தமிழ்நாட்டுக்கு என கேட்டு பெறவேண்டும்


தமிழ்நாட்டுக்கு என கேட்டு பெறவேண்டும்
x
தினத்தந்தி 7 July 2019 10:30 PM GMT (Updated: 7 July 2019 11:52 AM GMT)

இரண்டாவது முறையாக பதவி ஏற்ற பா.ஜ.க. அரசின் முதல் பட்ஜெட் உரையை தமிழ்நாட்டை சேர்ந்த பெண் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இடையில் தண்ணீர் கூட குடிக்காமல் 2 மணி நேரம் 17 நிமிடங்கள் வாசித்தார்.

ரண்டாவது முறையாக பதவி ஏற்ற பா.ஜ.க. அரசின் முதல் பட்ஜெட் உரையை தமிழ்நாட்டை சேர்ந்த பெண் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இடையில் தண்ணீர் கூட குடிக்காமல் 2 மணி நேரம் 17 நிமிடங்கள் வாசித்தார். புறநானூறு பாடலின் வரிகளைக்கூறி, பட்ஜெட்டில் தமிழ் மணம் கமழ செய்த நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டுக்கு என குறிப்பாக எதையும் அறிவிக்கவில்லை. 

பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழகத்தின் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசின் சார்பில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தார். மழைநீர் சேமிப்பு அமைப்புகளை ஏற்படுத்துவதற்கும், நீர்நிலைகளை முறையாக பராமரிப்பதற்கும், நீர் சேகரிப்பை மேம்படுத்த பெருவாரியான மக்கள் பங்கேற்கக்கூடிய வகையில் ‘தூய்மை இந்தியா திட்டம்’ போன்ற ஒரு திட்டத்தை கணிசமான நிதி ஆதாரங்களோடு அறிமுகப்படுத்த கருதலாம். விவசாயிகளின் துயர் துடைப்பதற்கும், விவசாய பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், மராட்டிய மாநிலத்திற்கு ஒதுக்கீடு செய்தது போல, தமிழகத்திற்கும் சிறப்பு தொகுப்பு நிதியாக ரூ.1,000 கோடி ஒதுக்கவேண்டும். கோதாவரி–காவிரி இணைப்பு திட்டத்திற்கு தேவையான நிதியை வரவு–செலவு திட்டத்தில் மேற்கொள்ள வேண்டும். கஜா புயல் பாதிப்பினால் வீடு இழந்து நிற்கும் மக்களுக்கு 2 லட்சம் கூடுதல் வீடுகளை கட்ட பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கவேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 

ஆனால் தமிழ்நாட்டிற்கு என தனியாக குறிப்பிட்டு எந்த அறிவிப்புகளும் வெளிவரவில்லை என்றாலும், பொதுவான அறிவிப்புகள் பல அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சத்து 25 ஆயிரம் கிலோமீட்டர் சாலைகள் மேம்படுத்தப்படும். 2022–ம் ஆண்டிற்குள் ஏழை மக்களுக்காக 1 கோடியே 95 லட்சம் வீடுகள் கட்டப்படும். 1 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். வேளாண் சார்ந்த ஊரக தொழிற்துறையில் 75 ஆயிரம் தொழில் முனைவோரை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும், உலகதர கல்வி நிறுவனங்கள் அமைப்பு என்பது உள்பட உள்கட்டமைப்பு வசதிகள், நீர் பாதுகாப்பு, மெட்ரோ இணைப்பு, 10 ஆயிரம் விவசாய உற்பத்தியாளர்கள் மையம் அமைக்கப்படும் என்பது போன்ற பல பொதுவான அறிவிப்புகளுக்காக கணிசமாக நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக எம்.பி.க்கள் மக்களவையிலும் சரி, மாநிலங்களவையிலும் சரி, அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஒன்றாக குரல் எழுப்பி பொதுவாக அறிவிக்கப்பட்ட திட்டங்களில் தமிழகத்திற்கு பெரும் பங்கை பெற வாதாடவேண்டும். சேலம் உருக்காலையை தனியாருக்கு ஒப்படைக்கும் முயற்சியை கைவிடவேண்டும் என்று வலியுறுத்த முதல்–அமைச்சர், பிரதமரை சந்தித்து பேசவேண்டும். அவருடன் சென்று வலியுறுத்த தி.மு.க., காங்கிரஸ் எம்.பி.க்கள் தயாராக இருக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் சொன்னதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் ஆகிய அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து பிரதமரையும், அந்ததுறை சம்பந்தப்பட்ட மந்திரியையும் சந்தித்து அழுத்தம் கொடுப்போம் என்று சட்டசபையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கூறியதுபோல, பட்ஜெட் பதில் உரையிலும், தொடர்ந்து தாக்கல் செய்யப்பட இருக்கிற மானியக்கோரிக்கையிலும் தமிழ்நாட்டுக்காக நிறைய அறிவிப்புகளை பெறுவதற்கு தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ஒன்றாக குரல் கொடுத்து பெறவேண்டும் என்பதையே தமிழ்நாடு விரும்புகிறது.

Next Story