மழை நீரை சேகரித்தாலே போதுமே?


மழை நீரை சேகரித்தாலே போதுமே?
x
தினத்தந்தி 19 Jun 2019 10:00 PM GMT (Updated: 19 Jun 2019 2:25 PM GMT)

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழையால் ஓரளவுக்கு பயன் கிடைத்தாலும், அண்டை மாநிலமான கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்குத்தான் பெரும் பயன் கிடைக்கும்.

ஆண்டுதோறும் ஜூன் 1–ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டு 8–ந் தேதிதான் தொடங்கியது. ஆனாலும் மழை வலுவாக இல்லை. தென்மேற்கு பருவமழையை நம்பி கர்நாடக விவசாயிகள் காத்திருக்கிறார்களோ இல்லையோ, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் எப்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும், கர்நாடகா மாநிலத்திற்கு பெரிய மழையை கொண்டு வரும், அங்குள்ள அணைகள் எல்லாம் எப்போது நிரம்பும், அதன்பிறகு வெள்ளநீர் வடிகாலாக அவர்கள் கருதும் மேட்டூர் அணைக்கு எப்போது தண்ணீர் திறந்து விடப்படும், மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் எப்போது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் என்று ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். 

காவிரி கரையோர மாவட்டங்களான தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் காவிரியை நம்பித்தான் விவசாயம் செய்யப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு 30 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டு போக பயிர் சாகுபடியும், திருச்சி போன்ற இடங்களில் மூன்றுபோக பயிர் சாகுபடியும் செய்து வந்தார்கள். இப்போது குறுவை, சம்பா என்ற இருபோக சாகுபடியில் பலர் குறுவையை கைவிடவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த ஆண்டுகூட குறுவை சாகுபடி செய்ய காவிரியிலும் தண்ணீர் இல்லை, நிலத்தடி நீரும் இல்லை. ஜூன் 12–ந்தேதி மேட்டூர் அணை திறந்து விடப்படவேண்டும். ஆனால் எப்போதாவது ஒரு ஆண்டுதான் அப்படி திறந்துவிடப்படுகிறது. கடந்த ஆண்டுகூட ஜூலை 19–ந் தேதிதான் திறந்துவிடப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் அந்த தண்ணீரைக்கூட சேமித்து வைக்காமல் வீணாக கடலில் போய் கலக்க வைக்கும் நிலைமை ஏற்படுகிறது. 

ஆண்டுதோறும் காவிரியில் 90 டி.எம்.சி. தண்ணீர் கடலில் போய் வீணாக கலந்து விடுகிறது. கடந்த ஆண்டு வெள்ளத்தில் முக்கொம்பு அணை உடைந்த நேரத்தில், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘‘எதிர்காலத்தில் மழை நீரை முழுமையாக சேமித்து வைக்க 3 ஆண்டுகால திட்டத்தின்கீழ் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் ரூ.292 கோடியில் 62 தடுப்பணைகள் கட்டுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது’’ என்று அறிவித்தார். இதுபோல, ‘‘முக்கொம்பு அணையை உடனடியாக சீர்செய்து அதிலிருந்து 100 மீட்டர் தொலைவில் கொள்ளிடத்தில் ரூ.325 கோடி மதிப்பில் ஒரு கதவணையும், மற்றொரு பகுதியில் ரூ.85 கோடி மதிப்பில் மற்றொரு கதவணையும் கட்டப்படும்’’ என்று அறிவித்தார். இப்போது அந்த பணிகள் வேகமாக நடக்கிறதே தவிர, கடலில் போய் வீணாக கலக்கும் தண்ணீரை சேமித்து வைப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் இல்லை. அதை உடனடியாக தொடங்க வேண்டும் என்பது விவசாயிகளின் கருத்து. தமிழ்நாட்டில் ஆற்றுவளம் இல்லை என்று சொல்லிக்கொண்டு இருப்பதற்கு பதிலாக, மழைநீரை சேகரிக்கும் திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தினாலே போதும். வளமிக்க மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடும். இதற்கான கட்டமைப்புகளை அனைத்து இடங்களிலும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக தொடங்கினால்தான் இப்போது போல வறட்சியை எப்போதும் சந்திக்காமல் இருக்கும் நிலைமையை உருவாக்கலாம்.

Next Story