தமிழ்நாடு முழுவதும் மழைநீர் சேகரிப்பு வசதிகள்


தமிழ்நாடு முழுவதும் மழைநீர் சேகரிப்பு வசதிகள்
x
தினத்தந்தி 9 July 2019 10:00 PM GMT (Updated: 9 July 2019 3:30 PM GMT)

இன்றைய காலக்கட்டத்தில் மழைநீர் சேமிப்பு என்பதுதான் அரசாங்கத்தாலும் பொதுமக்களாலும் முனைப்போடு செயல்படுத்தவேண்டிய ஒன்றாகும்.

சென்னை உள்பட தமிழ்நாட்டில் நிலவும் கடும் வறட்சி, குடிநீர் பற்றாக்குறை நிலைமை எதிர்காலத்தில் வரக்கூடாது என்றால், அடுத்த பருவமழையில் கிடைக்கும் தண்ணீர் ஒரு சொட்டுக்கூட வீணாகக்கூடாது, சேமித்து வைக்கப்படவேண்டும். மழைத்துளி மழைத்துளி எல்லாம் மண்ணில் சங்கமம் ஆகவேண்டும். அந்த கருத்தைத்தான் பிரதமரும் இப்போது வலியுறுத்தி வருகிறார். கடந்த 30.6.2019 அன்று அவர் வானொலியில் ஆற்றிய ‘‘மனதில் குரல்’’ நிகழ்ச்சியில் தண்ணீரை சேமிப்பதற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். ஆண்டு முழுவதிலும் மழை காரணமாக கிடைக்கப்பெறும் நீரில் வெறும் 8 சதவீதம் மட்டுமே நமது தேசத்தில் சேமித்து வைக்கப்படுகிறது என்று கூறியிருக்கிறார்.

ஆக, இன்றைய காலக்கட்டத்தில் மழைநீர் சேமிப்பு என்பதுதான் அரசாங்கத்தாலும் பொதுமக்களாலும் முனைப்போடு செயல்படுத்தவேண்டிய ஒன்றாகும். தமிழ்நாட்டில் இப்போது மழைநீர் சேகரிப்பு தொடர்பான முயற்சிகள் சென்னையில் மிகத்தீவிரமாக தொடங்கப்பட்டுள்ளன. 2003–ம் ஆண்டு மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, அனைத்து வீடுகள், அரசு கட்டிடங்கள், தனியார் கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அவசியம் என்ற வகையில் ஒரு சட்டத்திருத்தத்தை கொண்டுவந்தார். ஆரம்பரத்தில் மிகத்தீவிரமாக செயல்படுத்தப்பட்ட இந்தத்திட்டம் காலப்போக்கில் தொய்வடைந்தது. 

இப்போது அமைச்சர் வேலுமணி, ‘‘சென்னை மாநகராட்சியில் மழைநீர் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்யவும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்படாத கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கவும், வார்டு உதவி பொறியாளர், குடிநீர் உதவி பொறியாளர், வரி வசூலிப்பவர், குடிநீர் பணிமனை மேலாளர், சுகாதார ஆய்வாளர் ஆகிய 5 நபர்களை கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலர் தலைமையிலும், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய வட்டார பொறியாளர் தலைமையிலும் வார்டு வாரியாக ஒரு குழு வீதம் 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, வருகிற 31.8.2019–க்குள் இக்குழுவானது தங்களது வார்டுகளில் உள்ள கட்டிடங்களை ஆய்வுசெய்து, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாத 1,000 கட்டிடங்களை கண்டறிந்து, அங்கு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைத்திட சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு ஆலோசனைகளும், மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வும் வழங்கப்படும். இதன்மூலம் மொத்தமாக பெருநகர சென்னை மாநகராட்சியிலுள்ள 200 வார்டுகளிலும் சேர்த்து சுமார் 2 லட்சம் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு சிறு, சிறு பழுதுகளால் பயன்பாடற்று இருந்தால் அவற்றை சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்களுக்கு இச்சிறப்பு குழுக்களால் ஆலோசனைகள் வழங்கப்படும்’’ என்று கூறினார்.

சென்னை நகரில் எடுக்கப்பட்டுள்ள முயற்சி மிகவும் வரவேற்கத்தக்கதாகும். ஆனால், மழைநீர் சேகரிப்பு திட்டத்தின் செயல்பாடு சென்னையோடு நின்றுவிடக்கூடாது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் மட்டுமல்லாமல், சின்னஞ்சிறு குடியிருப்புகள், அரசாங்க, தனியார் கட்டிடங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், வீடுகள் என ஒரு இடம் பாக்கியில்லாமல் மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் செயல்படுத்தவேண்டும். போர்க்கால அடிப்படையில் இந்தத்திட்டங்களையும், நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளையும் அரசு நிறைவேற்றவேண்டும். நாளைய வளத்துக்கான இன்றைய செலவு என்ற வகையில், இதற்கு முன்னுரிமை கொடுத்து நிதி ஒதுக்கீடு செய்யவும் தயங்கக்கூடாது. தாமதப்படுத்தக்கூடாது.

Next Story