பெட்ரோல்–டீசல் விலையை இன்னும் உயர்த்த முடியுமா?


பெட்ரோல்–டீசல் விலையை இன்னும் உயர்த்த முடியுமா?
x
தினத்தந்தி 19 July 2019 11:00 PM GMT (Updated: 2019-07-19T20:29:20+05:30)

பட்ஜெட் உரையின்போது நிர்மலா சீதாராமன், கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்துகொண்டு இருக்கிறது. இது பெட்ரோல்–டீசல் மீதான கலால் வரியையும், மேல் வரியையும் மறுஆய்வு செய்யவேண்டிய ஒருநிலையை ஏற்படுத்துகிறது.

எனவே, இவற்றின் மீதான சிறப்பு கூடுதல் கலால்வரி, சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேல்வரி ஆகியவற்றின்மீது தலா ரூ.1 உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார். இதன்படி, பெட்ரோல்–டீசல் விலை மீது ரூ.2 உயர்த்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த வரிகளோடு, மாநில அரசின் வரிகளையும் சேர்த்து பெட்ரோல்–டீசல் மீதான விலை லிட்டருக்கு ரூ.2.50–க்கு மேல் உயர்ந்துவிட்டது. 

இந்த அறிவிப்பின்மீது தற்போது ஒருலிட்டர் பெட்ரோல் மீது விதிக்கப்பட்ட கலால் வரி ரூ.7–லிருந்து ரூ.8 ஆகவும்,  டீசலுக்கு  கலால் வரியாக லிட்டருக்கு ரூ.1 விதிக்கப்பட்ட நிலையில் இப்போது ரூ.2 ஆகவும் உயர்ந்துள்ளது. இதுபோல, சாலை மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பு மேல்வரி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.8 விதிக்கப்பட்ட நிலையில், ரூ.9 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. டீசலுக்கு லிட்டருக்கு ரூ.8 ஆக இருந்தது இப்போது ரூ.9 ஆகவும் உயர்ந்துள்ளது. இதன் தாக்கம் உடனடியாக அனைத்து பண்டங்களின் விலை உயர்வுக்கும் வழிவகுத்துவிட்டது. ஆட்டோ ரிக்ஷா கட்டணம் உயர்ந்துவிட்டது. லாரி கட்டணம் உயர்ந்துவிட்டது. காய்கறி முதல் அனைத்து பண்டங்களின் விலையும் உயர்ந்துவிட்டது. எந்த நேரத்திலும் பஸ் கட்டணம் உயர்த்தப்படலாம். ரெயில் கட்டணம் உயருமா? என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. இப்படி ஒரு சாதாரண மனிதன் வாழ்க்கையில் இந்த ரூ.2 உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. 

எந்தவொரு பட்ஜெட் அறிவிப்பும் சட்டமாக வேண்டுமென்றால், நிதி மசோதா நிறைவேற்றப்படவேண்டும். நிதி மசோதாவில் இந்த விலை உயர்வு அமல்படுத்த ஒரு திருத்தம் கொண்டுவரப்படவேண்டும். ஆனால், நிதி மசோதாவில் 185–வது பிரிவில் இப்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு விதிக்கப்பட்டுள்ள விலை ரூ.7–லிருந்து ரூ.10 வரையிலும், டீசலுக்கு ரூ.1–லிருந்து ரூ.4 வரையிலும் சிறப்பு கூடுதல் கலால் வரியை உயர்த்த வழிவகை காணப்பட்டுள்ளது. இதுபோல, 201–வது பிரிவில் இப்போது பெட்ரோல்– டீசலுக்கு லிட்டருக்கு தலா ரூ.8 விதிக்கப்படும் சாலை மற்றும் உள்கட்டமைப்பு  மேல்வரி  இரண்டுக்குமே தலா ரூ.10 ஆக உயர்த்த வழிவகை காணப்பட்டுள்ளது. ஆக, இப்போது பெட்ரோல்–டீசலுக்கு ரூ.2 உயர்த்தினாலும், எதிர்காலத்தில் இன்னும் 3 ரூபாய் உயர்த்த நிதி மசோதாவில் இடமிருக்கிறது. இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இப்போது ரூ.2 உயர்த்திவிட்டாலும், எதிர்காலத்தில் மேலும் தலா 3 ரூபாய்வரை உயர்த்த மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வராமலேயே ஒரு நிர்வாக உத்தரவின்கீழ் விலையை உயர்த்தமுடியும் என்று கூறப்படுகிறது. இந்த விலை உயர்வையே மக்களால் தாங்கமுடியாத நிலையில், நிதி மசோதாவில் இன்னும் கூடுதலாக 3 ரூபாய் உயர்த்த வசதி செய்துகொடுத்து அதையும் உயர்த்தினால் நிச்சயமாக மக்களால் தாங்கவே முடியாது. எனவே, மத்திய அரசாங்கம் மக்களின் துயரை கணக்கில்கொண்டு, இந்த விலை உயர்வை குறைக்கவேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளையும் ஏற்கவேண்டும் அல்லது 2 ரூபாய் உயர்வை ஒரு ரூபாயாக குறைக்கவேண்டும். இல்லையென்றால், இதற்குமேல் உயர்த்த ஒருபோதும் எண்ணக்கூடாது என்பதே மக்களின் கருத்தாகும்.

Next Story