காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தமா?


காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தமா?
x
தினத்தந்தி 25 July 2019 10:30 PM GMT (Updated: 2019-07-25T19:39:47+05:30)

காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய பிரதமர் நரேந்திரமோடி, தன்னிடம் கேட்டுக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியதாக வந்த செய்திக்கு, பிரதமர் நரேந்திரமோடி பதில் அளிக்கவேண்டும் என்று கோரிக்கைவிடுத்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய பிரதமர் நரேந்திரமோடி, தன்னிடம் கேட்டுக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியதாக வந்த செய்திக்கு, பிரதமர் நரேந்திரமோடி பதில் அளிக்கவேண்டும் என்று கோரிக்கைவிடுத்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். அமெரிக்காவில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்தார். அப்போது டிரம்ப், கடந்த மாதம் ஒசாகாவில் நடந்த ஜி–20 மாநாட்டின்போது பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசிய நேரத்தில், காஷ்மீர் பிரச்சினை பற்றிய பேச்சுவந்தபோது நீங்கள் மத்தியஸ்தராக இருக்க விரும்புகிறீர்களா? என்று மோடி கேட்டதாகவும், அவர் எங்கே? என்று கேட்டபோது காஷ்மீர் என்று நரேந்திரமோடி பதில் அளித்ததாகவும், அதற்கு டிரம்ப் நான் மத்தியஸ்தம் செய்வதால் உதவமுடியும் என்றால், காஷ்மீர் பிரச்சினையில் உதவத்தயார் என்று கூறியதாகவும் கூறினார். 

உடனடியாக டெல்லியில் இந்திய வெளிவிவகாரத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் இதை திட்டவட்டமாக மறுத்தார். அமெரிக்க ஜனாதிபதியிடம், மோடி மத்தியஸ்தம் தொடர்பான எந்த வேண்டுகோளையும் விடுக்கவில்லை. பாகிஸ்தானுடன் உள்ள எல்லா பிரச்சினைகளும் இந்தியா–பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலமாகத்தான் விவாதிக்கப்படவேண்டும் என்பது இந்தியாவின் உறுதியான கொள்கை. 1972–ம் ஆண்டு இந்திராகாந்தியும், பூட்டோவும் கையெழுத்திட்ட ‘சிம்லா’ ஒப்பந்தத்திலும், 1999–ம் ஆண்டு வாஜ்பாயும், நவாஸ்ஷெரீப்பும் கையெழுத்திட்ட ‘லாகூர்’ ஒப்பந்தத்திலும், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் உள்ள பிரச்சினைகளை இருதரப்பும் பேசி தீர்க்கவேண்டும் என்றுதான் கூறப்பட்டுள்ளது என்பதையும் திட்டவட்டமாக தெரிவித்தார். மோடியும், டிரம்பும் ‘ஒசாகா’ மாநாட்டின்போது தனியாக பேசவில்லை. ஜப்பான், இந்தியா, அமெரிக்க நாட்டு தலைவர்கள் சந்திப்பில்தான் பேசினார்கள். அந்த முத்தரப்பு கூட்டத்தில்கூட தலைவர்கள் தனியாக சந்தித்து பேசவில்லை. இந்திய வெளிவிவகாரத்துறை மந்திரி ஜெய்சங்கர், அமெரிக்க மந்திரி மைக் பாம்பியோ மற்றும் இருநாடுகளின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

இந்த கூட்டத்தில் ஈரான் பிரச்சினை, பரஸ்பர விவகாரங்கள், 5ஜி மற்றும் பாதுகாப்புத்துறை தொடர்பான வி‌ஷயங்களை பேசவேண்டும் என்று மோடி வகுத்து வைத்திருந்தார். அமெரிக்கா–இந்தியா இருநாட்டு அலுவலக ரீதியான தஸ்தாவேஜுகளிலும் இவ்வாறு மத்தியஸ்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்ததாக எந்த குறிப்பும் இல்லை. ஆனால், டிரம்பின் தலைமை பொருளாதார ஆலோசகர், ஜனாதிபதி டிரம்ப் எதையும் இட்டுக்கட்டி கூறமாட்டார் என்று கூறிவிட்டு, அதற்குமேல் எதையும் சொல்ல மறுத்துவிட்டார். மக்களவையில் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், இருநாட்டு பிரதமர்கள் சந்திப்பின்போது காஷ்மீர் பற்றியே பேசவில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். மாநிலங்களவையில் இந்திய வெளிவிவகாரத்துறை மந்திரி ஜெய்சங்கர் இதே மறுப்பை உறுதிபட தெரிவித்துவிட்டார். பாகிஸ்தானுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் இந்தியா நடத்த வேண்டுமென்றால், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ளவேண்டும். எல்லா பிரச்சினையையும் இருதரப்பும் உட்கார்ந்து பேசவேண்டும் என்ற சிம்லா, லாகூர் ஒப்பந்தங்களைத்தான் அடிப்படையாக இந்தியா வைத்திருக்கிறது என்று கூறிவிட்டார். இந்த பிரச்சினையில் மோடி அவ்வாறு கேட்டுக்கொள்ளவில்லை என்று உறுதியாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுவிட்டது. வெளிவிவகார அமைச்சக செய்தி தொடர்பாளரும் உடனடியாக மறுத்துவிட்டார். இந்த நிலையில், இந்த பிரச்சினையை இதோடு முடித்துக்கொள்வதுதான் நாட்டின் நலனுக்கு நல்லதாக இருக்கும். பிரதமர் அவ்வாறு பேசவில்லை என்று மறுப்பு வந்தபிறகு, இதுபற்றிய விவாதம் இனிமேல் வேண்டாம்.

Next Story