ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு


ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு
x
தினத்தந்தி 1 July 2019 11:00 PM GMT (Updated: 2019-07-01T22:28:04+05:30)

பா.ஜ.க. அரசாங்கம் பொறுப்பேற்றதிலிருந்து ‘ஒரே நாடு ஒரே வரி’ என்ற முறையில் சரக்கு சேவைவரி அமல்படுத்தப்பட்டது. மருத்துவக்கல்லூரி அனுமதிக்காக நாடு முழுவதும் ஒரே ‘நீட்’ தேர்வு வந்தது.

தொடர்ந்து ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என பேசப்பட்டு வருகிறது. இப்போது 2020-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி முதல் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ முறையை அமலுக்கு கொண்டுவரப்போகிறது.

தற்போது எல்லா மாநிலங்களிலும் பொதுவினியோக முறை அந்தந்த மாநில அளவில் தனியாக ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு அத்தியாவசிய பண்டங்கள் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு மாறுதலாகி சென்றாலோ அல்லது பிழைப்புக்காக வேலைதேடி வேறு மாநிலத்துக்கு சென்றாலோ, ரேஷன் கார்டு இல்லாமல் பெரும் தவிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது. இந்த நிலையை தவிர்க்க, ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கடை’ என்ற முறையை கொண்டுவந்து, அதன்மூலம் ஒரு ரேஷன் கார்டை வைத்துக்கொண்டு இந்தியாவில் எந்த மாநிலத்திலும், எந்த ரேஷன் கடைக்கும் சென்று பொருட்களை வாங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஒருவேளை குடும்பத்தை தன் சொந்த மாநிலத்தில் வைத்துவிட்டு, தான் மட்டும் தனியாக வேறுமாநிலத்துக்கு சென்று வேலைபார்ப்பவர்கள் அந்த கார்டை வைத்துக்கொண்டு 50 சதவீத பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்று இருக்கிறது.

இப்போது தமிழ்நாட்டை பொறுத்தவரையில், ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் எந்த கடையில் வாங்கலாம் என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த கடையை தாண்டி வேறு கடைக்கு சென்று வாங்கமுடியாது. ஆந்திரா, குஜராத், அரியானா, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மராட்டியம், ராஜஸ்தான், தெலுங்கானா, திரிபுரா போன்ற மாநிலங்களில் ரேஷன் கார்டை எடுத்துக்கொண்டு எந்த கடைக்கு வேண்டுமானாலும் சென்று பொருட்களை வாங்க வசதி இருக்கிறது. இப்போது புதிய முறைப்படி சொந்த மாநிலத்திலும் எங்கேயும், எந்த ரேஷன் கடையிலும் வாங்கிக்கொள்ளலாம். இந்தியாவில் எந்த மாநிலத்துக்கும் சென்று பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். தமிழ்நாட்டில் 20 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வெளிமாநிலத்தவர் வந்து ரேஷன் கார்டை காட்டி பொருட்களை வாங்கவிரும்பினால், தமிழக அரசு செலவில் அவர்களுக்கும் எப்படி இலவச அரிசி வழங்கமுடியும்? என்று கேள்வி எழுந்தது. ஆனால், இதற்கும் மத்திய அரசாங்கம் ஒரு விடையை தெரிவித்துவிட்டது. இப்படி வெளிமாநிலத்துக்கு வந்து ரேஷன் கடைக்கு செல்பவர்கள் தமிழக அரசு வழங்குவதுபோல 20 கிலோ அரிசியை பெறமுடியாது. மாற்றாக மத்திய அரசாங்கத்தின் நலத்திட்டத்தின்கீழ் ஒருகிலோ அரிசி ரூ.3-க்கும், ஒருகிலோ கோதுமை ரூ.2-க்கும் பெற்றுக்கொள்ளலாம் என்று இருக்கிறது. தமிழ்நாடு, இமாசலபிரதேசம், மத்தியபிரதேசம், காஷ்மீர், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் அனைத்து நியாயவிலை கடைகளிலும் விற்பனை முனைய எந்திரங்கள் இருப்பதால், இந்த திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற எந்த தடையும் இருக்காது என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்று எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இது மாநில உரிமையை பறிக்கும் செயல் என்று குற்றம்சாட்டுகின்றன. இது மக்களுக்கு ஓரளவு பயனளிக்கும் திட்டம் என்றாலும், இந்தத்திட்டம் மாநில அரசின் உரிமைகளை பறிக்கக்கூடாது. தமிழக அரசும் உரிமைகளை விட்டுக்கொடுக்கக்கூடாது.


Next Story