இளைஞர்களின் ரோல் மாடல்கள்


இளைஞர்களின் ரோல் மாடல்கள்
x
தினத்தந்தி 11 Aug 2019 7:18 PM GMT (Updated: 11 Aug 2019 7:18 PM GMT)

11 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சந்திரயான்-1 என்ற விண்கலத்தை விண்ணில் ஏவியது. நிலவைச்சுற்றி வட்டமிட்ட அந்த விண்கலம் நிலவில் ஈரப்பதம் இருப்பதை கண்டுபிடித்து தெரிவித்தது.

இதன் தொடர்ச்சியாக நிலவைச்சுற்றி வருவதோடு மட்டுமல்லாமல், நிலவிலேயே தரை இறங்கி ஆய்வு செய்யும் வகையில், சந்திரயான்-2 திட்டத்தை நிறைவேற்ற ‘இஸ்ரோ’ என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் முடிவு செய்தது. இதற்காக கடந்த மாதம் 22-ந்தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அனைத்து வசதிகளையும் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

தற்போது சந்திரயான்-2 தன் பயணத்தை கடந்த 22 நாட்களாக வெற்றிகரமாக முடித்துவிட்டது. புவி சுற்றுப்பாதையில் 5-வது நிலை உயர்விலும் வெற்றிபெற்றுள்ள சந்திரயான்-2, நாளை மறுநாள் 14-ந்தேதி நிலவை நோக்கி சந்திரவட்ட பாதையில் பயணிக்க தொடங்குகிறது. செப்டம்பர் 7-ந்தேதி சந்திரயான்-2 நிலவில் இறங்கப்போகிறது. இவ்வளவு பெரிய சாதனைகளை நிகழ்த்திய இஸ்ரோ தலைவர் கே.சிவன் என்றாலும் சரி, அந்த அணியில் உள்ள துணை இயக்குனர் சந்திரகாந்த குமார் என்றாலும் சரி, மற்றும் இந்த பணியில் தொடர்புடைய தர்வேந்திர யாதவ், நாகேஸ்வர ராவ் போன்றோரின் வாழ்க்கை குறிப்பையெல்லாம் பார்த்தால், மிக சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர்கள்தான். 2004-ம் ஆண்டு ஒரு கருத்தரங்கில், நிலவைச்சுற்றிவரும் சுற்றுவட்டப்பாதையில் விண்கலம் ஏவவேண்டும் என்ற கருத்து வந்தபோது, ஏன் நிலவில் தரையிறங்கக்கூடாது என்ற ஒரு வித்தை விஞ்ஞானிகள் மனதில் விதைத்தவர் அப்துல்கலாம்.

கே.சிவனை எடுத்துக்கொண்டால், உயர்நிலைப்பள்ளி படிப்புவரை தமிழ் வழியில் படித்தவர். நாகர்கோவிலில் உள்ள எஸ்.டி. இந்து கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துவிட்டுத்தான் ஏரோநாட்டிகல் என்ஜினீயரிங் படிப்புக்காக சென்னை வந்திருக்கிறார். பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது அவர் செருப்புக்கூட அணிந்ததில்லை. என்ஜினீயரிங் படிப்பு வரும்வரை வேட்டிதான் அணிந்திருந்தார். வயலில் தகப்பனாரோடு சேர்ந்து வேலைபார்த்தவர். இதுபோல, சந்திரகாந்த குமார் ஒரு விவசாயியின் மகன். தன் கல்வி செலவுக்காக கிராமத்தில் உள்ள பள்ளிக்கூட குழந்தைகளுக்கு ‘டியூசன்’ எடுத்து சம்பாதித்தவர். தர்வேந்திர யாதவ் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது 15 கி.மீட்டர் தினமும் சைக்கிளிலேயே சென்று படித்தார். இதுபோல நாகேஸ்வர ராவ் நினைவு கூறும்போது, “நாங்கள் மிகவும் ஏழை. தினசரி அரிசி சோறு சாப்பிடுவது என்பதே எங்களுக்கு பெரிய விசேஷம். பக்கத்து வீட்டுக்கு சென்று மோர் வாங்கி குடிப்பேன்” என்கிறார்.

சந்திரயான்-2 விண்கலம் ஏவப்பட்டிருப்பதில் ஏதாவது ஒரு வகையில் தொடர்புடைய இவர்கள் அனைவரும் மிகவும் சாதாரண நிலையில் இருந்து எந்தவித பின்புலமும் இல்லாமல், ஏழ்மை நிலையிலிருந்து படித்து முன்னேறி இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள் என்றால், நிச்சயமாக நமது இளைஞர்கள் இவர்களை ஒரு ரோல் மாடல்களாக மனதில் கொண்டு, அவர்களைப்போல ஒரு இலக்கை நிர்ணயித்து, கடுமையாக உழைத்து, படிப்பு ஒன்றையே முக்கியமாகக்கொண்டு முன்னேற வேண்டும் என்பதையே அவர்களது வாழ்க்கை வரலாறு காட்டுகிறது. உலகச்சாதனை படைக்கப்போகும் சந்திரயான்-2-வின் திட்ட இயக்குனர்கள் தமிழ்நாட்டை சேர்ந்த வனிதா முத்தையா, உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரிது கரிதால் என்ற இரு பெண் விஞ்ஞானிகள். ஆக, பெண்களும் இவர்களை ரோல் மாடல்களாக கொண்டு முன்னேற முடியும்.

Next Story