துணை சபாநாயகர் இல்லாத மக்களவை


துணை சபாநாயகர் இல்லாத மக்களவை
x
தினத்தந்தி 10 July 2019 10:00 PM GMT (Updated: 2019-07-10T20:54:27+05:30)

ஜனநாயகம் தழைக்க உடனடியாக துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

இந்திய ஜனநாயகத்தின் அரசு எந்திரம் மற்றும் நாடாளுமன்றம், சட்டசபைகள் இயங்குவதற்கு வழிகாட்டும் புனித நூலாக கருதப்படுவது, ‘இந்திய அரசியலமைப்பு சட்டம்’ ஆகும். அந்தவகையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 93–வது பிரிவு மக்களவை உறுப்பினர்களில் இருந்து ஒரு சபாநாயகரும், ஒரு துணை சபாநாயகரும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. அந்தவகையில் 17–வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த மாதம் ஜூன் 17–ந்தேதி தொடங்கியது. 19–ந்தேதி சபாநாயகர் தேர்தல் நடந்தது. பா.ஜ.க.வை சேர்ந்த ஓம் பிர்லா ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்று வரை துணை சபாநாயகர்  தேர்ந்தெடுக்கப்படவில்லை. பொதுவாக நாடாளுமன்ற மரபுப்படி எதிர்க்கட்சிகளில் இருந்து ஒருவர் துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார். சில சமயங்களில் அதுவும் குறிப்பாக காங்கிரஸ் கட்சி ஆளுங்கட்சியாக இருந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். 

தி.மு.க.வை சேர்ந்த ஜி.லட்சுமணனும், அ.தி.மு.க.வை சேர்ந்த தம்பிதுரையும் 2 முறை துணை சபாநாயகர் பதவியை வகித்து இருக்கிறார்கள். இந்தமுறை எதிர்க்கட்சிகளில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து யாரும் துணை சபாநாயகர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் அந்த கட்சி ஆர்வம் காட்டவில்லை. அடுத்த பெரிய கட்சி என்றால் தி.மு.க.வும், தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும்தான். ஆனால் அந்த இரு கட்சிகளில் இருந்து யாரையும் துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்க பா.ஜ.க. முன்வரவில்லை. 22 இடங்களில் வெற்றி பெற்ற ஆந்திராவை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து நியமிக்கலாம் என்று முயற்சி செய்தது. ஆனால் அவர்கள் ஆந்திராவுக்கு தனி அந்தஸ்து கேட்டு போராடி வரும் நிலையிலும், சிறுபான்மையினரின் ஆதரவு அதிகமாக இருக்கும் நிலையிலும் இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள சம்மதிக்கவில்லை. 

12 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிஜு ஜனதாதளத்தை கேட்டபோது, யாருக்காவது ஒருவருக்கு பதவி கொடுக்கும்போது, மற்றவர்களின் வருத்தத்தை சம்பாதிக்க நேரிடும் என்ற வகையில் அவர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆக, துணை சபாநாயகர் இல்லாமலேயே மக்களவை இயங்கி வருகிறது. கடந்த மாதம் 21–ந்தேதி சபாநாயகர் ஓம் பிர்லா, பா.ஜ.க. உறுப்பினர்கள் 4 பேரையும், தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா உள்பட இதர கட்சிகளை சேர்ந்த 6 உறுப்பினர்களையும் கொண்ட மாற்று சபாநாயகர் பட்டியலை அறிவித்தார். சபாநாயகர் இல்லாத நேரத்தில், இந்த 10 பேரும் அவையை நடத்தி விடுகிறார்கள் என்றாலும், துணை சபாநாயகர் இல்லை என்பது பெரிய குறையாக இருக்கிறது. மக்களவை விதிகளில் இவ்வளவு காலத்துக்குள் துணை சபாநாயகர் பதவி நிரப்பப்பட வேண்டும் என்று தெளிவாக எதுவும் குறிப்பிடாதது பா.ஜ.க.வுக்கு ஒரு சாதகமாக போய் விட்டது. எது எப்படி இருந்தாலும், ஜனநாயகம் தழைக்க உடனடியாக துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் துணை சபாநாயகர்களாக பணியாற்றிய நேரங்களில் எல்லாம் பாரபட்சம் இல்லாமல் அந்த பதவிக்குரிய கண்ணியத்துடனேயே நடந்து இருக்கும் வரலாறு இருக்கிறது. அந்தவகையில் இந்த கூட்டத்தொடரிலேயே எதிர்க் கட்சியில் இருந்து ஒருவர் துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கோரிக்கையாக இருக்கிறது.

Next Story