வேகமெடுக்கும் நிர்வாகம்


வேகமெடுக்கும்  நிர்வாகம்
x
தினத்தந்தி 16 Jun 2019 9:30 PM GMT (Updated: 2019-06-16T21:30:37+05:30)

மத்திய அரசு என்றாலும் சரி, மாநில அரசு என்றாலும் சரி, வளர்ச்சிப்பணிகளை, மேம்பாட்டு பணிகளை, மக்கள் நலப்பணிகளை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டுமென்றால், நிர்வாகம் ஆற்றும் பணிகளில்தான் இருக்கிறது.

த்திய அரசு என்றாலும் சரி, மாநில அரசு என்றாலும் சரி, வளர்ச்சிப்பணிகளை, மேம்பாட்டு பணிகளை, மக்கள் நலப்பணிகளை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டுமென்றால், நிர்வாகம் ஆற்றும் பணிகளில்தான் இருக்கிறது. நிர்வாகம் என்றால் அமைச்சர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு இருக்கிறது. அதனால்தான் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்–மந்திரியாக இருந்தபோது, தினமும் காலையில் அரசு அலுவல் தொடங்குவதற்கு முன்பே அலுவலகத்துக்கு செல்வது வழக்கம். அலுவலகத்துக்கு சென்றவுடன் தான் அன்று ஆற்றவேண்டிய பணிகளை அட்டவணைப்படுத்தி, அதற்கேற்ப மந்திரிகள், அதிகாரிகள் கூட்டத்தை கூட்டுவதோடு மட்டுமல்லாமல், பார்வையாளர்களையும் சந்திப்பது வழக்கம். அதே வகையான முறையில்தான் இப்போதும் பணிகளை ஆற்றத்தொடங்கியிருக்கிறார். ஒவ்வொரு துறையிலும் செயலாளர்கள் மட்டுமல்லாமல், இயக்குனர், துணைச்செயலாளர்கள் மட்டம் வரை அதிகாரிகளிடம் அவரே நேரடியாக பேசி உத்தரவுகள் பிறப்பிப்பதோடு மட்டுமல்லாமல், அந்த துறை ஆற்றும் பணிகள் தொடர்பான தகவல்களையும் கேட்டுப்பெறுகிறார். முக்கிய அதிகாரிகள் எல்லாம் அவசரமாக பிரதமரை தொடர்புகொள்ளவேண்டுமென்றால், அதற்காக நேரம் கேட்டு காத்திருக்க தேவையில்லாத அளவில் எல்லோருக்கும் அவரது செல்போன் எண்ணையும் கொடுத்துள்ளார்.

தன்னைப்போலவே மந்திரிகளும் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த வாரம் அமைச்சரவையை கூட்டிய நேரத்தில், எல்லா மந்திரிகளும் காலை 9.30 மணிக்கே அலுவலகம் வந்துவிடவேண்டும். வீட்டில் இருந்தே வேலைபார்க்கும் முறையை தவிர்க்கவேண்டும். மற்ற அதிகாரிகளுக்கு எடுத்துக்காட்டாக திகழவேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களை சந்திக்க நேரம் ஒதுக்கவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக,           5 ஆண்டுகாலத்தில் அவர்கள் செயல்படுத்தப்போகும் திட்டங்களை   வகைப்படுத்த   வேண்டும்.   முதல்             100 நாட்களுக்குள் அதை செயல்படுத்த தொடங்க வேண்டும் என்பது போன்ற பல அறிவுரைகளை வழங்கியுள்ளார். இதே வகையான அறிவுரைகளை கடந்த வாரம் திங்கட்கிழமை அவர் கூட்டிய கூட்டத்தில் செயலாளர்களிடம் தெரிவித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளுக்கான இலக்குகளை நிர்ணயித்து, அவரவர் துறை எந்தெந்த கட்டங்களில் எவ்வளவு பணிகளை முடிக்கவேண்டும் என்பதையும் வகைப்படுத்தி, 100 நாட்களுக்குள் அவர்கள் எடுத்த முடிவுகளுக்கெல்லாம் அனுமதிகளைப் பெற்று வேகமாக செயல்படுத்தவேண்டும் என்று கூறியிருக்கிறார். பிரதமர் இதைத்தான் கேட்பார் என்று எதிர்பார்த்து செயலாளர்களும் தங்கள் எண்ணம், திட்டங்கள் தொடர்பான தகவல்களோடு வந்து பிரதமரிடம் தெரிவித்தனர். விவசாயம், ஊரகமேம்பாடு, பஞ்சாயத்து ராஜ்யம், தகவல் தொழில்நுட்ப முனைப்புகள், கல்வி சீர்திருத்தம், மருத்துவம், தொழில் கொள்கை, பொருளாதார வளர்ச்சி, திறன்மேம்பாடு போன்ற பல துறைகளில் தங்கள் திட்டங்களை பிரதமருடன் பகிர்ந்துகொண்டனர். அடுத்த 5 ஆண்டுகளில் தங்களுக்கு என்னென்ன வேண்டுமென்று பல எதிர்பார்ப்புகள் வாக்காளர்களிடம் உண்டு. மக்களின் எதிர்பார்ப்புகளை ஒரு சவாலாக நினைக்காமல், அதையெல்லாம் நிறைவேற்ற தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளாக அதிகாரிகள் எண்ணவேண்டும்.

இந்தியாவை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக மாற்ற மத்திய அரசாங்கத்தின் ஒவ்வொரு துறைக்கும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பங்கு இருக்கிறது. அதற்கேற்ற வகையில் அதிகாரிகள் பணியாற்றவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். ஆக, மத்திய அரசாங்கத்தின் நிர்வாகம் பிரதமரால் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அரசுக்கு ஆயிரம் எண்ணங்கள், ஆயிரம் நோக்கங்கள், ஆயிரம் இலக்குகள், ஆயிரம் திட்டங்கள் இருக்கலாம். அதையெல்லாம் செயல்படுத்தவேண்டியது அதிகாரவர்க்கத்திடம்தான் இருக்கிறது. அந்த வகையில், அரசு ஊழியர்கள், பொதுமக்களுக்கு ஆற்றவேண்டிய பணிகளை ஒரு சவாலாக நினைக்காமல், பொதுமக்களுக்கான சேவைசெய்ய தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக கருதவேண்டும்.

Next Story