒருவர் சொல்வதை ஒருவர் புரிந்துகொள்ளாமல் இருக்கும் நிலையை தவிர்க்க, பிராந்திய மொழி (தமிழ்) பயன்படுத்துவதை தடுக்கவேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சுற்றறிக்கை ரெயில்வே ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் உடனடியாக பெரிய எதிர்ப்பு அலை கிளம்பியது.  தி.மு.க.வின் எதிர்ப்பு போராட்டம் காரணமாக, உடனடியாக இந்த நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது. பழைய நடைமுறையே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. இது வரவேற்புக்குரியது. ஆனால், இனி ஒருபோதும் இதுபோன்ற முயற்சிகள் எடுக்கப்படக் கூடாது. தமிழ்நாட்டில் ரெயில்வே துறையில் பணிபுரியும் வெளிமாநிலத்தவருக்கு நிச்சயமாக தமிழ் தெரியவேண்டும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு இருப்பதுபோல, தமிழ்நாட்டில் பணிபுரியும் வடமாநில அதிகாரிகள், ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் தமிழை படிக்கவேண்டும் என்று உத்தரவிடுவதே சாலச்சிறந்ததாகும்.

Next Story