பாகிஸ்தான், சீனாவுக்கு என்ன வந்தது?


பாகிஸ்தான், சீனாவுக்கு  என்ன வந்தது?
x
தினத்தந்தி 7 Aug 2019 11:00 PM GMT (Updated: 2019-08-07T20:26:44+05:30)

கலைஞர் கருணாநிதி மறைந்து நேற்றுடன் ஓர் ஆண்டு நிறைவடைந்தது. அவர் தனது அறிக்கைகளில் அடிக்கடி, பெரியார் குறிப்பிடும் ‘‘பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது’’ என்ற வாசகத்தை சுட்டிக்காட்டுவது உண்டு.

இதை ஆங்கிலத்தில், ‘தி கேட் ஹாஸ் கம் அவுட் ஆப் தே பேக்’ என்று சொல்வார்கள். அதை குறிப்பிட்டு எதிர்க்கட்சி தலைவர்களின் எண்ணங்கள் வெளியே தெரிந்து விட்டது என்பதை குறிப்பிடுவதற்காக அந்த கருத்தை தெரிவிப்பார். அது இப்போது காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வெளியிட்ட கருத்தில் வெளியே வந்துவிட்டது. 

காஷ்மீரை இரண்டாக பிரிப்பதோ, அரசியல் சட்டத்தின் 370–வது பிரிவு மற்றும் 35 ஏ பிரிவு அங்கு செயல்படுத்துவதை ரத்து செய்வதோ முழுக்க, முழுக்க இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். நம் நாட்டின் பிரச்சினையில் மத்திய அரசாங்கம் என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம். அதில் வெளிநாடுகள் தலையிட முடியாது. அன்னிய நாட்டு உள் விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடுவது இல்லை. ஆனால் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானும், சீனாவும் தேவையில்லாமல் மூக்கை நீட்டுகின்றன. 

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அவசர அவசரமாக நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தை கூட்டியிருக்கிறார். அந்த கூட்டத்தில் 370–வது அரசியல் சட்டப்பிரிவை நீக்கியது காஷ்மீரில் வன்முறையை அதிகரிக்க வழிவகுக்கும். அங்குள்ள மக்களின் எதிர்ப்பு அதிகமாகும். மேலும் புல்வாமா போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறும். அவர்கள் பாகிஸ்தான் மீது பழி சுமத்துவார்கள் என்றெல்லாம் கூறிவிட்டு போர் மூளும் என்றெல்லாம் பூச்சாண்டி காட்டி இருக்கிறார். புல்வாமா போல சம்பவம் நடக்கும், வன்முறை வெடிக்கும் என்பதுபோன்ற வாசகங்களை பயன்படுத்தியதில் இருந்தே காஷ்மீரில் நடந்த, நடக்கும் நடவடிக்கைகள் எல்லாவற்றிற்கும் பாகிஸ்தான்தான் காரணம் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகி, உண்மை வெளியே வந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்த நேரத்திலேயே பாகிஸ்தானில் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையில் பயங்கரவாதிகள் இருக்கிறார்கள் என்று இம்ரான்கானே ஒப்புக்கொண்டு இருக்கிறார். ஆக காஷ்மீரில் நடந்ததெல்லாம் இவர்களின் சித்து விளையாட்டுதான் என்பது புலனாகிவிட்டது. 

இதுபோல சீனாவும், தேவையில்லாமல் இதில் உள்ளே நுழைகிறது. லடாக் பகுதி இப்போது சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கார்கில் மற்றும் லே மாவட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவின் கட்டுப்பாட்டில் இல்லாத அக்சாய் சின் பகுதி, லே மாவட்டத்தோடு தான் காலம்காலமாக இருந்து வருகிறது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த பகுதியை சீனா தனது எல்லை என்று கூறுகிறது. ஆக பாகிஸ்தான் ஒரு பக்கம், சீனா ஒரு பக்கம் நமது பிரச்சினையில் தலையிடும் இந்த நேரத்தில் காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஊடுருவ வைத்து மீண்டும் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற பாகிஸ்தான் முயற்சி செய்கிறது. பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளின் தலையீடுகள் அதிகமாக இருக்கும் நேரத்தில் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து தங்களுக்குள் உள்ள வேற்றுமையை மறந்து நாடு பலமாக இருக்க உறுதுணையாக இருக்க வேண்டும். சர்வதேச அமைப்புகளிலும் இந்தியா இதுபோன்ற தேவையில்லாத தலையீடுகள் பற்றி புகார் செய்ய வேண்டும். அனைத்து நாடுகளின் ஆதரவுகளை பெற வேண்டும் என்பதே இப்போதைய நிலையாக இருக்கிறது.

Next Story