வீட்டுக்கு அனுப்பப்படும் செயல்படாத அதிகாரிகள்


வீட்டுக்கு அனுப்பப்படும் செயல்படாத அதிகாரிகள்
x
தினத்தந்தி 25 Jun 2019 11:00 PM GMT (Updated: 25 Jun 2019 3:08 PM GMT)

செயல்படாத உயர் அதிகாரிகளுக்கு கல்தா கொடுக்கும் வேலைகளை பிரதமர் நரேந்திரமோடி அரசாங்கம் தீவிரப்படுத்தி விட்டது. அடுத்த சில மாதங்களில் பல உயர்அதிகாரிகள் வீட்டிற்கு போகும்நிலை ஏற்படப்போகிறது.

மத்திய அரசாங்க கேபினட் செயலகமும், மத்திய ஊழல் தடுப்பு ஆணையமும் கடந்த சில நாட்களாக பல்வேறு துறைகளில் உள்ள ஊழல் கண்காணிப்பு உயர் அதிகாரிகளுக்கு வாய்மொழியான உத்தரவுகளை அடுக்கடுக்காக பிறப்பித்துள்ளது. மத்திய சிவில் சர்வீசஸ் பென்‌ஷன் விதிகளில் (56 ஜெ) பிரிவின் கீழ் எந்தெந்த அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு கொடுக்கலாம் என்பதை முடிவு செய்வதற்கான நடைமுறைகளை மிகவும் வேகப்படுத்தும்படி கேட்டிருக்கிறார்கள். 

விதி (56 ஜெ) பிரிவின் கீழ் 30 ஆண்டுகள் பணி முடித்த அல்லது 50 வயதுக்கு மேலான அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு கொடுக்கப்பட வேண்டும் என்ற நிலையில் அவர்கள் செயல்பாடு இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்யவேண்டும் என்று இருக்கிறது. இந்த சட்டத்தை பயன்படுத்தி சரியான செயல்பாடுகள் இல்லாத அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு கொடுக்கவேண்டும் என்பதில் மோடி அரசாங்கம் மிகவும் மும்முரமாக இருக்கிறது. இப்போது இதற்கான பணிகள் தொடங்கிவிட்டாலும், இதற்கு அடிப்படையான வேலைகள் கடந்த ஆட்சியின்போதே தொடங்கிவிட்டன. இப்போது அரசாங்கம் முடிவு எடுத்த சில நாட்களுக்குள்ளேயே வருமான வரித்துறையில் உயர் பதவிகளில் 12 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டார்கள். இதுமட்டுமல்லாமல், சுங்க இலாகா மற்றும் சரக்கு சேவை பிரிவுகளில் உள்ள 15 உயர் அதிகாரிகளுக்கும் கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. பிரதமரின் நோக்கத்தை செயல்படுத்தும் வகையில், நிதி அமைச்சகம் தன் பணியை வேகமாக தொடங்கிவிட்டது. இதுபோல, மற்ற அமைச்சகங்களும் தங்கள் நடவடிக்கைகளை தீவிரமாக தொடங்கவேண்டும். 

அகில இந்திய பணி அதிகாரிகள் மட்டுமல்லாமல், இந்த நடவடிக்கை மத்திய அரசாங்கத்தில் பணிபுரியும் 48.41 லட்சம் பணியாளர்கள் அனைவர் மீதும் பாயவேண்டும். மத்திய அரசு பணிகளில் மட்டுமல்லாமல், தமிழக அரசிலும் இந்த நடவடிக்கை பாயவேண்டும். பொதுவாக அரசு பணிகளில் வேலைக்கு சேர்ந்துவிட்டால் எப்படி வேலைபார்த்தாலும் மாதச்சம்பளம் கிடைக்கும், ஆண்டுதோறும் தானாக சம்பள உயர்வு வந்துவிடும். குறிப்பிட்ட ஆண்டுகளில் பதவி உயர்வு, பணி ஓய்வு பெற்றபிறகு பென்‌ஷன் கிடைத்துவிடும். எனவே, வேலைபார்த்தால் என்ன, பார்க்காவிட்டாலும் என்ன என்ற உணர்வுகள் அறவே களையப்படவேண்டும். தமிழக அரசு ‘எம்.ஜி.ஆர். பார்முலா’படி, நடவடிக்கை எடுத்தால், அரசு பணிகளில் எளிதாக திறமையற்ற அதிகாரிகளை எடுத்துவிடமுடியும். எம்.ஜி.ஆர் 1977–ல் ஆட்சிக்கு வந்தவுடன் தன் செயலாளர்களிடமும், தலைமை செயலாளரிடமும் ஒரு பட்டியல் கேட்டார். நேர்மையும், திறமையும் கொண்ட அதிகாரிகள் முதல் ரகம். நேர்மையும், திறமையின்மையும் கொண்ட அதிகாரிகள் 2–வது ரகம். நேர்மையின்மையும், திறமையும் கொண்ட அதிகாரிகள் 3–வது ரகம். நேர்மையின்மையும், திறமையின்மையும் கொண்ட அதிகாரிகள் 4–வது ரகம் என்று வகைப்படுத்தி, அதற்கேற்ப அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்ய கூறினார். எம்.ஜி.ஆர். பணி ஒதுக்கீடு செய்ய பயன்படுத்திய பார்முலாவை, தமிழக அரசும் செயல்திறன் இல்லாத அலுவலர்களை பட்டியலிட்டு மத்திய அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைபோல, தமிழக அரசிலும் எடுக்கத்தொடங்கினால் நிர்வாகம் சீர்பெறும். தூய்மை பெறும்.

Next Story