இதில் சர்ச்சை எதற்கு?


இதில் சர்ச்சை எதற்கு?
x
தினத்தந்தி 23 July 2019 10:30 PM GMT (Updated: 2019-07-23T19:29:59+05:30)

புதிய கல்விக்கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்ட சில கருத்துக்கள், இப்போது தமிழ்நாடு முழுவதும் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.

புதிய கல்விக்கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்ட சில கருத்துக்கள், இப்போது தமிழ்நாடு முழுவதும் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. 2014–ல் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றவுடன் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கல்விக்கொள்கையில் மாற்றம் கொண்டுவந்து, புதிய தேசிய கல்விக்கொள்கையை உருவாக்க 2017–ம் ஆண்டு கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கடந்த மே மாதம் 31–ந்தேதி தேசிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையை தாக்கல் செய்தது. அனைவருக்கும் கல்வி வாய்ப்பு, பாரபட்சம் இல்லாத சமத்துவநிலை, தரமான கல்வி, மாணவர்களுக்கு தேவையான திறன்கள் உள்பட அறிவாற்றலை வழங்குதல் போன்ற பல மாற்றங்களை இந்த வரைவு அறிக்கை உள்ளடக்கியுள்ளது. 

எடுத்துக்காட்டாக, தற்போது நடைமுறையில் உள்ள கல்வி உரிமை சட்டத்தின்படி, 6 வயது முதல் 14 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயக்கல்வி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் வரைவு கல்விக்கொள்கையில் 5–3–3–4 என்ற புதிய கல்வி முறையை பரிந்துரைக்கிறது. அதாவது 3 வயது முதல் 3 ஆண்டுகள் மழலையர் கல்வி கற்கவேண்டும். 3 ஆண்டுகள் மழலையர் கல்வியும், முதல் வகுப்பும், இரண்டாவது வகுப்பும் சேர்ந்து 5 ஆண்டு அடிப்படைக்கல்வி என்றும், 3–வது வகுப்பு முதல் 5–ம் வகுப்புவரை 3 ஆண்டு ஆயத்த கல்வி என்றும், 6–ம் வகுப்பு முதல் 8–ம் வகுப்புவரை நடுநிலைக்கல்வி என்றும், 9–ம் வகுப்பு முதல் 12–வது வகுப்புவரை 4 ஆண்டு உயர்நிலைக்கல்வி என்றும் புதிய கல்வி அமைப்பு வகுக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி கொள்கையின்படி 3–வது மொழி கற்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த கல்விக்கொள்கை தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை
Innovate.MyGov.in
 என்ற இணையதளத்தில் வருகிற 31–ந் தேதிவரை பதிவேற்றம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்களின் கருத்துக்களை அரசே கோரியிருக்கும் நிலையில், நடிகர் சூர்யா ஒரு விழாவில் இந்த புதிய கல்விக்கொள்கை நம் வீட்டுக் குழந்தைகளின் கல்வியை மாற்றப்போகிறது. எதிர்காலத்தில் பிள்ளைகள் படிக்க கஷ்டப்படப்போகிறார்கள். நாம் வேடிக்கை பார்த்து இதை எப்படியாவது படித்து விடு என்று சொல்லப்போகிறோம். அதுதான் நடக்கப்போகிறது என்பது உள்பட பல கருத்துக்களை தன் ஆதங்கமாக தெரிவித்தார். இதற்கு சில தலைவர்கள் பலத்த எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். பலத்த கண்டன குரல்கள் பல மூலைகளிலிருந்து வீசப்படுகின்றன. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து போன்ற பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த மோதல்கள் தேவையேயில்லை. 

இந்திய அரசியல் சட்டத்தின் 19(1)–வது பிரிவு பேச்சுரிமை, கருத்துரிமையை தெளிவாக வழங்கியுள்ளது.  இதுமட்டுமல்லாமல், மத்திய அரசாங்கமே பொதுமக்களிடம் ஜூலை 31–ந் தேதிக்குள் கருத்துக்களை கூற கேட்டு இருக்கும் நிலையில், நடிகர் சூர்யாவும் தன் கருத்துக்களைத்தான் தெரிவித்து இருக்கிறார். அது அரசியல் சட்டம் அவருக்கு வழங்கியுள்ள உரிமை. அதை டெலிவி‌ஷன்களும், பத்திரிகைகளும் வெளியிட்டார்கள் என்றால், அதுவும் அவர்களுக்குள்ள கருத்து சுதந்திரம். வரைவு அறிக்கையைக் குறித்து வரும் ஆதரவு, எதிர்ப்பு கருத்துக்களை சீர் தூக்கிப்பார்த்த பிறகுதான் இறுதியாக கல்விக்கொள்கை அறிவிக்கப்படும் என்ற நிலையில், சூர்யாவின் கருத்தையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாமே தவிர, இதில் சர்ச்சைகள் தேவையில்லை.

Next Story