சுகாதாரத்துறையில் பின்தங்குகிறதா தமிழ்நாடு?


சுகாதாரத்துறையில் பின்தங்குகிறதா தமிழ்நாடு?
x
தினத்தந்தி 26 Jun 2019 10:00 PM GMT (Updated: 26 Jun 2019 7:51 PM GMT)

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள்.

நோய் இல்லாத சமுதாயத்தை படைக்கவேண்டுமென்றால், நோய் பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது தொடங்கி, நோய் வந்தால் அதை குணமாக்குவதற்கான சிகிச்சைகளை வழங்கி, குணமாக்குவதுவரை மேற்கொள்ளவேண்டிய பணிகள் மக்கள் நல்வாழ்வுத்துறை பொறுப்பில் இருக்கிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை சீரிய பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்துக்காகத்தான் இந்த ஆண்டு பட்ஜெட்டில் கூட இந்த துறைக்காக ரூ.12,583 கோடியே 83 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், சமீபகாலங்களாக மருத்துவத்துறையில் பல குறைபாடுகள் கூறப்படுகின்றன. கடந்த சிலமாதங்களுக்கு முன்பு ஒரு மருத்துவமனையில் எச்.ஐ.வி. கிருமி ரத்தத்தை ஏற்றி ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கையே கேள்விக்குறியாக்கும் நிலை ஏற்பட்டது.

வசதியில்லாதவர்கள் தங்கள் நம்பிக்கை நட்சத்திரமாக அரசு மருத்துவமனைகளைத்தான் நாடுகிறார்கள். கடந்த 17-ந்தேதி திருப்பூர் மாவட்டத்தில் அலங்கியம் அருகே சுடுகாடு பக்கத்தில் ஏராளமான மாத்திரைகள் தூக்கி எறியப்பட்டிருக்கிறது. இதெல்லாம் கர்ப்பிணிகளுக்கு தமிழக அரசு வழங்கும் இரும்பு சத்து மாத்திரை போன்ற பல்வேறு வகையான மருந்துகளாகும். இந்த மாத்திரைகள் பயன்படுத்தக்கூடிய காலம் அடுத்த ஆண்டுவரை இருக்கிறது. இந்த மருந்துகளை தூக்கி வீசி எறிந்த சுகாதாரத்துறை ஊழியரை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆக, நோயாளிகளுக்கென அதிலும் குறிப்பாக, கர்ப்பிணிகளுக்கு கொடுக்கப்படவேண்டிய மருந்து மாத்திரைகள் ஒழுங்காக அவர்களுக்கு போய்ச்சேருகிறதா என்பதை கண்காணிக்க வேண்டிய அவசர அவசியம் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு வந்துவிட்டது. திட்டக்குழுவுக்கு பதிலாக அமைக்கப்பட்டுள்ள நிதி ஆயோக், நாடு முழுவதும் மக்களுக்கு கிடைக்கும் சுகாதாரத்துறையின் வசதிகள், நோய் எதிர்ப்பு சக்தி உள்பட 23 அம்சங்களின் அடிப்படையில் ஒரு சுகாதார தரவரிசை குறியீட்டு பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசையில் கேரளா முதலிடத்தில் இருக்கிறது. 2-வது இடத்தில் ஆந்திராவும், 3-வது இடத்தில் மராட்டியமும் இருக்கிறது. கடந்த முறை 3-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு இப்போது பெரும் சரிவை அடைந்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்தோடு இணைந்து, உலக வங்கியின் தொழில்நுட்ப உதவிகளையும் பெற்று, நிதி ஆயோக் தயாரித்த பட்டியலில் தற்போது தமிழ்நாடு 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது, அகில இந்திய அளவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3-வது இடம் எங்கே!, 9-வது இடம் எங்கே! நிதி ஆயோக்கின் கணக்குகளும், மதிப்பீடு செய்த முறைகளும் தவறு என்று தமிழக அரசு அதிகாரிகள் சொன்னாலும், மற்ற மாநிலங்கள் இதுபோன்ற குறைபாட்டை சொல்லவில்லை. முதல் 10 இடங்களில் உள்ள மாநிலங்களில், 7 மாநிலங்கள் தாங்கள் ஏற்கனவே கடந்த ஆண்டு இருந்த நிலையைவிட முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தநிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை இன்னும் சீரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்பது ஒருபுறம் இருக்க, மக்களுக்கும் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். மருத்துவத்துறை பணியாளர்களும் தங்கள் கடமையில் இருந்து தவறாத வகையில், அரசின் உதவிகள் மக்களுக்கு போய்ச்சேரவேண்டிய கடமையை பொறுப்புடன் நிறைவேற்றவேண்டும். மக்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் மற்ற எல்லா முன்னேற்றங்களையும் அடையமுடியும். அந்தவகையில் இந்த ஆண்டு 9-வது இடத்தில் இருக்கும் தமிழ்நாடு இதை ஒருபாடமாக எடுத்துக்கொண்டு, இந்த ஆண்டு முழுவதும் முழு விழிப்புடன் செயலாற்றவேண்டும்.

Next Story