இங்கிலாந்து மந்திரி சபையில் இந்திய மணம்


இங்கிலாந்து  மந்திரி சபையில்  இந்திய  மணம்
x
தினத்தந்தி 28 July 2019 10:30 PM GMT (Updated: 2019-07-28T17:18:30+05:30)

இங்கிலாந்து, சுவீடன், ஸ்பெயின், போர்ச்சுகல், நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்சு, கிரீஸ், ஹங்கேரி உள்பட 28 நாடுகள் 1992–ல் ஒன்றாக இணைந்து, ஐரோப்பிய யூனியன் என்ற கூட்டமைப்பை உருவாக்கின.

ங்கிலாந்து, சுவீடன், ஸ்பெயின், போர்ச்சுகல், நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்சு, கிரீஸ், ஹங்கேரி உள்பட 28 நாடுகள் 1992–ல் ஒன்றாக இணைந்து, ஐரோப்பிய யூனியன் என்ற கூட்டமைப்பை உருவாக்கின. இதில் என்ன பயன் என்றால், இந்த 28 நாடுகளுக்கு இடையே மக்களும் தடையின்றி சென்று வரலாம், வியாபார முதலீடுகளும் மேற்கொள்ளலாம். எந்தவொரு நாடும் அரசு அளிக்கும் சுகாதார சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரே நாட்டில் எவ்வாறு எந்த தடையும் இல்லாமல், எல்லா பணிகளும் நடக்கின்றதோ, அதுபோல சலுகைகளை ஐரோப்பிய யூனியன் நாடுகளிடையே பெற்றுக்கொள்ளும் நிலை இருந்தது. 

காலப்போக்கில் இங்கிலாந்து நாட்டில் மற்ற நாடுகளை சேர்ந்தவர்கள் அதிகளவில் குடியேறுவதால், இங்கிலாந்தை சொந்த பூமியாக கொண்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு குறைகிறது. அவர்களின் கல்வி, சுகாதாரம் போன்றவற்றுக்கும் இங்கிலாந்து அரசு அதிக செலவு மேற்கொண்டு இருக்கிறது. இந்தநிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து செல்வதுதான் நல்லது என்றொரு கருத்து இங்கிலாந்து நாட்டில் நிலவியது. இதுதான் ‘பிரெக்ஸிட்’. அதாவது பிரிட்டன் பிளஸ் எக்சிட் (வெளியேறு) என்பதன் பொருள்தான் ‘பிரெக்ஸிட்’. இந்த ‘பிரெக்ஸிட்’டை அமல்படுத்த வேண்டுமா?, வேண்டாமா? என்பது குறித்து மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வெளியேற வேண்டாம் என்று அப்போதைய இங்கிலாந்து பிரதமராக இருந்த டேவிட் கேமரூன் பிரசாரம் செய்தார். ‘பிரெக்ஸிட்’டுக்கு ஆதரவாக கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த அப்போது லண்டன் மேயராக இருந்த போரிஸ் ஜான்சன் பிரசாரம் செய்தார். ‘பிரெக்ஸிட்’டுக்கு ஆதரவாக 52 சதவீத மக்களும், எதிராக 48 சதவீத மக்களும் வாக்களித்தனர். ‘பிரெக்ஸிட்’டை நிறைவேற்ற முடியாமல் டேவிட் கேமரூன், தொடர்ந்து தெரசா மே ஆகியோர் பிரதமர் பதவியில் இருந்து விலகினர்.

இங்கிலாந்து நாட்டின் டிரம்ப் என்று அழைக்கப்படும் போரிஸ் ஜான்சன், இப்போது இங்கிலாந்து பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இவருக்கும், இந்தியாவுக்கும் தொடர்பு உண்டு. 28 ஆண்டுகாலம் இவரது மனைவியாக வாழ்ந்து, தற்போது விவாகரத்து கோரியுள்ள மரினா வீலர் என்பவரின் தாயார் சீக்கியர், தகப்பனார் இங்கிலாந்து நாட்டுக்காரர். போரிஸ் ஜான்சனும், மரினா வீலரும் விவாகரத்து கோரிய வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. போரிஸ் மந்திரி சபையில் பிரித்தி பட்டேல், அலோக் சர்மா, ரிஷி சுனாக் என்ற 3 இந்தியர்கள் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். இனி இங்கிலாந்து மந்திரி சபையில் இந்திய மணம் கமழும். இதில் ரிஷி சுனாக், இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகள் அக்‌ஷதாவை திருமணம் செய்தவர். இங்கிலாந்து மந்திரி சபையில் 3 இந்தியர்கள் இடம் பெற்றிருப்பது அங்கு வாழும் 14 லட்சம் இந்தியர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. போரிஸ் ஜான்சன் பிரதமராக ஆனவுடன் முதல் வாழ்த்து மோடி தான் தெரிவித்திருக்கிறார். எப்போதுமே இந்தியர்களுக்கு ஆதரவானவர் என்று கருதப்படும் போரிஸ் ஜான்சன், வரும் அக்டோபர் 31–ந்தேதிக்குள் ‘பிரெக்ஸிட்’ முடிவை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருக்கிறார். அவர் தொடர்ந்து பிரதமராக இருப்பாரா?, இல்லையா? என்பது அப்போதுதான் தெரியும் என்றாலும், போரிஸ் ஜான்சன் ஆட்சியில் இந்தியா–இங்கிலாந்து இடையே நல்லுறவு மேம்படும். வர்த்தகம் தழைக்கும். இந்தியர்களுக்கு நலன் பல பயக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Next Story