டிரைவர்களுக்கு கல்வித்தகுதி இல்லை


டிரைவர்களுக்கு கல்வித்தகுதி இல்லை
x
தினத்தந்தி 20 Jun 2019 10:00 PM GMT (Updated: 2019-06-20T19:39:29+05:30)

நாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் 6.1 சதவீதம் வேலையில்லா திண்டாட்டம் 2017–18–ல் இருந்ததாக தேசிய சாம்பிள் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போது இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.6 சதவீதம் வேலையில்லா திண்டாட்டம் இருப்பதாக தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்பு என்பது படித்தவர்களுக்கு மட்டுமல்ல, முறையான கல்வித்தகுதி இல்லாதவர்களுக்கும் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். கல்வித்தகுதி இல்லாதவர்களுக்கு தொழிற்சாலைகளில் கீழ்மட்ட பணிகள், விவசாயத்தில் பணிகள், கட்டுமானப்பணிகள் உள்பட பல்வேறு பணிகள் வழங்கப்படுகிறது. தற்போது தொழில்வளர்ச்சியும் மந்தமாகி, கடும் வறட்சி நிலவுவதால் விவசாயமும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி, கட்டுமானப் பணிகளும் பெரும் சரிவை எதிர்நோக்கியுள்ள நிலையில், முறையான கல்வித்தகுதி இல்லாதவர்களும் வேலைவாய்ப்பு இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இந்தநிலையில், ஆபத்பாந்தவனாக மத்திய அரசாங்க சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், மோட்டார் வாகன டிரைவர்களாக பணியாற்றுபவர்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி தேவையில்லை என்று முடிவெடுத்துள்ளது. 

மத்திய மோட்டார் வாகன விதி 8–ன் கீழ், போக்குவரத்து வாகன டிரைவர்கள் 8–ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என்று இருக்கிறது. முறையான கல்வித்தகுதி இல்லாவிட்டாலும், படிப்பறிவும், திறனும் கொண்ட ஏராளமானவர்கள் பெரும் எண்ணிக்கையில் வேலையில்லாமல் இருக்கிறார்கள். தற்சமயம் மோட்டார் வாகன தொழிலில் 22 லட்சம் டிரைவர்களுக்கான பணி இடங்கள் ஆள் இல்லாமல் கடும் கிராக்கி உள்ளது. டிரைவிங் என்பது வாகனங்களை ஓட்டுவதும், பராமரிப்பதிலும் உள்ள திறனில்தான் இருக்கிறதே தவிர, கல்வியில் இல்லை. எனவே, மத்திய அரசாங்கம் இவர்களுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியை நீக்க முடிவெடுத்துள்ளது. கிராமப்புறங்களில், நகர்ப்புறங்களில் ஏழ்மைநிலையில் உள்ள டிரைவிங் படிக்க வாய்ப்புள்ள இளைஞர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு அளிக்கும். அவர்களது பயிற்சியிலும், சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் திறன் பரிசோதனையிலும் எந்தவித சமரசத்திற்கும் இடம் இருக்கக்கூடாது. டிரைவிங் லைசென்சிற்கு விண்ணப்பிப்பவர்கள் கண்டிப்பாக கடுமையான திறன் பரிசோதனைக்கு ஆட்படவேண்டும். அவர்களுக்கு சாலையில் உள்ள சிக்னல்கள் மற்றும் பதிவேடுகளை பராமரிப்பது, டிரக்குகள், டிரைலர்களை பரிசோதிப்பது முதல் உதவி அளிப்பது என்பது போன்ற முழுமையான பயிற்சிகளை மோட்டார் வாகனங்களை ஓட்ட பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் அளிக்க வேண்டும். 

மேலும் அவர்களுக்கு தொழில்பயிற்சி அளிக்கும், திறன் பயிற்சி அளிக்கும் பள்ளிக்கூடங்கள் மாநில அரசின் கண்காணிப்பில் இருக்கவேண்டும். நிச்சயமாக இந்த முடிவு வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு டிரைவிங் பயிற்சி பெறவும், உடனடி பணி பெறவும் நல்ல வாய்ப்பாக அமையும்.  கல்வித்தகுதிதான் இல்லையே தவிர, மற்ற திறன்கள் எல்லாம் அவர்களுக்கு முறையாக இருக்கிறதா? என்பதை மாவட்ட போக்குவரத்து அலுவலகங்கள் அவர்களுக்கு லைசென்சு வழங்கும் முன்பு உறுதிப்படுத்த வேண்டும். டிரைவிங் தெரிந்த பலர் கல்வித்தகுதி இல்லாமல் கனரக மோட்டார் வாகனங்களை ஓட்டுவதற்கான லைசென்சு பெறமுடியாமல் இருக்கும்நிலையில், மத்திய அரசாங்கத்தின் இந்த முடிவு நிச்சயமாக அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றும். டிரைவிங் லைசென்சு வழங்கும்போது அவர்கள் திறன் மற்றும் ஆற்றலை பரிசோதிப்பதற்காக அனைத்து இடங்களிலும் போக்குவரத்து சிக்னல்கள், போக்குவரத்து விதிகளை பரிசோதிப்பதற்கான அமைப்புகள் கொண்ட தளங்கள் அமைக்கப்பட வேண்டும்.

Next Story