சாலை விபத்துகளை குறைக்க சரியான நடவடிக்கை


சாலை விபத்துகளை குறைக்க சரியான நடவடிக்கை
x
தினத்தந்தி 30 Jun 2019 10:30 PM GMT (Updated: 2019-06-30T17:30:10+05:30)

சாலை பயணம் என்பது மகிழ்ச்சிகரமான பயணமாக இருக்கவேண்டும். ஆனால், பல நேரங்களில் புறப்படுவது சரி, போகும் இடத்துக்கு போய்ச்சேர்ந்தால்தான் நிச்சயம் என்று அச்சப்படும் வகையில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.

சாலை பயணம் என்பது மகிழ்ச்சிகரமான பயணமாக இருக்கவேண்டும். ஆனால், பல நேரங்களில் புறப்படுவது சரி, போகும் இடத்துக்கு போய்ச்சேர்ந்தால்தான் நிச்சயம் என்று அச்சப்படும் வகையில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. 2017–ம் ஆண்டு மட்டும் இந்தியாவில் சாலை விபத்துகளில் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 903 பேர் உயிர் இழந்தனர். உயிர் இழப்பில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருந்தது. தமிழ்நாட்டில் மட்டும் 16,157 பேர் உயிர் இழந்தனர். தமிழக அரசின் உள்துறை கடந்த ஜனவரி மாதத்துக்கான சாலை விபத்துகள் தொடர்பாக நடத்திய ஆய்வில் சென்னை நகரம், காஞ்சீபுரம், சேலம், விழுப்புரம், கோவை, கடலூர், வேலூர், ஈரோடு, திருநெல்வேலி, மதுரை ஆகிய 10 மாவட்டங்களும் அதிக அளவில் சாலை விபத்துகள் நடந்த மாவட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

நீதிபதிகள் என்.கிருபாகரன், 2ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கின் தீர்ப்பின்போது, ‘மோட்டார் வாகனம் ஓட்டும் ஒவ்வொருவரையும் கையெடுத்து கும்பிட்டுக்கேட்டுக்கொள்கிறோம். சாலைகளில் நீங்கள் வாகனங்களை ஓட்டும்போது வேகமாகவோ, அலட்சியமாகவோ ஓட்டவேண்டாம். ஏனெனில், இதனால் ஏற்படும் விபத்துகளில் உங்கள் குடும்பத்துக்கு மட்டும் துயரமல்ல, விபத்தில் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் துயரம்’ என்று மிகவும் உருக்கமாக கூறியுள்ளனர். அந்தவகையில், சாலை விபத்துகளை குறைக்கவேண்டுமென்றால், வாகன ஓட்டிகள் கவனமாக இருக்கவேண்டும் என்ற வகையில், 18 மாநிலங்களின் பரிந்துரைகளோடும், நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையோடும் மோட்டார் வாகன சட்டத்தில் ஒரு திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. கடந்த நாடாளுமன்றத்தில் இந்த திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், நாடாளுமன்றத்தின் காலம் முடிவடைந்தநிலையில், மக்களவையில் மட்டும் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாத வகையில், இப்போது மீண்டும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்டது. 

எனவே, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துவிட்டது. எந்தநேரத்திலும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நிலையிலுள்ள இந்த புதிய திருத்த மசோதாப்படி இதுவரையில் ஆம்புலன்ஸ், தீயணைக்கும்படை, போலீஸ் போன்ற அவசரமாக செல்லவேண்டிய வாகனங்களுக்கு வழிவிடவில்லை என்றால் அபராதம் எதுவும் விதிக்க சட்டத்தில் வகையில்லாமல் இருந்தது. இந்த திருத்த மசோதாப்படி அப்படிப்பட்ட வாகனங்களுக்கு வழிவிடவில்லை என்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டினால் இப்போது விதிக்கப்படும் ரூ.100–க்கு பதிலாக, ரூ.1,000 அபராதமும், மூன்று மாதங்களுக்கு லைசென்சும் ரத்து செய்யப்படும். குடிபோதையில் வாகனம் ஓட்டினால் இந்த புதிய சட்டப்படி ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இதுபோல, அதிக வேகத்தில் சென்றால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். 

இதுபோல ஒவ்வொரு மோட்டார் வாகன குற்றங்களுக்கும் அபராதத்தொகை பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. நிச்சயமாக இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதாகும். இது சாலை போக்குவரத்து விதிமீறல்களை வெகுவாக குறைக்கும். ஆனால், இதை நடைமுறைபடுத்துவதில் போக்குவரத்து போலீசாரும், போக்குவரத்துத்துறையினரும் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டும். இதில் ஊழலுக்கு சிறிதும் இடமிருக்கக்கூடாது. ஊழல் இல்லாமல் இந்த புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் அமலுக்கு வந்தால், மோட்டார் வாகன விபத்துகள் குறையும். உயிர் இழப்புகள் குறையும். காயமடைவது குறையும். அப்படிப்பட்ட நிலையில், சாலை போக்குவரத்து என்பது மிகவும் இனிமையான ஒன்றாக இருக்கும்.

Next Story