முக்கோண சிந்தனைகள்


முக்கோண சிந்தனைகள்
x
தினத்தந்தி 12 Aug 2019 11:00 PM GMT (Updated: 2019-08-12T22:14:42+05:30)

நேற்று முன்தினம் சென்னையில் ஒரு முக்கியமான நிகழ்ச்சி நடந்தது. துணை ஜனாதிபதியாகவும், மாநிலங்களவை தலைவராகவும் வெங்கையா நாயுடு பதவி ஏற்ற 2 ஆண்டுகளில், அவர் நாடு முழுவதிலும் 330 பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.

தேனீ போல மிக சுறுசுறுப்பாக இயங்கிவரும் அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள், உரைகள் மற்றும் புகைப்படங்களை தொகுத்து “கவனித்தல், கற்றல், வழிநடத்துதல்” என்ற பெயரில் ஒரு ஆவண புத்தகம் சென்னையில் வெளியிடப்பட்டது. இந்த நூல் வெளியீட்டு விழாவை அவர் டெல்லியிலோ, ஆந்திராவிலோ நடத்தாமல், சென்னையில் நடத்தினார் என்றால், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா எப்போதும் கூறுவதுபோல, வெங்கையா நாயுடு தமிழ்நாட்டின் உற்ற நண்பர். தமிழ்நாட்டின் மீது அதிக அன்பு கொண்டவர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அதைத்தான் கூறினார். அந்தவகையில் இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டை அவர் தேர்ந்தெடுத்தது நிச்சயமாக மகிழ்வுக்குரியது.

இந்த விழாவில் பேசிய வெங்கையா நாயுடுவும் சரி, இந்த நூலை வெளியிட்ட அமித்ஷாவும் சரி, விழாவில் பேசிய ரஜினிகாந்தும் சரி, மூவருமே சில முக்கிய செய்திகளை தங்கள் உரையில் கூறியுள்ளனர். நீண்ட உரையாற்றிய வெங்கையா நாயுடு, “அர்ப்பணிப்புடன் தொடர்ந்து செயல்பட்டால் உச்சங்களை தொடலாம் என்பதற்கு நான் உதாரணம். சுவற்றில் கட்சி விளம்பரங்களை எழுதிக்கொண்டிருந்த நான், பா.ஜ.க.வின் அகில இந்திய தலைவராக, எம்.எல்.ஏ.வாக, எம்.பி.யாக, மத்திய மந்திரியாக, தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கிறேன் என்றால், அதுதான் காரணம்” என்று தன் பேச்சை தொடங்கிய அவர், தமிழ்நாட்டை மறக்காமல், வெகுகாலமாக தமிழகத்தின் கோரிக்கையான சுப்ரீம் கோர்ட்டின் கிளையை சென்னையில் தொடங்கவேண்டும். மாநில ஐகோர்ட்டுகளில் அந்தந்த மாநில மொழிகளிலேயே வாதாட அனுமதி அளிக்கவேண்டும். வழக்குகளின் விசாரணை ஒரு ஆண்டுக்குமேல் போய்விடாமல், குறிப்பிட்ட காலகெடுவுக்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும். கட்சி தாவல் சட்டத்தை அமல்படுத்தவேண்டும். எந்தவொரு மொழியையும் திணிக்கக்கூடாது. தாய், தாய்நாடு, தாய்மொழியை ஒருபோதும் மறக்கக்கூடாது என்று பல செய்திகளை இந்த விழாவின் மூலம் நாட்டுக்கு தந்துள்ளார். தமிழ்நாட்டில் சுப்ரீம்கோர்ட்டின் கிளையை தொடங்கவேண்டும் என்று துணை ஜனாதிபதியே கூறியபிறகு, நமது மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்களும், தமிழக அரசும் இதை கையில் எடுத்து உடனடியாக மத்திய அரசாங்கத்தையும், சுப்ரீம் கோர்ட்டையும் வலியுறுத்தி இதை நிறைவேற்ற செய்யவேண்டும்.

அமித்ஷா பேசும்போது, அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்டதால், காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, இனி வளர்ச்சி பாதையில் பீடுநடைபோடும் என்று கூறினார். 370-வது பிரிவு நீக்கப்பட்டதை மிகத்தெளிவாக இந்த விழாவின் மூலம் நாட்டு மக்களுக்கு விளக்கி இருக்கிறார். இவ்வளவு நாளும் 370-வது பிரிவு நீக்கப்பட்டது குறித்து எந்த கருத்தும் கூறாத நடிகர் ரஜினிகாந்த், இதை மனதார வரவேற்கிறேன். அமித்ஷா கையாண்ட விதத்திற்கு தலைவணங்குகிறேன். மோடியும், அமித்ஷாவும், கிருஷ்ணன், அர்ஜுனன் போன்று இருக்கிறார்கள் என்று வெளிப்படையாக பேசி தனது நிலைப்பாட்டை பட்டவர்த்தனமாக தெரிவித்துள்ளார். இந்த விழாவில் அவர் பேசிய பேச்சு, அவர் அரசியல் கட்சியை தொடங்கப்போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறது. மொத்தத்தில், இந்த மூவரின் முக்கோண சிந்தனைகளும் ஒரேநிலையில் சங்கமிக்கிறது என்பது இந்த விழாவில் வெளிப்படையாக தெரிந்த ஒன்று. 

Next Story