மரம் வளம் பெருகினால்தான் மழை வரும்


மரம் வளம் பெருகினால்தான் மழை வரும்
x
தினத்தந்தி 28 Jun 2019 11:00 PM GMT (Updated: 2019-06-28T19:24:12+05:30)

நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கடந்த ஒரு ஆண்டில் இந்தியாவின் வனப்பரப்பு ஒரு சதவீதம் அதாவது, 24.39 சதவீதமாக உயர்ந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

 வளர்ச்சி பணிகளுக்காக ஒரு மரம் வெட்டப்பட்டால் அதே இடத்திலோ அல்லது வேறு இடங்களிலோ 3, 4 மரங்கள் நடப்படுகின்றன. இப்போதும் நெடுஞ்சாலைகளில் பசுமை அடர்த்தியை உருவாக்குவதற்காக, நாடு முழுவதும் 125 கோடி மரக்கன்றுகள் நடப்படும் என்று அறிவித்துள்ளார். பிரகாஷ் ஜவடேகர் கூறிய தகவலை மேனகா காந்தி மறுத்துள்ளார். ஏனெனில், செயற்கைகோள் மூலம் எடுக்கப்படும் படங்களை வைத்துதான் மந்திரி இந்த தகவலை தெரிவிக்கிறார். செயற்கைகோள் மூலமாக படம் எடுக்கும்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பும் மரங்களின் எண்ணிக்கையோடு சேரும் என்று தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கு வாய்ப்பில்லை என்று பிரகாஷ் ஜவடேகர் கூறினாலும், இதுகுறித்து மத்திய அரசாங்கம் தீவிரமாக ஆராயவேண்டும். 

தமிழக அரசை பொறுத்தமட்டில், வனப்பரப்பு மிகக்குறைவாகவே இருக்கிறது. பொதுவாக ஒரு நாட்டின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு சதவீதம் அதாவது, 33.33 சதவீதம் வனப்பரப்பு இருக்கவேண்டும் என்பதுதான் நியதி. ஆனால், தமிழ்நாட்டில் மொத்த புவியியல் வனப்பரப்பு 17.59 சதவீதம்தான் இருக்கிறது. மொத்த வனம் மற்றும் மர அடர்த்தியை கணக்கில் கொண்டால், 23.72 சதவீதம்தான் இருக்கிறது. ஆக, மழை வளம் பெருகவேண்டுமென்றால், வனப்பரப்பையும், மரஅடர்த்தி பரப்பளவையும் போர்க்கால அடிப்படையில் அதிகரிக்கவேண்டியது அவசர அவசிய நடவடிக்கையாகும். தமிழ்நாட்டில் வளர்ச்சி பணிகளுக்காக மரம் வெட்டும்போது நிச்சயமாக ஒன்றுக்கு 10 என்ற விகிதத்தில் மரக்கன்றுகளை நடுவதோடு மட்டுமல்லாமல், அந்த கன்றுகள் எல்லாம் மரமாக வளர்வதற்கு அந்தந்த துறைகளே பொறுப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். 23.03.2012–ம் ஆண்டு ஜெயலலிதாவின் வயது 64 என்பதால், 64 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கிவைத்தார். வனத்துறையின் சார்பில் மாவட்டத்துக்கு 2 லட்சம் மரக்கன்றுகள் வீதம், 32 மாவட்டங்களிலும் 64 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று அப்போது அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து ஆண்டுதோறும் அவரது வயதை குறிக்கும் வகையில் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நடப்படுகின்றன. அந்த கணக்குப்படி பார்த்தால் இதுவரை 5 கோடியே 41 லட்சம் மரக்கன்றுகள் தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி நடப்பட்டிருக்க வேண்டும். 

இதுதவிர, உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. தனியாரும் ஆங்காங்கு நிறைய மரக்கன்றுகளை நட்டு வருகிறார்கள். ஆனால், இந்த மரக்கன்றுகள் எல்லாம் நடப்படுகிறதே தவிர, முறையான பராமரிப்பு இல்லாமல் காய்ந்து விடுகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒரேஇடத்தில் ஏற்கனவே நடப்பட்ட மரக்கன்றுகளை காணாதநிலையில், 3 கலெக்டர்கள் மாறிமாறி மரக்கன்றுகளை நட்டு இருக்கிறார்கள். ஆகவே, இனி மரக்கன்றுகள் நட்டோம் என்பதில் மட்டும் பெருமைகொள்ளாமல், தங்கள் கடமை அதோடு முடிந்துவிட்டது என்று எண்ணாமல், நட்ட மரக்கன்றுகளை பராமரிக்கும் பணிகளை அந்தந்த துறைகளும், தனியாரும், மாவட்ட நிர்வாகங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி நடும் மரக்கன்றுகளில் 75 சதவீதம் உயிர்பிழைத்தால் தமிழ்நாடு மரம்வளம் கொண்ட மாநிலமாக, பசுமை போர்த்தப்பட்ட மாநிலமாக, எல்லாவற்றுக்கும் மேலாக மழைவளம் மிக்க மாநிலமாக, நீர்வளம் குன்றாத மாநிலமாக, செழிப்பு நிறைந்த மாநிலமாக மாறிவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.

Next Story