வட்டி விகிதம் குறைப்பு


வட்டி விகிதம் குறைப்பு
x
தினத்தந்தி 9 Aug 2019 10:30 PM GMT (Updated: 2019-08-10T04:00:42+05:30)

பொதுவாக ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழுக்கூட்டம் 2 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும். இதில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து மற்ற வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) மற்றும் வர்த்தக வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான ரிவர்ஸ் ரெப்போ ரேட் விகிதங்களை மாற்றி அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் நடந்த முதல் நிதிக்குழு கூட்டத்தில் ரெப்போ ரேட் 6.5 சதவீதத்தில் இருந்தது. 3 முறை நடந்த கூட்டங்களில் தலா 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 5.75 ஆக இருந்தது. தற்போது நாட்டில் பொருளாதார நிலைமை சற்று தளர்ச்சி அடைந்துள்ளது. மோட்டார் வாகனம் உள்ளிட்ட பல தொழில்களில் உற்பத்தி செய்த பொருட்கள் விற்பனையாகாமல் தேக்கநிலை ஏற்பட்டது. இதனால் ஏராளமானவர்கள் வேலைவாய்ப்பை இழந்தனர்.

கட்டுமான தொழில், ரியல் எஸ்டேட் தொழில் போன்ற வேலைவாய்ப்புகளை வழங்கும் தொழில்களில் ஏற்பட்ட சரிவு காரணமாக ஒருபக்கம் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி என்றாலும், மற்றொரு பக்கம் வேலைவாய்ப்பு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஒட்டுமொத்த தேவை குறைந்துள்ளது. மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. எனவே, நிலைமையை சீர்செய்ய வேண்டும் என்றால் நேற்றுமுன்தினம் நடந்த நிதிக்கொள்கை கூட்டத்திலும் நிச்சயமாக குறைந்தது 0.25 சதவீதம் வட்டி குறையக்கூடும் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். தற்போது நிலவும் நிலைமையில் 0.50 வீதம்கூட குறைக்கப்படும் என்றும் சிலர் எதிர் நோக்கினர். ஆனால் வழக்கத்துக்கு மாறாக யாரும் எதிர்பார்க்காத நிலையில், 0.35 சதவீதம் ரெப்ரோ ரேட் விகிதத்தை குறைத்து சக்தி காந்ததாஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் இனி ரிசர்வ் வங்கியிலிருந்து வங்கிகளுக்கு 5.40 சதவீதம் வட்டியில் கடன் வழங்கப்படும்.

ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு இவ்வாறு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் கொடுக்கும்போது, வங்கிகள் அதே அளவுக்கு வட்டி குறைப்பை அவர்கள் கொடுக்கும் கடன்களுக்கு விதிப்பதில்லை. கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் ரிசர்வ் வங்கி 0.75 சதவீத அளவில் வட்டியை குறைத்துள்ளது. ஆனால் வர்த்தக வங்கிகள் பொதுமக்களுக்கு வழங்கும் கடன்களை பொறுத்தமட்டில், அதிகபட்சமாக 0.29 சதவீத வட்டியை மட்டுமே குறைத்து இருக்கிறது. ரிசர்வ் வங்கியே, மற்ற வங்கிகள் கொடுக்கும் கடனில் வட்டி விகிதத்தை குறைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறது. அந்தவகையில் இந்த வட்டி குறைப்பினால் லாபம் சம்பாதித்துவிடலாம் என்று வங்கிகள் நினைக்காமல், அவர்களும் கடன்களுக்கான வட்டியை குறைத்தால் வீட்டுக்கடன், வாகன கடன் போன்றவற்றுக்கான வட்டி குறைவதுடன், தொழில் முனைவோர், சிறு தொழில் முனைவோர், வியாபாரிகள், தனிநபர் என்று அனைத்து தரப்பினரும் குறைந்த வட்டியில் கடன் பெறமுடியும். இதனால் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். வணிக வளர்ச்சி ஏற்படும். வேலைவாய்ப்புகள் பெருகும். அதன் காரணமாக நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அதேநேரம் பொதுமக்களின் சேமிப்புகளெல்லாம் தங்கத்திலும், மியூச்சுவல் பண்டு, இன்சூரன்சு போன்றவற்றிலும் சென்று கொண்டிருக்கும் நிலையில், வங்கி டெபாசிட், சிறு சேமிப்பு வட்டிகளை குறைத்துவிடக்கூடாது. ஏனெனில், பல மூத்த குடிமக்கள் இந்த வட்டியை நம்பியே வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.

Next Story