ஒவ்வொரு இந்தியனும் நெஞ்சை நிமிர்த்துகிறான்


ஒவ்வொரு இந்தியனும் நெஞ்சை நிமிர்த்துகிறான்
x
தினத்தந்தி 24 July 2019 10:30 PM GMT (Updated: 2019-07-24T20:35:07+05:30)

கிராமப்புறங்களில் தாய்மார்கள் இரவில் குழந்தைகளுக்கு சோறு ஊட்ட, ‘‘அதோ பார் நிலா, நிலாவுக்கு போவோமா’’ என்று சொல்லிக்கொண்டே குழந்தைகளை நிலாவை பார்க்கவைத்து சோறு ஊட்டுவார்கள்.

கிராமப்புறங்களில் தாய்மார்கள் இரவில் குழந்தைகளுக்கு சோறு ஊட்ட, ‘‘அதோ பார் நிலா, நிலாவுக்கு போவோமா’’ என்று சொல்லிக்கொண்டே குழந்தைகளை நிலாவை பார்க்கவைத்து சோறு ஊட்டுவார்கள். அந்த நிலையில், 2021–ல் கால்தடம் பதிக்க விண்வெளி வீரர்களை அனுப்புவோம் என்று இஸ்ரோ என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் கே.சிவன் உறுதி பூண்டுள்ளார். அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில், இந்தியாவும் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பும் முயற்சியை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. 2008–ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்–1 விண்கலம்தான் நிலவில் ஈரப்பதம் இருப்பதை கண்டுபிடித்து உலகத்துக்கு தெரிவித்தது. 

இந்தநிலையில், நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கி, ஆய்வு நடத்தும் வகையில் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட சந்திரயான்–2 என்ற விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்துவதற்கு இஸ்ரோ நிறுவனம் முடிவு செய்தது. கடந்த 15–ந் தேதி இந்த விண்கலத்தை விண்ணில் ஏவ முயற்சித்தபோது, கடைசிநேரத்தில் ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. அவர்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால், ராக்கெட் வானில் பாதிவழியில் சென்றுகொண்டிருக்கும்போதே வெடித்து சிதறி இருக்கும். மீண்டும் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 2.43 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. 47 நாட்களுக்கு பிறகு செப்டம்பர் 7–ந்தேதி நிலவில் தரை இறங்க இந்த சந்திரயான்–2 விண்கலத்துக்கு பயணத்திட்டம் வகுக்கப்பட்டது. 3,850 கிலோ எடைகொண்ட இந்த விண்கலத்தை விண்ணில் ஏவுவதில் முதலில் வெற்றி பெற்றுவிட்டோம். புறப்பட்ட 16 நிமிடங்களில் திட்டமிடப்பட்டபடி பூமியின் புவிவட்ட பாதையில் இப்போது சுற்றிக்கொண்டிருக்கிறது. 23 நாட்கள் கழித்து இந்த விண்கலம் சந்திரனின் ஈர்ப்பு விசைபகுதிக்கு செலுத்தப்படும். இந்த நடவடிக்கை சுமார் 7 நாட்கள் மேற்கொள்ளப்பட்டு, 30–வது நாள் விண்கலம் சந்திரனை நீள்வட்ட பாதையில் சுற்றிவரும் வகையில் இயக்கப்படும். தொடர்ந்து சுமார் 13 நாட்கள் விண்கலத்தின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு, 43–வது நாள் விண்கலத்தின் இரண்டு பகுதிகளான ஆர்பிட்டரும், லேண்டரும் பிரிக்கப்படும். பின்னர் ஆர்பிட்டர் சந்திரனை 100 கிலோமீட்டர் தூரத்தில் சுற்றிவரும். ஆர்பிட்டரிலிருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர், மெதுவாக சந்திரனின் தரைப்பகுதியை நோக்கி நகரும். 48–வது நாள் விக்ரம் சந்திரனில் மெதுவாக தரை இறங்கும்.

நிலவில் லேண்டர் தரை இறங்கியபிறகு அதிலிருந்து வெளியே வரும் பிரக்யான் ரோவரும் நிலவில் ஹீலியம் வாயு மூலக்கூறுகள் நிலவு உருவான நிலவரம், நீர்நிலைகள், கனிமங்கள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ள வசதியாக ஏராளமான படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பும். இந்த பயணம் வெற்றிகரமாக முடிந்துவிட்டால், நிலவின் தென்துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு இந்தியாதான் என்ற பெருமை ஒவ்வொரு இந்தியனுக்கும் கிடைக்கும். தேசியக்கொடியையும் நிலவில் பதிக்கப்போகிறார்கள். இந்த பெரிய சாதனையை மேற்கொள்ளும் இஸ்ரோ தலைவர் விஞ்ஞானி கே.சிவன் மற்றும் விஞ்ஞானி வனிதா முத்தையா ஆகிய இருவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதில் தமிழர்களுக்கு கூடுதல் பெருமை. வெற்றிகரமாக தொடங்கிய இந்த பயணம், வெற்றிகரமாக முடிந்து, செப்டம்பர் 7–ந் தேதி இந்தியாவின் புகழ்கொடி உலகில் உயர பறக்கவேண்டும் என்ற வாழ்த்துக்களையே இந்தியர்கள் அனைவரும் தெரிவிக்கிறார்கள்.

Next Story