அடிக்கல் நாட்டுவதற்கு 6 ஆண்டுகளா?


அடிக்கல் நாட்டுவதற்கு 6 ஆண்டுகளா?
x
தினத்தந்தி 4 July 2019 10:30 PM GMT (Updated: 4 July 2019 2:03 PM GMT)

சட்டசபையில் 110–வது விதியின்கீழ் அறிவிக்கும் அறிவிப்புகள் என்பது எந்தவித முன்அறிவிப்பும் இல்லாமல் அவசர அவசியம் கருதி எந்த நேரத்திலும் வெளியிடலாம்.

ட்டசபையில் 110–வது விதியின்கீழ் அறிவிக்கும் அறிவிப்புகள் என்பது எந்தவித முன்அறிவிப்பும் இல்லாமல் அவசர அவசியம் கருதி எந்த நேரத்திலும் வெளியிடலாம். 110–வது விதியின்கீழ் வெளியிடும் அறிவிப்புகளுக்கு ஜெயலலிதா காலத்தில் அதிக முக்கியத்துவம் இருந்தது. ஜெயலலிதா எழுந்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110–ன் கீழ் அறிக்கை வெளியிடுகிறேன் என்று தொடங்கினாலே, அவையே உன்னிப்பாக கவனிக்கும். அந்தவகையில் கடந்த 16.4.2013 அன்று அவர் சட்டசபையில் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில், பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப, சென்னை மாநகரின் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் வகையில், நெம்மேலியில் தற்போது நிறுவப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்துக்கு அருகில் காலியாக உள்ள 10.50 ஏக்கர் நிலத்தில் ரூ.1,000 கோடி மதிப்பில் கூடுதலாக நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன்கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் ஒன்று அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், சென்னைக்கு அருகில் உள்ள பட்டிபுலம் பகுதியில் எதிர்காலத்தில் 400 மில்லியன் லிட்டர் வரை விரிவாக்கம் செய்யக்கூடிய வகையில், 200 மில்லியன் லிட்டர் திறன்கொண்ட கடல்நீரை நன்னீராக்கும் நிலையம் ஒன்றினை 4 ஆண்டுக்குள் அமைத்திட எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவித்தார்.

ஏற்கனவே புதிய வீராணம் திட்டத்தின் மூலம் 180 எம்.எல்.டி. தண்ணீர் சென்னைக்கு வருகிறது. நெம்மேலியிலும், மீஞ்சூரிலும் தொடங்கப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின்கீழ் தலா 100 எம்.எல்.டி. வீதம் 200 எம்.எல்.டி. தண்ணீர் கிடைக்கிறது. இப்போது இந்த 150 எம்.எல்.டி. தண்ணீரையும், அடுத்த 4 ஆண்டுக்குள் கிடைக்கும் 200 எம்.எல்.டி. தண்ணீரையும் சேர்த்தால் சென்னை நகருக்கு தண்ணீர் பஞ்சமே இருக்காது என்று மக்கள் மிக மகிழ்ச்சியோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள் உடனடியாக அமலுக்கு வந்துவிடும் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில், 150 எம்.எல்.டி. கடல்நீரை நன்னீராக்கும் திட்டமே 6 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 27.6.2019 அன்றுதான் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டுவதற்கு 6 ஆண்டுகள் ஆவதற்கு காரணம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்கு ஆன 2 ஆண்டுகளும், டெண்டர் நடைமுறைக்கு எதிராக போடப்பட்ட வழக்குகளும்தான். அடுத்த 400 எம்.எல்.டி. திட்டத்துக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க இப்போதுதான் ஒரு நிர்வாக ஆலோசகர் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகளை முடிக்கவே நவம்பர் மாதமாகிவிடும். 2020–ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் பணி ஆணை வழங்கப்படும். அந்த பணிகளை முடிக்க 3½ ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள்.

எந்தவொரு திட்டமும் முதல்–அமைச்சராலோ, அரசாலோ அறிவிக்கப்பட்டால் அதை நிறைவேற்ற முட்டுக்கட்டையாக சிவப்பு நாடா முறை இருக்கக்கூடாது. எல்லா அறிவிப்புகளையும் வேகமாக செயல்படுத்த அதற்கென தனி அதிகாரிகளை நியமித்து உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்பதைத்தான் இந்த தாமதம் காட்டுகிறது. இந்த இரு திட்டங்களை மட்டுமல்லாமல், கடலோர மாவட்டங்களில் இதுபோன்ற நிலையங்களை அமைப்பதற்கு ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது என்ற அறிவிப்பையும் இனியும் தாமதம் இல்லாமல் நிறைவேற்ற வேண்டும்.

Next Story