கிராமங்கள், கல்லூரிகளில் டிரைவிங் லைசென்சு


கிராமங்கள், கல்லூரிகளில் டிரைவிங் லைசென்சு
x
தினத்தந்தி 18 July 2019 11:00 PM GMT (Updated: 18 July 2019 2:17 PM GMT)

தமிழ்நாட்டில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அபரிமிதமாக உயர்ந்து கொண்டே போகிறது.

 கடந்த மார்ச் மாதம் 31–ந்தேதி நிலவரப்படி, தமிழ்நாட்டில் உள்ள மொத்த மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியே 76 லட்சத்து 88 ஆயிரத்து 185 ஆகும்.  இதில் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 2 கோடியே 33 லட்சத்து 46 ஆயிரத்து 216 ஆகும். மொத்த மோட்டார் வாகனங்களில் இரு சக்கர வாகனங்கள் மட்டும் 84.32 சதவீதம் இருக்கிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 17 லட்சத்து 50 ஆயிரம் இரு சக்கர வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. கிராமங்களில் இருசக்கர வாகனங்கள் என்பது ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கவேண்டிய அத்தியாவசிய வாகனமாகிவிட்டது. இதுபோல, கல்லூரி மாணவர்களானாலும் சரி, மாணவிகளானாலும் சரி தங்களிடம் கண்டிப்பாக இரு சக்கர வாகனம் இருக்க வேண்டும் என்ற உணர்வில் இருக்கிறார்கள். அதனால்தான் கிராமங்களிலும், அனைத்து கல்லூரிகளிலும் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது. புதிதாக வாகனங்கள் வாங்கப்பட்ட எண்ணிக்கையையும், ஓட்டுனர் உரிமம் வாங்கியவர்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு பார்த்தால், ஏராளமானவர்கள் லைசென்சு இல்லாமல்தான் வாகனங்களை ஓட்டுகிறார்கள் என்பது தெரிகிறது.

இரு சக்கர வாகனங்கள் ஓட்டும் அனைத்து கிராம மக்களும், மாணவர்களும் முறையான லைசென்சு பெறவேண்டும் என்பதில் தமிழக அரசு மிகவும் முனைப்புடன் இருக்கிறது. பொதுவாக மோட்டார் வாகனங்களை ஓட்டுபவர்கள் கண்டிப்பாக டிரைவிங் லைசென்சு வாங்கியிருக்க வேண்டும். ஓட்டுனர் உரிமம் என்று கூறப்படும் ‘டிரைவிங் லைசென்சை’ பெற விரும்புகிறவர்கள் முதலில் பழகுனர் ஓட்டுனர் உரிமம் என்று கூறப்படும் ‘எல்எல்ஆர்’ உரிமத்தைப் பெறவேண்டும். அவர்கள் ஓட்டும் வாகனங்களில் ‘எல்’ என்று எழுதப்பட்டு இருக்க வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்றுதான் இந்த பழகுனர் ஓட்டுனர் உரிமத்தைப் பெறவேண்டும். இந்த உரிமத்தைப் பெற்ற 30 நாட்களுக்கு பின்னர் 6 மாத காலத்துக்குள் நிரந்தர ஓட்டுனர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கலாம். போக்குவரத்து அதிகாரி முன்னிலையில் வாகனத்தை ஓட்டிக்காட்டினால்தான் லைசென்சு கிடைக்கும்.

 இந்த நிலையில், கல்லூரி மாணவர்கள் மற்றும் கிராம வாசிகளுக்கு பழகுனர் ஓட்டுனர் உரிமம் வாங்க போக்குவரத்து அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய தேவையில்லாமல், அதிகாரிகளே கல்லூரிகளுக்கும், கிராமங்களுக்கும் நேரடியாக வந்து பொதுமக்களுக்கும், மாணவ–மாணவிகளுக்கும் சாலையில் பயணிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அந்த இடத்திலேயே ஓட்டுனர் பழகுனர் உரிமம் வழங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டசபையில் அறிவித்துள்ளார். இது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்றாகும். இது கிராம மக்களுக்கும், மாணவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும். பழகுனர் ஓட்டுனர் உரிமம் வழங்க கிராமங்களுக்கும், கல்லூரிகளுக்கும் அதிகாரிகளே அவர்களைத் தேடி செல்வதுபோல, நிரந்தர ஓட்டுனர் உரிமம் வழங்குவதற்கும் அங்கேயே சென்று அவர்களின் தகுதிகளை பரிசோதித்து வழங்குவதற்கும் அரசு பரிசீலிக்க வேண்டும். இந்த முறை மூலம் எந்த முறைகேட்டுக்கும் இடம் இருக்காது. தகுதி உள்ளவர்களுக்கு தானாக டிரைவிங் லைசென்சு கிடைத்துவிடும்.

Next Story