தமிழக எம்.பி.க்களின் மெச்சத்தகுந்த செயல்பாடு


தமிழக எம்.பி.க்களின் மெச்சத்தகுந்த செயல்பாடு
x
தினத்தந்தி 27 Jun 2019 10:00 PM GMT (Updated: 27 Jun 2019 6:30 PM GMT)

பா.ஜ.க. 303 இடங்களிலும், பா.ஜ.க. கூட்டணி 353 இடங்களிலும் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்திருக்கிறது.

தமிழ்நாட்டிலிருந்து வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 37 பேர் தி.மு.க.-காங்கிரஸ் எதிர்க்கட்சி கூட்டணியை சேர்ந்தவர்கள். இவர்கள் குரல் நாடாளுமன்றத்தில் எடுபடுமா?, இவர்கள் குரல் வெளியே கேட்குமா?, இவர்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு போய் என்ன பயன்? என்றெல்லாம் அரசியல் விமர்சனங்கள் கூறப்படுகின்றன. ஆனால், நாடாளுமன்றத்தையே உற்றுநோக்கும் வகையில் நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியதிலிருந்து தமிழக எம்.பி.க்களின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது பேசிய டி.ஆர்.பாலு, நீட் தேர்வு, தமிழக தண்ணீர் பிரச்சினை குறித்து தொடர்ந்து பேசிவருகிறார்.

இதே தீர்மானத்தின் மீது பேசிய தயாநிதிமாறன், ‘தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசும், தமிழக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் ஜனாதிபதி கவனம் செலுத்தவேண்டும் என்பதோடு, கூடங்குளம் அணுஉலை பிரச்சினை உள்பட பல விவகாரங்கள் குறித்து பேசினார். கனிமொழி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் பிரச்சினைகள் பாதிப்பு, கோவில் சிலைகள் கணக்கெடுப்பு என்று பல பிரச்சினைகள் குறித்து முழங்குகிறார். தி.மு.க. சார்பில் ஆ.ராசா உள்பட மேலும் சிலரும், மசோதாக்கள் மீதும், கேள்வி நேரத்தின்போதும் தமிழகத்தின் பல பிரச்சினைகளை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். காங்கிரஸ் சார்பிலும் வசந்தகுமார், மாணிக்தாக்கூர் போன்றோர் தமிழக பிரச்சினைகளை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். அ.தி.மு.க. உறுப்பினர் ரவீந்திரநாத் குமாரும் விவாதங்களில் முத்திரை பதித்து வருகிறார். நாள் தவறினாலும் தமிழக எம்.பி.க்கள் அவையில் எழுந்து பேசுவது தவறுவது இல்லை. ஆக, தினமும் நாடாளுமன்ற நடவடிக்கைகளின்போது தமிழக எம்.பி.க்களின் குரல் ஓங்கி ஒலிப்பது மெச்சத்தகுந்ததாக உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, அரக்கோணம் தொகுதி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரான ஜெகத்ரட்சகன், ‘ஒருபடி மேலே சென்று பிரதமரை நேரில் சந்திக்க நேரம் கேட்டு வாங்கி ஒரு மனுவை கொடுத்து, தமிழ்நாட்டுக்கு குறிப்பாக அரக்கோணம் தொகுதிக்கான பல திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணும் விதமாக கோதாவரி- கிருஷ்ணா நதியிலிருந்து பாலாற்றுக்கு தண்ணீர் கொண்டுவரவேண்டும், மழைநீர் சேகரிப்பு திட்டத்துக்கு மிகப்பெரிய அளவில் புத்துயிர் கொடுக்க வேண்டும், மழைநீரை சேமித்து வைக்கும் வகையிலும், நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்கும் வகையிலும், ஏரிகள்-குளங்களை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும்’ என்பது போன்ற பல யோசனைகளை வழங்கியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் ஆற்றும் உரைகள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல பிரதமரை சந்தித்து அளிக்கும் மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது அந்த உறுப்பினருக்கு நிச்சயமாக பிரதமர் அலுவலகத்திலிருந்து பதில் வரும். எனவே, நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடக்கத்தில் காட்டும் வேகத்தை, 5 ஆண்டு முழுவதும் இன்னும் அதிகப்படுத்தி மக்கள் நலப்பணிகளுக்காக பிரதமரையும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களையும் நேரில் சந்தித்து தமிழகத்துக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான கோரிக்கைகளை கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் தொடர்ந்து வலியுறுத்தி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பாராட்டையும் பெறவேண்டும்.

Next Story