மக்கள்தான் முழுவீச்சில் இறங்கவேண்டும்


மக்கள்தான் முழுவீச்சில் இறங்கவேண்டும்
x
தினத்தந்தி 3 July 2019 10:30 PM GMT (Updated: 3 July 2019 2:32 PM GMT)

தமிழகத்தில் நிலவும் கடுமையான வறட்சி ஒட்டு மொத்த இந்தியாவை மட்டுமல்ல, உலகத்தையே கருணையோடு பார்க்க வைத்துள்ளது.

மிழகத்தில் நிலவும் கடுமையான வறட்சி ஒட்டு மொத்த இந்தியாவை மட்டுமல்ல, உலகத்தையே கருணையோடு பார்க்க வைத்துள்ளது. எந்த அளவுக்கு இது உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாக, டைட்டானிக் படத்தில் நடித்து புகழ்பெற்ற ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகேப்ரியோ, பி.பி.சி. உலக செய்திகளில் தமிழ்நாடு குறிப்பாக சென்னையில் நிலவும் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை பார்த்து ‘மழை’ மட்டுமே இந்த சூழ்நிலையிலிருந்து சென்னையை காப்பாற்ற முடியும் என்று தலைப்பிட்டு டுவிட்டரில் ஒரு செய்தியை பதிவு செய்துள்ளார். வறட்சியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையெல்லாம் விரிவாக விளக்கி இறுதியில் அதிகாரிகள் தண்ணீருக்காக மாற்று வழிகளை தேடி முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், மக்கள் மழைக்காக பிரார்த்தனை செய்துகொண்டு இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

தமிழக அரசும் மிக தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒருபக்கம் பருவமழை பொய்த்ததால் ஏற்பட்டுள்ள நிலை என்றாலும், மற்றொரு பக்கம் நிலத்தடி நீர்மட்டம் வெகு ஆழத்துக்கு போய்விட்டது என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும். ஆறுகளில் மணல் கொள்ளை அடிக்காமல் இருந்தால் ஏரி, குளங்கள் எல்லாம் முறையாக தூர்வாரப்பட்டிருந்தால் நிச்சயமாக தண்ணீர் கொஞ்சமாவது எல்லா நீர்நிலை களிலும் இப்போது இருந்திருக்கும். இவ்வளவு கடுமை யான வறட்சியிலும் ஒருசில கிராமங்களில் மக்களே தூர்வாரும் பணிகளை மேற்கொண்ட குளங்களில் இப்போதும் தண்ணீர் இருக்கிறது. சென்னை திருவான்மியூரில் உள்ள அருள்மிகு மருந்தீஸ்வரர் கோவிலில் உள்ள 2 குளங்களிலும் தலா 10 அடி, 5 அடி தண்ணீர் இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கோவில் குளங்கள் தூர்வாரப்பட்டதும், மழை பெய்தால் குளத்துக்குள் தண்ணீர் வந்துவிழும் வகையில் சீரமைக்கப்பட்டதும்தான் இதற்கு காரணம். ஆக, தமிழ்நாட்டில் உள்ள 39,202 ஏரிகள், எண்ணற்ற சிறுசிறு குளங்கள், குட்டைகள் எல்லாம் இப்போதுள்ள வறண்ட நிலையில் தூர்வாரினால் நிச்சயமாக எதிர்காலத்தில் இப்படியொரு வறட்சி தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வழியே இல்லை. 

2017–18–ம் ஆண்டு குடிமராமத்து திட்டத்தின் வாயிலாக 1,511 ஏரிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, 1,311 ஏரிகள் தூர்வாரப்பட்டிருக்கிறது. எஞ்சிய ஏரிகளையும் தூர்வார அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் அவர்களாகவே முன்வந்து அந்தந்த பகுதியில் இருக்கிற ஏரிகள், குளங்களை தூர்வார முன்வருகிறபோது, அந்தந்த பகுதிகளில் இருக்கிற தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர்களிடம் அனுமதிப்பெற்று பணிகளை தொடங்கலாம் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். எல்லாமே அரசுதான் செய்யவேண்டும் என்று நினைக்காமல், மறைந்த கலைஞர் கருணாநிதி தொடங்கிய ‘நமக்கு நாமே’ திட்டத்தைபோல, இந்த தூர்வாரும் பணிகளை சமுதாயமே கையில் எடுத்துக்கொண்டு செய்ய வேண்டும். ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் நாங்கள் இத்தனை நீர்நிலைகளை தத்தெடுத்து தூர்வாரும் பணிகளை மேற்கொள்கிறோம் என்று கூறி மற்றவர் களுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும். இதேபோல, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பிறருக்கு உதவும் தாராள குணம் கொண்டவர்கள், நடிகர்–நடிகைகள் மற்றும் சமுதாயத்தில் எல்லோராலும் மதிக்கக்கூடிய உயர்ந்தவர்கள் எல்லோரும் ஆளுக்கொரு நீர்நிலை யாவது தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்பதையே தமிழ்நாடு எதிர்பார்க்கிறது. இனியும் இப்படியொரு வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு வரவேண்டாம்.  

Next Story