மெதுவாக சூடுபிடிக்கும் மின்சார கார் விற்பனை


மெதுவாக சூடுபிடிக்கும் மின்சார கார் விற்பனை
x
தினத்தந்தி 12 July 2019 10:00 PM GMT (Updated: 12 July 2019 2:12 PM GMT)

மத்திய அரசாங்கம் பெட்ரோல்–டீசலுக்கு பதிலாக, லித்தியம் பேட்டரியை சார்ஜ் செய்து அதன்மூலம் ஓடும் மோட்டார் வாகனங்களை பெருமளவில் இயக்க முடிவு செய்து, அதற்காக வேகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

பெட்ரோல்–டீசல் உற்பத்திக்கான கச்சா எண்ணெய் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. நாட்டின் மொத்த இறக்குமதி செலவில் 22.2 சதவீத செலவு கச்சா எண்ணெய் இறக்குமதிக்காகவே போய் விடுகிறது. ஆண்டுக்கு ஆண்டு கச்சா எண்ணெய் இறக்குமதியின் அளவும், இதற்காக செலவிடும் தொகையும் கணிசமாக உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசாங்கம் பெட்ரோல்–டீசலுக்கு பதிலாக, லித்தியம் பேட்டரியை சார்ஜ் செய்து அதன்மூலம் ஓடும் மோட்டார் வாகனங்களை பெருமளவில் இயக்க முடிவு செய்து, அதற்காக வேகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப் பட்டுள்ள நிதி ஆயோக் ஏற்கனவே பெட்ரோல்–டீசலால் ஓடும் 3 சக்கர வாகனங்களை 2023–லும், 150 சிசி திறன்கொண்ட மோட்டார் சைக்கிள்களை 2025–லும் தடைசெய்து, முற்றிலுமாக இந்த மின்சார வாகனங்கள் மட்டுமே ஓடவேண்டும் என்று கூறியிருக்கிறது.

அரசாங்கம் மின்சார கார்கள், ஸ்கூட்டர்கள் வாங்குவதை ஊக்குவிப்பதற்காக இந்த பட்ஜெட்டில் இத்தகைய வாகனங்களை வாங்கும் கடன்களுக்கு கட்டும் வட்டியில் ரூ.1½ லட்சம் அளவுக்கு கூடுதலாக வருமானவரி விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், மின்சார வாகனங் களுக்கு இப்போதுள்ள ஜி.எஸ்.டி. 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்போது பிரதமர் அலுவலகத்தில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதற்காக 15 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிதி ஆயோக் மற்றும் நிதி அமைச்சக அலுவலகத்தில் 10 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் மற்றும் மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனங்களுக்கு, பல்வேறு அரசு அலுவலகங்களில் பயன்படுத்த 10 ஆயிரம் மின்சார மோட்டார் வாகனங்களை சப்ளை செய்வதற்கான டெண்டர் 2017–ல் வழங்கப்பட்டுள்ளது. இதுவரையில் இந்த நிறுவனங்கள் 1,500 கார்கள்தான் சப்ளை செய்திருக்கிறது. பொதுவாக இத்தகைய கார்கள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 130 கி.மீட்டர் தூரம் ஓடும் என்று நிறுவனங்கள் கூறினாலும், 

85 கி.மீட்டர் தூரம்தான் இந்த வாகனங்கள் ஓடுகின்றன என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்த கார்களில் 

18 கிலோவாட் பேட்டரிகள்தான் பொருத்தப்பட்டுள்ளன. 30 கிலோவாட் பேட்டரியை பொருத்தினால் குறைந்தது 250 கி.மீட்டர்வரை செல்லமுடியும் என்கிறார்கள்.  

ஆனால், சமீபத்தில் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்திய கார் 39.2 கிலோவாட் பேட்டரியுடன் ஒருமுறை சார்ஜ் செய்தால் 452 கி.மீட்டர் தூரம்வரை ஓடும் திறன்கொண்டது என்று கூறுகிறார்கள். மின்சார கார்களின் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்யவேண்டு மென்றால், 35 முதல் 40 நிமிடங்கள் ஆகிவிடுகின்றன. இப்படி பல குறைபாடுகள் உள்ளன. அவசரமாக வெகு தூரம் போகவேண்டியவர்களின் வசதிக்காக 

2 பேட்டரிகள் பொருத்திக்கொள்வது பற்றிய தொழில் நுட்பத்தையும் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்க வேண்டும். மின்சார இரு சக்கர மற்றும் 3 சக்கர வாகனங்களின் விற்பனை மெதுவாக சூடுபிடித்துள்ளது. முழுக்க முழுக்க இத்தகைய வாகனங்கள் என்றால், இப்போது ஓடும் வாகனங்களை என்ன செய்வது?. மேலும் மின்சார பேட்டரியில் ஓடும் கார்கள், ஸ்கூட்டர்களின் விலை மிக அதிகமாக இருக்கிறது. இந்த விலையையும் குறைப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கவேண்டும். நெடுஞ்சாலைகளில் நிறைய இடங்களில் சார்ஜ் செய்வதற்கான வசதிகள் செய்யப்படவேண்டும். மின்சாரமும் தடையில்லாமல் கிடைக்கவேண்டும்.

Next Story