நீர் மேலாண்மை இயக்கம்


நீர் மேலாண்மை இயக்கம்
x
தினத்தந்தி 30 July 2019 10:00 PM GMT (Updated: 2019-07-30T20:52:50+05:30)

16 நாட்களாக நடந்த தமிழக சட்டசபை கூட்டத்தின் கடைசி நாளில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், மக்களுக்கு தேவையான பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.

2018–ம் ஆண்டு பருவமழை பெய்யாததால் தமிழ்நாட்டில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. 24 மாவட்டங்கள் மற்றும் 7 மாவட்டங்களில் 38 வட்டாரங்கள் நீரின் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் என அரசு அறிவித்தது. தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து நீர் நிலைகளும் முற்றிலுமாக வறண்டுபோய் விவசாயம் செய்யமுடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள் ஒருபக்கம் என்றாலும், குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் படும் இன்னல் சொல்லிமாளாது. இந்த ஆண்டு அரசு எடுக்கும் நடவடிக்கையால் ஓரளவு குடிநீர் பற்றாக்குறை தீர்க்கப்படுகிறது என்றாலும், எதிர்காலத்தில் இப்படியொரு நிலைமை ஏற்படக்கூடாது. அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரப்பட்டு, நீரின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டு, பருவமழை பொய்த்தாலும் ஓரளவு நீர் நிற்கிறது, அதனால் நிலத்தடிநீர் செறிவூட்டப்பட்டுள்ளது என்ற ஒருநிலை ஏற்படவேண்டும் என்ற பலத்த கோரிக்கை வலியுறுத்தப்படுகிறது. 

நீர்வள ஆதாரத்தை திறம்பட திட்டமிட்டு மேம்படுத்தி பங்கீடு செய்தல் மற்றும் உகந்த பயன்பாட்டுக்காக நிர்வகிப்பது சிறந்த நீர்வள மேம்பாடு ஆகும். தமிழ்நாட்டின் சராசரி மழைஅளவு 911.60 மி.மீட்டர் ஆகும். இந்த நீரை முறையாக தேக்கிவைத்து ஒருசொட்டுகூட வீணாகப் போய்விடாதபடி பராமரித்தால் நிச்சயமாக தண்ணீர் பற்றாக்குறை இருக்காது. அந்த வகையில், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு நல்ல அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 89 அணைகளில் 238.58 டி.எம்.சி. நீரும், 14 ஆயிரத்து 98 பெரிய பாசன ஏரிகளில் 521 டி.எம்.சி. நீரும், ஆக மொத்தம் 759.58 டி.எம்.சி. தண்ணீரை தேக்கிவைக்கும் திறன் உள்ளது. இதுதவிர, உள்ளாட்சி அமைப்புகள், கோவில் கட்டுப்பாட்டில் உள்ள 48 ஆயிரத்து 758 குட்டைகள், ஊரணிகள், நீர்நிலைகள் மற்றும் குளங்கள் தண்ணீரை தேக்கிவைக்க பயன்படுகின்றன. 

தற்போது நிலவிவரும் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளவும், வரும்காலங்களில் இதுபோன்ற பற்றாக்குறை ஏற்படாமல் நீர் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், தீவிர நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர்மேலாண்மை இயக்கம், மக்கள் இயக்கமாக தொடங்கப்படும் என்று முதல்–அமைச்சர் அறிவித்துள்ளார். ஆகஸ்டு மாதம் முதல்வாரத்தில் இந்த இயக்கம் தொடங்கி ஒரு மாதகாலம் செயல்படுத்தப்படும். இந்த தீவிர இயக்கத்தில், அமைச்சர்கள் முதல் பொதுமக்கள்வரை அனைவரும் பங்குகொண்டு பருவமழை காலத்துக்கு முன்பு நீர்நிலைகளை மேம்படுத்தி அதிக அளவு மழைநீரை சேமிக்க வழிவகை செய்யப்படும். நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், நிலத்தடிநீர் செறிவூட்டும்திறனை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏரி, குளங்களை தூர்வாரும் பணிகளுக்காக ரூ.1,250 கோடி ஒதுக்கப்படும் என்றும் முதல்–அமைச்சர் அறிவித்துள்ளார். ஆகஸ்டு மாதம் முதல் தேதியிலிருந்து மாத கடைசிவரை பொதுமக்களும், அரசு எந்திரமும் முழுவீச்சில் இயங்கவேண்டும். இது அரசின் திட்டம் மட்டுமல்ல, மக்கள் இயக்கம் என்ற வகையில் எல்லோரும் கைகோர்த்து இந்த ஒருமாத காலத்துக்குள் அனைத்து நீர்நிலைகளையும் மேம்படுத்தி, மழைநீர் சேகரிப்பு திட்டங்களை தீவிரப்படுத்தி, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் தண்ணீரின் கொள்ளளவை அதிகரித்து, மழைநீரை சேமித்து வைத்தாலேபோதும், எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வராது.

Next Story