நுழைவுத்தேர்வுகளில் தமிழக மாணவர்கள்


நுழைவுத்தேர்வுகளில் தமிழக மாணவர்கள்
x
தினத்தந்தி 21 Jun 2019 10:00 PM GMT (Updated: 2019-06-21T21:08:35+05:30)

இப்போதெல்லாம் மருத்துவம், பல் மருத்துவம் போன்ற படிப்புகளுக்கு ‘நீட்’ நுழைவுத்தேர்வு மூலமாக மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதுபோல, பொறியியல் படிப்புக்கும் எந்த நேரத்திலும் ‘நீட்’ போன்ற நுழைவுத்தேர்வு அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிறைய இருக்கிறது.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிப்பது பொறியியல் பட்டதாரிகளுக்கு பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. இங்கு இளநிலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் படித்தால் புகழ்பெற்ற இந்திய நிறுவனங்கள் மட்டுமல்லாமல், சர்வதேச நிறுவனங்களிலும் அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கும் என்பது ஒரு நடைமுறையாக ஆகிவிட்டது. அதனால்தான் இளந்தலைமுறையினர் ஐ.ஐ.டி.யில் படிப்பதை தங்கள் லட்சிய கனவாகக்கொண்டு படிக்கிறார்கள். இந்தியா முழுவதும் சென்னை ஐ.ஐ.டி. உள்பட 23 ஐ.ஐ.டி.க்கள் இருக்கின்றன. இதில் படிக்க 10,500 மாணவர்களுக்கு இடம் இருக்கிறது. ஆனால், தமிழ் நாட்டில் இருந்து ஐ.ஐ.டி.யில் சேருபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துகொண்டு வருகிறது. 

இந்த ஆண்டு இந்தியா முழுவதிலும் 1 லட்சத்து 61 ஆயிரத்து 319 பேர் ஐ.ஐ.டி.யின் நுழைவுத்தேர்வுக்காக ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு என்று கூறப்படும் ஜே.இ.இ. என்ற நுழைவுத்தேர்வு எழுதினர். இதில், 38,705 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சிபெற்ற பெண்களின் எண்ணிக்கை வெறும் 5,356. முதல் ஆயிரம் பேர் கொண்ட தரவரிசை பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 30 பேர்தான் இடம்பெற்றுள்ளனர் என்பது மிகுந்த ஏமாற்றத்துக்குரியதாக இருக்கிறது. அரசு பள்ளிக்கூடத்தில் படித்த யாரும் இந்த பட்டியலில் இருப்பதுபோல தெரியவில்லை. ஐ.ஐ.டி.யில் மட்டுமல்லாமல், மருத்துவம் மற்றும் பல் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக நடந்த நீட் தேர்விலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. இந்த தேர்வில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 59,785 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களை சேர்ந்த 14,929 பேர் நீட் தேர்வு எழுதினார்கள். இதில், 2,583 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்கள் எடுத்த மதிப்பெண்களை பட்டியலிட்டுப்பார்த்தால், 720–க்கு 400 மதிப்பெண்களுக்குமேல் தமிழ் மீடியத்திலோ, ஆங்கில மீடியத்திலோ, அரசு பள்ளிக்கூடங்கள், அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே உள்ளது. 

அரசு பள்ளிக்கூடங்களிலும், அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களிலும் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பதுபோல, ஐ.ஐ.டி. படிப்பதற்கான நுழைவுத்தேர்வுக்கும் மாணவர்களை தயார் செய்யவேண்டும். இந்த பயிற்சி வகுப்புகளில் மட்டுமல்லாமல், வழக்கமாக நடக்கும் வகுப்புகளிலும் மாணவர்களுக்கு இதுபோன்ற நுழைவுத்தேர்வுகளில் எளிதாக வெற்றிபெறும் வகையில், அவர்கள் அறிவை விசாலமாக்கும் வகையில் ஆசிரியர்களை உருவாக்கவேண்டும். இன்றைய நவீனகாலத்தில் போட்டித்தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் பெரிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அந்த வகையில், ஆசிரியர்களுக்கும் புத்தாக்க பயிற்சிகளை தமிழக அரசு அளிக்கவேண்டும். தமிழக அரசின் அண்ணா மேலாண்மை புத்தாக்க நிறுவனம் மூலம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், துணை கலெக்டர்கள் உள்பட அனைத்து உயர்மட்ட அரசு அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்படுவதுபோல, ஆசிரியர்களுக்கும் மாறிவரும் உலகத்துக்கேற்ப, தொழில்நுட்பத்திற்கேற்ப, விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப புத்தாக்க பயிற்சி அளிப்பதற்கு அரசு பரிசீலிக்கவேண்டும்.

Next Story