நல்ல தொடக்கம்


நல்ல தொடக்கம்
x
தினத்தந்தி 18 Jun 2019 10:00 PM GMT (Updated: 2019-06-18T21:07:21+05:30)

17–வது நாடாளுமன்றத்தின் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.

கடந்த 2 நாட்களாக புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்புவிழா நடந்தது. ஏற்கனவே 16–வது நாடாளுமன்றத்தின்போதும் தனி மெஜாரிட்டி பெற்றிருந்த பா.ஜ.க., இப்போதும் 303 இடங்களிலும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. கடந்தமுறையும் எந்த அரசியல் கட்சியும் மொத்தமுள்ள இடங்களில் 10 சதவீதமான 54 இடங்களை பெறாததால் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை இழந்தது. அதுபோல இந்த முறையும் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில்தான் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், சட்டப்பூர்வமான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறவில்லை. கடந்த நாடாளுமன்றத்தின்போது 62 பெண் எம்.பி.க்கள்தான் இருந்தார்கள். ஆனால் இப்போது 78 பெண் எம்.பி.க்கள் இருக்கிறார்கள். இந்த நாடாளுமன்றத்தில் 267 உறுப்பினர்கள் முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். 

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால் எதிர்க்கட்சிகளின் குரல் கேட்கப்படுமா? என்று சந்தேகப்பட்டு கொண்டிருந்த நிலையில், நாடாளுமன்ற கூட்டத்துக்குள் நுழையும்போது பிரதமர் நரேந்திரமோடி, பத்திரிகையாளர்களிடம் கூறிய கூற்று மிகுந்த நம்பிக்கையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது. எதிர்க்கட்சிகள் தங்கள் எண்ணிக்கை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. பிரச்சினைகள் பற்றி பேசும்படி கேட்டுக்கொள்கிறேன். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகள் மிகவும் முக்கியமானவவை. நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொண்டு தீவிரமாக உரையாற்றுவார்கள் என்று நம்புகிறேன். ‘அனைவரோடும் இணைவோம், அனைவருக்காகவும் பணியாற்றுவோம், அனைவரின் நம்பிக்கையையும் பெறுவோம் என்ற தார்ப்பரியத்தின் அடிப்படையிலேயே நாங்கள் பணியாற்றுவோம். நாடாளுமன்றத்துக்குள் வரும்போது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதம் இல்லாமல், ஒரே குறிக்கோளோடு நாட்டின் நலனுக்காக பணியாற்றவேண்டும்’ என்று கூறினார். இது நடைமுறையில் இருந்தாலே மிகவும் போற்றுதலுக்குரியதாக இருக்கும். 

2 நாட்களாக அனைத்து உறுப்பினர்களும் பதவி ஏற்கும்போது அவரவர் தாய்மொழியிலேயே பதவி ஏற்றது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது. தமிழக எம்.பி.க்கள் அனைவரும் தேன் தமிழில் பதவி ஏற்றதும், பலர் தமிழ் வாழ்க! என்று வாழ்த்து முழக்கங்களை கூறியதும் உணர்வுப்பூர்வமாக இருந்தது. ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், கன்னடம், மராத்தி, டோக்ரி, ஒடியா, பஞ்சாபி, அசாம் போன்ற அவரவர் மாநில மொழியில் எல்லோரும் உறுதிமொழி எடுத்தது, இந்தியை திணிக்கவேண்டும் என்ற முயற்சி தேவையில்லை, வேண்டவே வேண்டாம் என்பதை காட்டிவிட்டது. பா.ஜ.க. உறுப்பினர்களே தங்கள் தாய்மொழியில் பதவி ஏற்று வழிகாட்டி இருக்கிறார்கள். இந்த நாடாளுமன்ற கூட்டத்திலாவது அமளியோ, அவை முடக்கமோ இல்லாமல், நாடு முழுவதும் நிலவிவரும் மக்களின் பாதிப்புகள் பிரதிபலிக்கப்படவேண்டும். தமிழக எம்.பி.க்களை பொறுத்தமட்டில், மக்கள் பிரச்சினைகள் நிறைய இருக்கிறது. குறிப்பாக வறட்சி நிலவுகிறது. அ.தி.மு.க. உறுப்பினர் ரவிந்திரநாத்குமாரை தவிர மற்ற அனைவரும் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியின் உறுப்பினர்கள். தமிழக அரசும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களும் அரசியல் வேறுபாடுகளை மறந்து, மக்கள் நலனுக்காக பாடுபடவேண்டும். தமிழக பிரச்சினைகளை உறுப்பினர்கள் ஒரே குரலில் நாடாளுமன்றத்தில் எழுப்ப வாய்ப்பு இருக்கிறது. தமிழக அரசும், மத்திய அரசாங்கத்திடம் நிலுவையில் உள்ள திட்டங்கள் எவை?, கோரிக்கைகள் எவை? என்பதையெல்லாம் பட்டியலிட்டு நமது மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வழங்கி, அதையெல்லாம் பெற்றுத்தர வழிவகுக்க வேண்டும்.

Next Story