மீண்டும் வருக அத்திவரதரே!


மீண்டும் வருக அத்திவரதரே!
x
தினத்தந்தி 18 Aug 2019 10:30 PM GMT (Updated: 18 Aug 2019 11:41 AM GMT)

தமிழ்நாடு தனிசிறப்பு வாய்ந்த ஒரு புண்ணிய பூமியாகும். இங்கே பன்முகத்தில் ஒருமுகம் என்ற தத்துவம் எப்போதும் நிலைத்து நிற்கும்.

மிழ்நாடு தனிசிறப்பு வாய்ந்த ஒரு புண்ணிய பூமியாகும். இங்கே பன்முகத்தில் ஒருமுகம் என்ற தத்துவம் எப்போதும் நிலைத்து நிற்கும். சைவமும், வைணவமும் தழைத்து ஓங்கும் தமிழ்நாட்டில், 108 திவ்ய தேசங்களில் 89 திவ்யதேசங்கள் இருக்கின்றன. இதில், 15 திவ்ய தேசங்கள் காஞ்சீபுரத்தை சுற்றியே உள்ளன. அதில் ஒரு திவ்ய தேசம்தான் வரதராஜ பெருமாள் கோவில். இங்கு ஐராவதம் மலை உருவத்தில் பொருளை தாங்கி நிற்பதால் இந்த கோவிலுக்கு ‘அத்திகிரி’ என்ற பெயரும் உண்டு. இங்கு பெருந்தேவி தாயார் அமர்ந்த கோலத்திலும், வரதராஜ பெருமாள் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார்கள். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்த கோவிலில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் மூழ்கியிருக்கும் அத்திவரதர் வெளியே எடுக்கப்பட்டு, 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அத்திவரதர் 40 ஆண்டுகள் திருக்குளத்தில் மூழ்கியிருப்பது தொடர்பாக பல வரலாறுகள் கூறப்படுகின்றன. அதில் ஒரு வரலாறாக இப்போது கோவில் இருக்கும் இடம் அத்திமரங்கள் சூழ்ந்த மலையாக இருந்தது. அப்போது பிரம்மா யாகம் செய்து அதிலிருந்து அத்திவரதர் வந்ததாகவும், அவரை பிரம்மா பூஜித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. சிறிது காலம் கழித்து அர்ச்சகர் ஒருவர் கனவில் வந்து, ‘தான் பிரம்மாவின் யாக குண்டத்திலிருந்து வெளியே வந்ததால் தன் உடல் எப்போதும் தகிப்பதாகவும், தன்னை திருக்குளத்தில் எழுந்தருள செய்யவேண்டும் என்றும், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே கொண்டுவந்து பூஜை செய்யும்படி அத்திவரதர் கூறியதாகவும்’ ஒரு வரலாறு இருக்கிறது. 

ஆக, இத்தகைய பல வரலாறுகளின் அடிப்படையில், கடந்த பல ஆண்டுகளாக அத்திவரதரை அருகில் உள்ள திருக்குளத்தில் வைப்பதும், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே எடுத்து, 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலிக்க செய்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. இப்போது கடந்த 48 நாட்களில் ஒரு கோடிக்கும் மேலான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இது வைணவர்களின் திவ்ய தேசம் என்றாலும், சைவர்களின் கூட்டமே கட்டுக்கடங்காமல் இருந்தது. இந்த 48 நாட்களும் ஒருசில சம்பவங்கள்தான் தவிர்க்க முடியாமல் நடந்ததே தவிர, மற்றபடி பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் அளிக்கப்பட்டு வந்தன. 48 நாட்கள் பக்தர்களுக்கு தரிசனம் தந்த அத்திவரதர், கடந்த சனிக்கிழமை 6 கால பூஜை செய்யப்பட்டு, அனந்தசரஸ் திருக்குளத்தில் மீண்டும் வைக்கப்பட்டார். 

மீண்டும் அத்திவரதர் 2059–ம் ஆண்டுதான் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். மீண்டும் வருக அத்திவரதரே! என்று பக்தர்கள் வழிஅனுப்பி வைத்தனர். அத்திவரதர் திருக்குளத்துக்குள் சென்றாலும், அனந்த சயன கோலத்தில் ‘தினத்தந்தி’ பனோரமாவில் பிரசுரித்த பிரமாண்ட படமும், நின்றுகொண்டு அருள்பாலித்த ஆன்மிகமலர் படமும், அடுத்தமுறை அத்திவரதர் தரிசனம் தரும்வரை எண்ணற்ற வீடுகளில் காட்சி தந்துகொண்டே இருக்கும். பெரும்பாலும் பக்தர்களுக்கு நல்ல வசதிகள் செய்து தந்ததிலும், சட்டம்–ஒழுங்கு பராமரிப்பிலும், மிகச்சிறப்பாக ஏற்பாடுகளை கவனித்த மாவட்ட கலெக்டர் பொன்னையாவும், தமிழ்நாடு முழுவதும் இருந்து பாதுகாப்புக்காக வந்த காவல்துறையினரும், உள்ளாட்சித்துறையினரும், மக்கள் நல்வாழ்வுத்துறையினரும், மின்சார வாரியத்தினரும் மட்டுமல்ல, தமிழக அரசின் எந்திரம் அனைத்தும் முழு மூச்சுடன் செயல்பட்டது பாராட்டுக்குரியது. இப்படியொரு கூட்டத்தை இவ்வளவு திறமையாக தமிழ்நாடு சமாளித்தது என்ற பெருமை இந்திய அளவில் இருக்கிறது.

Next Story