பெட்ரோல்–டீசலுக்கு கூடுதல் வரியா?


பெட்ரோல்–டீசலுக்கு கூடுதல் வரியா?
x
தினத்தந்தி 5 July 2019 10:30 PM GMT (Updated: 5 July 2019 2:10 PM GMT)

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கம் 2–வது முறையாக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தபிறகு முதல் பட்ஜெட்டை நேற்று பெண் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கம் 2–வது முறையாக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தபிறகு முதல் பட்ஜெட்டை நேற்று பெண் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் எதிர்கால முன்னேற்றத்தை அடிப்படையாக வைத்து பொருளாதார வளர்ச்சிக்கும், குறிப்பாக மின்சார வாகனங்கள் உற்பத்தியில் இந்தியாவை உலக கேந்திரமாக மாற்றவும், தொழில் வளர்ச்சிக்கும், விவசாய வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு பெருகவும், உற்பத்தி பெருகவும், ஏழ்மை ஒழிவதற்குமான பல திட்டங்களை கொண்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்கும், ஊரக பொருளாதாரம் மேம்படவும், பெண்கள் முன்னேற்றத்துக்கும் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 

ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும் அறிவிப்புகளைக் கொண்ட ஒரு சிறந்த பட்ஜெட்டை வெளியிட்ட நிர்மலா சீதாராமன், வரி அறிவிப்புகளை தொடங்கும் முன்பு பண்டைய காலத்து தமிழக மன்னன் அறிவுடை நம்பியிடம் சென்ற பிசிராந்தையர் அரசன் சிறப்படைய பாடிய பாடல்களில் உள்ள சில வரிகளை கூறிவிட்டு, ‘‘யானைக்கு ஒரு வயலில் சிறு இடத்தில் விளைந்த நெல்லில் இருந்து தயாரிக்கப்படும் உணவே போதுமானது. அதற்கு பதிலாக யானையை வயலில் விட்டால் ஒட்டுமொத்த வயலையே மிதித்து துவம்சம் செய்துவிடும்’’ என்பதுதான் அந்த பாட்டின் பொருள். அந்த யானை போல வரிவசூலில் ஈடுபடமாட்டோம் என்று சொல்லிவிட்டு வரிவிதிப்பை சொல்லத் தொடங்கினார். தனிநபர் வருமானவரியில் எந்த மாற்றத்தையும் அறிவிக்கவில்லை. தற்போது நிறுவனங்களின் வரிகளில் ஆண்டுக்கு ரூ.250 கோடி வரை வரவு உள்ள நிறுவனங்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இந்த வரியை இப்போது ரூ.400 கோடி வரை வரவு உள்ள நிறுவனங்களுக்கு விரிவாக்கம் செய்திருப்பது நிச்சயமாக நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும்.  ஆக, 99.03 சதவீத நிறுவனங்களுக்கு இனி  25 சதவீதம்தான் வரி விதிக்கப்படும். 

தனிநபர் வருமானத்தை பொறுத்தமட்டில், ரூ.2 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 3 சதவீதமும், ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 7 சதவீதமும் வருமானவரியில் ‘சர்சார்ஜ்’ அதாவது கூடுதல்வரி விதிப்பது நிச்சயமாக முறையாக வரி கட்டுபவர்களுக்கு விழுந்த சுமையாகத்தான் கருதப்படும். ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வங்கியில் இருந்து பணம் எடுத்தால் 2 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறார்கள். இதுவும் பணபரிமாற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எல்லாவற்றுக்கும் மேலான பாதிப்பு என்னவென்றால், ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல்–டீசலுக்கு தலா ஒரு ரூபாய் சிறப்பு கூடுதல் கலால் வரி மற்றும் சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேல்வரி என்று விதிக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக சாதாரண இருசக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்களில் இருந்து எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படும். மேலும் விலை உயர்வுக்கும் வழிவகுக்கும். தங்கம் மற்றும் விலை உயர்ந்த உலோகங்களுக்கு இப்போது விதிக்கப் பட்டுள்ள 10 சதவீத சுங்கவரி, 12.5 சதவீதமாக உயர்த்தியிருப்பது நிச்சயமாக கடத்தல் தங்கத்திற்கு ஊக்கம் அளிக்கும். மொத்தத்தில், நாட்டின் வளத்துக்காக நல்ல பல திட்டங்களை அறிவித்தபிறகு, பெட்ரோல்–டீசலுக்கு ஒரு ரூபாய் வரி என்று விதித்திருப்பதை தவிர்த்து இருக்கலாமே? என்பதுதான் பொதுமக்களின் கருத்தாக உள்ளது.  

Next Story