எம்.பி.க்களின் பாதயாத்திரை


எம்.பி.க்களின் பாதயாத்திரை
x
தினத்தந்தி 15 July 2019 11:00 PM GMT (Updated: 15 July 2019 11:54 AM GMT)

மறைந்த பேரறிஞர் அண்ணா, தம்பிக்கு என்று எழுதும் கடிதங்கள் எல்லாம் உணர்வுபூர்வமாக இருக்கும். பண்டையகால சீன தத்துவ மேதை லாவோ சூ–வின் ஒரு அறிவுரையை அடிக்கடி கோடிட்டு காட்டுவார்.

‘மக்களிடம் செல், அவர்களோடு வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி, அவர்கள் அறிந்தவற்றில் இருந்து தொடங்கு’ என்ற வாசகங்களை அடிக்கடி தி.மு.க. தொண்டர்களுக்கு குறிப்பிட்டு, மக்களிடம் செல்லுங்கள் என்று எப்போதும் எழுதுவார், மேடைகளில் பேசுவார். அதே கருத்தை இப்போது பிரதமர் நரேந்திரமோடி செயலில் காட்டிவிட்டார். பட்ஜெட்டுக்கு பிறகு பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவர் பேசினார். அப்போது அவர் வருகிற அக்டோபர் 2–ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று தொடங்கி 31–ந்தேதி சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள் வரை பா.ஜ.க. உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் 150 கி.மீட்டர் தூரம் பாதயாத்திரை சென்று மக்களை சந்திக்கவேண்டும் என்று கூறினார். ஒவ்வொரு தொகுதியிலும் எம்.பி.க்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்படவேண்டும். அவர்கள் ஒரு நாளைக்கு 15 கி.மீட்டர் தூரம் பாதயாத்திரை செல்லவேண்டும். பாதயாத்திரையின்போதும் காந்தியின் சுதந்திர போராட்டம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யவேண்டும். மரக்கன்றுகள் நடவேண்டும். மத்திய அரசாங்கத்தின் பணிகள், திட்டங்களை பொதுமக்களுக்கு விளக்கி, அவர்கள் மேலும் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை கேட்டறிந்து தெரிவிக்கவேண்டும். இந்த பாதயாத்திரை கிராமங்களை கருத்தில்கொண்டே மேற்கொள்ளப்பட்டு   மக்களை  சந்திக்கவேண்டும்.  பா.ஜ.க.வுக்கு செல்வாக்கு இல்லாத தொகுதிகளுக்கு மாநிலங்களவை பா.ஜ.க. உறுப்பினர்கள் பாதயாத்திரை செல்லவேண்டும் என்று தெரிவித்தார்.

நிச்சயமாக இந்த பாதயாத்திரை மிகவும் வரவேற்கப்படத்தக்கதாகும். மக்களின் பாராட்டையும், ஆதரவையும் உறுதியாக பெறும். இந்த பாதயாத்திரையின்போது மக்கள் தெரிவிக்கும் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய ஏற்பாடு செய்யவேண்டும். பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளும் மக்களை சந்திக்க இதுபோன்ற பாதயாத்திரைகளை மேற்கொள்ளவேண்டும். மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டமே அவர் நடத்திய உப்பு சத்தியாகிரக பாதயாத்திரைக்கு பிறகுதான் வலுப்பெற்றது. தீண்டாமையை எதிர்த்து அவர் நாடு முழுவதும் நடத்திய பாதயாத்திரை பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. வினோபாபாவே பூமிதான இயக்கங்களுக்கு ஆதரவாக நடத்திய பாதயாத்திரை, ஏழை மக்களுக்கு வழங்குவதற்காக நிறைய நிலங்களை தானமாக பெற உதவியது. 

இதுபோல தமிழ்நாட்டிலும் பல தலைவர்கள் நடத்திய பாதயாத்திரை அவர்கள் என்ன கோரிக்கைக்காக பாதயாத்திரை நடத்தினார்களோ, அதுதொடர்பான பெரிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தியது. சமீபத்தில் ஆந்திர முதல்–மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஒரு   நல்ல  திட்டத்தை   அறிவித்தார்.   ‘கலெக்டர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் இரவு யாரிடமும் சொல்லாமல் மாணவர்கள் விடுதிகள், பொதுசுகாதார நிலையங்களுக்கு சென்று அங்கு தங்கவேண்டும். அங்கு கண்டறியும் குறைகளை தீர்க்க எவ்வளவு நிதி வேண்டுமானாலும் செலவு செய்ய ஒப்புதல் அளிக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார். இதுபோன்று தமிழக அரசும், மாவட்ட அளவிலான அனைத்து துறை தலைவர்களும் மேற்கொள்வதற்கு திடீரென சென்று பார்வையிடுவதற்கு ஒரு உத்தரவை பிறப்பிக்கவேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும், மக்கள் நம்மிடம் வரவேண்டும் என்று நினைக்காமல், மக்களை தேடிச்சென்று அவர்கள் குறைகளை தீர்ப்பதுதான் உண்மையான மக்கள் சேவையாகும்.

Next Story