ஐகோர்ட்டு நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது


ஐகோர்ட்டு நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது
x
தினத்தந்தி 24 Jun 2019 10:00 PM GMT (Updated: 2019-06-25T00:46:43+05:30)

தாமதமான நீதி, மறுக்கப்பட்ட நீதி என்று ஒரு பழமொழி உண்டு. ஆக, நீதி வழங்குவதில் தாமதம் ஒருபோதும் இருக்கக்கூடாது என்பதுதான் நியதி ஆகும்.

ஜனநாயகத்துக்கு நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை, பத்திரிகைத்துறை ஆகிய நான்கு தூண்கள் இருக்கின்றன. இதில், மற்ற எந்த தூண்களில் எந்த பிரச்சினை என்றாலும் அதற்காக கதவை தட்டுவது நீதிமன்றத்தைத்தான். அதனால்தான் நீதிமன்றங்களை நீதியின் கோவில்கள் என்றும், அங்கு நீதி வழங்கும் நீதிபதிகளை நீதி தேவன்கள் என்றும் அழைக்கிறார்கள். அப்படிப்பட்ட உன்னதமான பணி வழங்கும் நீதிமன்றங்களில் இப்போது லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன.

ஐகோர்ட்டுகளில் மட்டும் 43 லட்சம் வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. இதுபோல, சுப்ரீம் கோர்ட்டில் 58 ஆயிரம் வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. சுப்ரீம் கோர்ட்டில் 10 ஆண்டுகளுக்குமேல் 4,977 வழக்குகளும், 15 ஆண்டுகளுக்குமேல் 593 வழக்குகளும், 20 ஆண்டுகளுக்குமேல் 100 வழக்குகளும், 25 ஆண்டுகளுக்குமேல் 26 வழக்குகளும் தீர்வு காணப்படாமல் தேங்கிக்கிடக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியே கூறுகிறார். சுப்ரீம் கோர்ட்டிலேயே இவ்வளவு வழக்குகள் நிலுவையில் இருந்தால் நிச்சயம் ஐகோர்ட்டுகளில் காலதாமதம் இருக்கத்தான் செய்யும். சுப்ரீம் கோர்ட்டில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் நீதிபதிகளின் எண்ணிக்கை பதவி இடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளன. ஆனால் ஐகோர்ட்டுகளை எடுத்துக் கொண்டால், 399 நீதிபதிகளின் பணி இடங்கள் காலியாக இருக்கின்றன. சென்னை ஐகோர்ட்டில் மொத்த நீதிபதிகளின் பணி இடங்கள் 75 ஆகும். தற்போது தலைமை நீதிபதி உள்பட 58 பேர்தான் இருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு மாநில ஐகோர்ட்டுகளிலும் காலிப்பணி இடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியே, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 30 ஆண்டுகளுக்கு முன்பு 18 ஆக இருந்தது. படிப்படியாக இப்போது 31 ஆக இருக்கிறது.

இந்தநிலையில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், பிரதமர் நரேந்திர மோடிக்கு 3 கடிதங்கள் எழுதியிருக்கிறார். முதல் 2 கடிதங்களில் அவர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கையை 31-லிருந்து உயர்த்தவேண்டும். ஐகோர்ட்டு நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 62-லிருந்து, 65 ஆக உயர்த்தவேண்டும். இதற்காக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 3-வது கடிதத்தில் முன்பு நடைமுறையில் இருந்த வழக்கமான ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகளை பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் வழக்குகளை விசாரிக்கும்படி பணி ஒதுக்கலாம் என்பதாகும். சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியின் இந்த 3 கோரிக்கைகளுமே நியாயமான கோரிக்கைகளாகும். உடல் உழைப்பு பணிகளுக்கு ஓய்வுபெறும் வயது 58 அல்லது 60 என்றிருப்பது தவறு இல்லை. நீதிபதிகளுக்கு வயதாகிவிடுவதில்லை. மாறாக காலம் அவர்களை மெருகேற்றுகிறது என்று மறைந்த இங்கிலாந்து நாட்டு எழுத்தாளர் எனிட் பாக்னால்டு கூறியதற்கேற்ப, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது மிகவும் ஏற்புடையது. அந்தவகையில் ஐகோர்ட்டு நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 ஆக உயர்த்தும் முடிவை அரசு விரைவில் எடுக்கவேண்டும். இதற்காக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்த வேண்டும்.

Next Story