வரியை குறைத்தால் வருமானம் பெருகுமே!


வரியை குறைத்தால் வருமானம் பெருகுமே!
x
தினத்தந்தி 17 Jun 2019 10:00 PM GMT (Updated: 17 Jun 2019 1:16 PM GMT)

2–வது முறையாக ஆட்சி அமைத்துள்ள பா.ஜ.க. அரசாங்கத்தின் முதல் பட்ஜெட்டை, நிதி மந்திரியாக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன் ஜூலை 5–ந்தேதி தாக்கல் செய்யப்போகிறார்.

மிக சவாலான நேரத்தில் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தயாரிக்கவேண்டும். பட்ஜெட்டை தயாரிப்பதற்கு முன்பு அவர், விவசாயம், தொழில்துறை முன்னோடிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். விவசாயமும், தொழில் வளர்ச்சியும்தான் முன்னுரிமை என்று அவர் உறுதிபூண்டுள்ளார். இந்திய தொழில்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் பேசும்போது, ‘வரிவிதிப்பு பற்றி நிறைய கோரிக்கைகளை கொடுத்துள்ளனர். உற்பத்தித்துறை பெரும்பாதிப்பில் இருக்கிறது. கார்கள், இருசக்கர வாகனங்கள் உற்பத்தி பெரும்பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. சிறிய கார்களுக்கும், இருசக்கர வாகனங்களுக்கும் 28 சதவீதம் சரக்கு சேவைவரி விதிக்கப்படுகிறது. அதுபோல, உயர்ந்த விலையிலான கார்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இந்த வரிவிகிதங்கள் எல்லாம் 18 சதவீதமாக குறைக்கப்படவேண்டும்’ என்று கோரிக்கைகள் இருக்கிறது. இருசக்கர வாகனங்கள் பயன்பாடு இப்போது அத்தியாவசிய பயன்பாட்டுக்கு வருவதால் அதை ஆடம்பர பொருளாக கணக்கிடக்கூடாது என்பதுதான் சாதாரண ஏழை–எளிய, நடுத்தர மக்களின் கோரிக்கையாகும். சிமெண்டுக்கும் இப்போதுள்ள 28 சதவீத வரியை குறைக்கவேண்டும் என்று தொழில்துறையில் கோரிக்கைகள் விடப்பட்டுள்ளன.

பொதுவாக வரியை குறைத்தால் வருமானம் குறையும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், சரக்கு சேவைவரி தொடக்கத்தில் ஒவ்வொரு மாதமும் வரிவசூல் ரூ.1 லட்சம் கோடியை எட்டிப்பிடிப்பது எட்டாக்கனியாக இருந்தது. இவ்வளவு நாட்களும் 34 முறை நடந்த சரக்கு சேவைவரி வசூல் கவுன்சில் கூட்டத்தில் 381 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரிகுறைப்புகள் மட்டுமல்லாமல், வரிவிலக்குகளும் அளிக்கப்பட்டது. தமிழக அரசு கோரிக்கையை ஏற்று மட்டும் 30 பொருட்களுக்கும், 9 சேவைகளுக்கும் வரி குறைக்கப்பட்டது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் சரக்கு சேவைவரி வசூல் ரூ.1 லட்சத்து 14 ஆயிரம் கோடியும், மே மாதத்தில் ரூ.1 லட்சத்து 289 கோடியாகவும் உயர்ந்துள்ளது. கடந்த நிதிஆண்டில் சராசரி வசூல் ரூ.98 ஆயிரத்து 114 கோடிதான். டிசம்பர் மாதம் நடந்த சரக்கு சேவைவரி கவுன்சில் கூட்டத்தில் மட்டும் 23 பொருட்கள் சேவைகளுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. 

நேரடி வரிகளை பொறுத்தமட்டில், முறையாக வருமானவரி கட்டுபவர்களுக்கு வரிக்கு அதிகமாக அவர்கள் கட்டும் வருமானவரியில் 4 சதவீதம் மக்கள் நல்வாழ்வு மற்றும் கல்விக்கான மேல்வரியாக (செஸ்) வசூலிக்கப்படுகிறது. இதுபோல ரூ.1 கோடிக்குமேல் வருமானம் உள்ள தனிநபருக்கு 15 சதவீதமும், ஆண்டுக்கு ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.1 கோடிவரை வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதமும் கூடுதல் வரியாக (சர் சார்ஜ்) விதிக்கப்படுகிறது. மேல்வரி என்பது எந்தத்துறைக்காக வசூலிக்கப்படுகிறதோ அதற்காக மட்டும் செலவழிக்கப்படும். இதுமட்டுமல்லாமல், மேல்வரி, கூடுதல்வரி வசூலில் கிடைக்கும் தொகை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதில்லை. வருமானவரியை முறையாக கட்டுபவர்களுக்கு சலுகை அளிப்பதற்கு பதிலாக, இப்படி மேல்வரி, கூடுதல்வரி என்று வசூலித்தால் நிறையபேர் எதற்காக இந்த வளையத்துக்குள் வந்துவிழவேண்டும் என்ற எண்ணத்தில் வருமானவரி ஏய்ப்பு செய்வதற்கான நிலைக்கு தள்ளப்படுவார்கள். எனவே, மக்களின் நாடித்துடிப்புகளை நன்றாக அறிந்த நிர்மலா சீதாராமன், அனைத்து வரிகளையும் சீரமைத்து எளிமைப்படுத்துவதற்கான அறிவிப்புகளை பட்ஜெட்டில் வெளியிடவேண்டும்.

Next Story