தலையங்கம்

ஒற்றுமை தந்த வெற்றி + "||" + The victory of unity

ஒற்றுமை தந்த வெற்றி

ஒற்றுமை தந்த வெற்றி
‘ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே, வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே’ என்று பழையகால திரைப்பட பாடல் ஒன்று உண்டு.
அது தற்போது தமிழ்நாட்டை சேர்ந்த அ.தி.மு.க., தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையோடு தெரிவித்த எதிர்ப்பு அலைகளை தாங்கமுடியாமல், மத்திய அரசாங்கம் தபால் இலாகா தேர்வை இந்தியிலும், ஆங்கிலத்திலும் நடத்தியதை ரத்து செய்ய வைத்துவிட்டது. பொதுவாகவே தமிழ்நாட்டில் மத்தியஅரசு பணிகளில் குறிப்பாக ரெயில்வே, தபால் இலாகா, வங்கிகள் உள்ளிட்ட அனைத்து இலாகாக்களிலும் வடமாநிலத்தவர் ஏராளமானவர்கள் பணியில் இருக்கிறார்கள். இவர்களில் பலருக்கு தமிழே தெரியவில்லை. தபால் இலாகாவில் முன்பு தமிழில் நடந்த தேர்வுகளில் கூட, தமிழர்களைவிட பல வடமாநிலத்தவர் எப்படி அதிக மதிப்பெண்கள் எடுத்தார்கள்? என்பது இன்றளவும் புரியவில்லை.

இந்தநிலையில், மீண்டும் தபால்காரர் பன்முக பணி ஊழியர், மெயில் கார்டு, தபால் உதவியாளர் மற்றும் தபால் பிரிக்கும் பணி உதவியாளர் ஆகியோர்களுக்கான ‘குரூப் டி’ பணிகளுக்காக இந்தியா முழுவதிலும் இருந்து ஏறத்தாழ 1,000 பணி இடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு இருந்தன. பெரும்பாலும் கிராமங்களில் உள்ளவர்களோடு தொடர்புகொள்ள வேண்டிய இந்த பணிகளுக்காக கடந்த 14-ந்தேதி தேர்வு என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வை இந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் உள்பட அனைத்து மாநில மொழிகளிலும் எழுதலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத தங்களை தயார்படுத்தி கொண்டிருந்தார்கள். இந்தநிலையில், ஜூலை 11-ந்தேதி ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பில் ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டு இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே தேர்வு எழுத முடியும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தி தெரிந்தவர்கள் கொண்டாடினார்கள், தமிழக இளைஞர்கள் தடுமாறினார்கள்.

உடனடியாக மதுரையை சேர்ந்த ஆசீர்வாதம் என்பவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் தேர்வை நடத்தலாம், ஆனால் இந்த வழக்கின் தீர்ப்பு முடியும் வரை தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என்ற தீர்ப்பை பெற்றார். இந்த பிரச்சினையின் அவசரம் கருதி விடுமுறை நாளன்று இரவில் சிறப்பு அமர்வு நடத்திய விசாரணைக்காக நீதிபதிகள் கே.ரவிச்சந்திரபாபு, ஆர்.மகாதேவன் ஆகியோரை தமிழ் கூறும் நல்உலகம் நன்றியோடு பாராட்டுகிறது. தொடர்ந்து கடந்த திங்கட்கிழமையும், செவ்வாய்க்கிழமையும், மக்களவையிலும், மாநிலங்களவையிலும் கட்சி வேறுபாடின்றி தமிழக எம்.பி.க்கள் தெரிவித்த எதிர்ப்புகள் நாடாளுமன்றத்தையே அதிர வைத்தது. வேறு அலுவல்களை எடுத்துக்கொள்ள முடியாதநிலை ஏற்பட்டது. “இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே” என்ற பெருமைமிகு முழக்கம் நிரூபிக்கப்பட்டது. தமிழுக்கு ஒரு தீது என்றால், தமிழர்கள் தாங்கி கொள்ளமாட்டார்கள் என்பது பிரகடனப்படுத்தப்பட்டது. இவ்வளவு எதிர்ப்பையும் பார்த்த மத்திய அரசாங்கத்தின் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் உடனடியாக நடந்து முடிந்த தேர்வை ரத்து செய்து, விரைவில் அனைத்து மொழிகளிலும் இந்த தேர்வு மீண்டும் நடத்தப்படும் என்று அறிவித்தார். இந்த விஷயத்தில் ஒற்றுமையாக செயல்பட்ட தமிழக எம்.பி.க்கள் இனிவரும் காலங்களிலும் நிலுவையில் உள்ள பல திட்டங்கள் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காகவும், தமிழ்நாட்டுக்கு நலன்பயக்கும் பல புதிய திட்டங்களுக்காகவும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என்பதையே தமிழ்நாடு எதிர்பார்க்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. முறைகேடு இல்லாத அரசு பணியாளர் தேர்வு
தமிழ்நாட்டில் படித்துவிட்டு, வேலையில்லா இளைஞர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பது அரசு பணிதான்.
2. எய்ம்ஸ் மருத்துவமனை வருமா?, வராதா?
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை வரும், ஆனால் வராது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிடுமோ? என்ற அச்சம், சந்தேகம், பொதுமக்களிடம் இப்போது வந்துவிட்டது.
3. பரவட்டும் இந்த மத நல்லிணக்கம்
எல்லா மதமும் சமமானது. என் மதத்தை போலவே, எல்லா மதங்களையும் மதிப்பேன். எதையும் குறைவாக நினைக்க மாட்டேன். மதங்கள் என்பது வழிபாட்டு முறைதான்.
4. மீண்டும் சர்ச்சைக்குள்ளாகிய ஹைட்ரோ கார்பன் திட்டம்
தமிழ்நாட்டில் கூடங்குளம் அணுஉலை திட்டம் என்றாலும் சரி, நியூட்ரினோ திட்டம் என்றாலும் சரி, சேலம்–சென்னை 8 வழிச்சாலை திட்டம் என்றாலும் சரி, ஹைட்ரோ கார்பன் திட்டம் என்றாலும் சரி எதிர்ப்பு குரல் எழும்புவது வாடிக்கையாகிவிட்டது.
5. இனி தங்கத்தை நம்பி வாங்கலாம்
ஆதிகாலத்தில் மனிதன் பணத்தை புழக்கத்தில் விடுவதற்கு முன்பே தங்கம் பல நாகரிகங்களில் ஒரு மதிப்பு வாய்ந்த உலோகமாக கருதப்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை