பிரியங்கா தலைவர் ஆவாரா?


பிரியங்கா தலைவர் ஆவாரா?
x
தினத்தந்தி 26 July 2019 10:30 PM GMT (Updated: 2019-07-26T18:39:43+05:30)

இந்திராகாந்தி போன்று நடை, உடை, பாவனைகள், நடவடிக்கைகள், துணிச்சல் எல்லாவற்றையும் கொண்ட அவரது பேத்தி பிரியங்கா காந்தி, சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் நடத்திய ஒரு தர்ணா போராட்டம் ஒட்டுமொத்த இந்தியாவையுமே அவரை நோக்க வைத்துவிட்டது.

ந்திராகாந்தி போன்று நடை, உடை, பாவனைகள், நடவடிக்கைகள், துணிச்சல் எல்லாவற்றையும் கொண்ட அவரது பேத்தி பிரியங்கா காந்தி, சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் நடத்திய ஒரு தர்ணா போராட்டம் ஒட்டுமொத்த இந்தியாவையுமே அவரை நோக்க வைத்துவிட்டது. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களையே பெற்று மீண்டும் பா.ஜ.க.விடம் படுதோல்வி அடைந்த நிலையில், ராகுல்காந்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார். எல்லா தலைவர்களும் நீங்கள்தான் தலைவராக தொடர்ந்து நீடிக்கவேண்டும் என்று எவ்வளவோ வற்புறுத்தியும், ராஜினாமா முடிவிலிருந்து அவர் பின்வாங்கவில்லை. சமீபகாலங்களாக பிரியங்கா காந்திதான் தலைவர் பொறுப்பை ஏற்கவேண்டும், அவர்தான் இந்த பதவியை வகிக்க மிக பொருத்தமானவர் என்று பல தலைவர்கள் வெளிப்படையாகவே தங்கள் கருத்துக்களை சொல்லத் தொடங்கிவிட்டனர். 

முன்னாள் மத்திய மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஸ்ரீபிரகாஷ் சுக்லா, பிரியங்கா காந்திதான் கட்சித்தலைவராக நியமிக்கப்படவேண்டும் என்று கூறியதோடு மட்டுமல்லாமல், இதுதொடர்பான கருத்துகளை பலரும் வெளிப்படையாகவே சொல்ல வழிவகுத்துவிட்டார். 3 முறை கான்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜெய்ஸ்வால், கட்சியை வழிநடத்த பிரியங்கா காந்திதான் பொருத்தமானவர் என்று கூறினார். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி லட்சோபலட்ச காங்கிரஸ் தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று, கட்சியின் தலைமைப் பொறுப்பை பிரியங்கா காந்திதான் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வெளிப்படையாகவே கூறிவிட்டார். 

இந்தநிலையில் பிரியங்கா காந்தி, ‘நெல்சன் மண்டேலா’ ‘‘தனக்கு நெல்சன் மாமா’’. அவர்தான் எனக்கு வழிகாட்டியும், ஊக்கமும் ஆவார். எல்லோரும் சொல்வதற்கு முன்பு அவர்தான், என்னிடம் நீ அரசியலில் இருக்கவேண்டும் என்று கூறினார் என தெரிவித்தது, இந்த கருத்துகளை மேலும் தீவிரப்படுத்திவிட்டது. இதுமட்டுமல்லாமல், உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் 3 பெண்கள் உள்பட 10 மலைவாழ் மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட தகவலை அறிந்தவுடன், சோன்பத்ரா அருகேயுள்ள உப்பா என்ற கிராமத்தில் அவர்களை சந்திக்க உடனடியாக புறப்பட்டு சென்றார். அந்தநேரம் அதிகாரிகள், அவரை வழியில் மறித்து 144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது, நீங்கள் அங்கு செல்லமுடியாது என்று கூறியவுடன், சாலையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். எவ்வளவோ முயற்சி செய்தும் அவர் அப்படியே உட்கார்ந்திருந்ததை பார்த்த போலீசார், அவரை கைது செய்து சற்றுதூரத்தில் உள்ள சுனார் என்ற இடத்தில் விருந்தினர் மாளிகையில் வைத்தனர். அங்கேயும் அவர் போராட்டத்தை கைவிடவில்லை. 

மின்விளக்கு இல்லாத நிலையிலும், மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக்கொண்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், வேறுவழியில்லாமல் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை அங்கு அழைத்துவந்து சந்திக்க வைத்தனர். அவர்களை சந்திக்காமல் டெல்லி திரும்பமாட்டேன் என்று போராடிய பிரியங்கா காந்தி போராட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டார் என்று காங்கிரஸ் கட்சிகாரர்களுக்கு அடுத்த தலைவர் பிரியங்கா காந்திதான் என்ற உணர்வை ஏற்படுத்திவிட்டது. 1959–ல் இந்திராகாந்தி காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றார். 60 ஆண்டுகள் கழித்து அவரது பேத்தி இப்போது 2019–ல் தனது 47–வது வயதில் காங்கிரஸ் கட்சித்தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்வார், ஏற்றுக்கொள்ளவேண்டும், எப்போது ஏற்றுக்கொள்ளப்போகிறார் என்ற உணர்வும், எதிர்பார்ப்புமே பெரும்பான்மையான காங்கிரஸ்காரர்களிடம் நாடு முழுவதும் இருக்கிறது.

Next Story