வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்


வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
x
தினத்தந்தி 16 July 2019 10:00 PM GMT (Updated: 2019-07-16T23:49:52+05:30)

நாடு முழுவதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் பெருகி வருகிறது. எந்தவொரு மாநிலமும் வளர்ச்சி அடைந்த மாநிலமாக கருதப்பட வேண்டும் என்றால் அங்கு வேலைவாய்ப்புகள் அதிகளவில் உருவாக்கப்பட வேண்டும்.

வேலைவாய்ப்பு அதிகரித்தால் அங்கு உற்பத்தி உயர்கிறது, வளர்ச்சி அதிகரிக்கிறது, அரசுக்கு வருவாய் பெருகுகிறது என்பது நிதர்சனமான உண்மையாகும். வேலைவாய்ப்புகளை பொறுத்தமட்டில், அரசாங்கத்தின் வேலைவாய்ப்புகள் என்பது மிகவும் குறைவான அளவே இருக்கிறது.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், தமிழக அரசு அளிக்கும் வேலைவாய்ப்புகள் தற்போது நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தை முற்றிலும் போக்கமுடியாது. தற்போது தமிழ்நாட்டில் கிராம நிர்வாக அதிகாரி பதவி உள்பட 8 வகை பதவிகளில் உள்ள 6 ஆயிரத்து 491 இடங்கள் நிரப்பப்படுவதற்காக குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-வது வகுப்பு தேர்ச்சியுடன் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இதற்கு 14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். எனவே, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களில் மிக அதிகமான கவனம் செலுத்த வேண்டிய நிலை உருவாகிவிட்டது. வேலை வழங்குவோரை, அதாவது தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் 2016-17-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் பிரதம மந்திரி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக அப்போது ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் மாத சம்பளம் ரூ.15 ஆயிரத்திற்கு குறைவான தொகையை பெறும் தொழிலாளிகளை வேலைக்கு எடுத்துக்கொள்ளும் நிறுவனங்களுக்கு, அந்த தொழிலாளர்கள் கட்டவேண்டிய பிராவிடண்ட் பண்ட் (பி.எப்.) மற்றும் தொழிலாளர்கள் பென்ஷன் திட்டத்திற்கான 12 சதவீத தொகையை மத்திய அரசாங்கமே வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். மாத சம்பளத்தோடு அரசாங்கம் வழங்கும் சமூக நல திட்டங்களின் பயன்களையும் அவர்கள் அடைய முடியும். இந்த சலுகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசாங்கம் அறிவித்தது.

2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் கடந்த மார்ச் மாதம் வரை 1 கோடியே 18 லட்சத்து 5 ஆயிரத்து 3 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சாதனையை படைத்த முதல் 5 மாநிலங்கள் பட்டியலில் மராட்டிய மாநிலம் 21 லட்சத்து 6 ஆயிரத்து 405 பேர் வேலைவாய்ப்பு பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. 2-வது இடத்தில் 14 லட்சத்து 17 ஆயிரத்து 808 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கொடுத்து தமிழ்நாடு 2-வது இடத்தில் இருக்கிறது. புதிதாக வேலைவாய்ப்பு வழங்கிய எண்ணிக்கையில் 12 சதவீதம் பேருக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நிச்சயமாக இது வரவேற்கத்தகுந்த ஒரு திட்டமாகும். ஆனால், 3 ஆண்டுகளுக்கு மட்டுமே இந்த சலுகை என்பதை இன்னும் நீட்டிக்க மத்திய அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும். தொழில் நிறுவனங்களுக்கு இதுபோன்ற மேலும் பல சலுகைகளை அளித்து, வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசாங்கம் ஈடுபட வேண்டும். தமிழக அரசும் நமது மாநிலத்திற்கு என தனியாக இதுபோன்ற புதிய சலுகைகளை அறிவித்து வேலைவாய்ப்புகளை பெருக்கவேண்டும். மொத்தத்தில், மத்திய-மாநில அரசுகள் இந்த ஆண்டு இப்போதுள்ள வேகத்தைவிட, இன்னும் அதிகமான வேகத்தில் வேலைவாய்ப்புகளை பெருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Next Story